Published : 15 Apr 2019 11:19 AM
Last Updated : 15 Apr 2019 11:19 AM
பள்ளிப் பாடங்களைக் கடந்து, விளையாட்டு, வாசிப்பு போன்றவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களை மாணவர்களின் `கனவு ஆசிரியர்’ என்று கூறினால், அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் மோகனுார் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தமிழாசிரியர் ரா.வீரராகவன், பாடத்தைக் கடந்து, பள்ளி மாணவிகளை விளையாட்டுத் துறையில் ஊக்கப்படுத்துவதுடன், மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்கச் செய்து, பல்வேறு பரிசுகளை பெறத் தூண்டுகோலாக விளங்குகிறார்.
விளையாட்டு மட்டுமின்றி, பேச்சு, கட்டுரைப் போட்டி, நடிப்பு போன்றவற்றிலும் பங்கேற்க மாணவியரை ஆர்வப்படுத்தி வருகிறார். இதுபோல், ‘செங்காந்தள் அறிவு சார் நடுவம்’ என்ற வாட்ஸ்-அப் குழுவைத் தொடங்கி, அதில் பள்ளியின் முன்னாள் மாணவியரை இணைத்து, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு போன்ற பயனுள்ள தகவல்களைப் பதிவிட்டும் மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறார். இவரது பணியைப் பாராட்டி கடந்த ஆண்டு தமிழக அரசு ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கிக் கவுரவித்தது.
இதுகுறித்து ஆசிரியர் வீர.ராகவன் கூறும்போது, “தேனி மாவட்டம் கோட்டூர் எனது சொந்த கிராமம். தந்தை செ.ராசகோபால். விவசாயி. அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் பயின்றேன். இதேபோல, கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றேன். கடந்த 2007-ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்று, மோகனூர் மகளிர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியராகப் பொறுப்பேற்றேன்.
இப்பள்ளி மாணவியரின் மேம்பாட்டுக்கு, நம்மால் முடிந்த விஷயங்களைச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் உருவானது. பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் இல்லாததால், அந்தப் பணியை நானே விருப்பப்பட்டு எடுத்து, கூடுதலாக விளையாட்டையும் மாணவிகளுக்கு கற்பித்து வருகிறேன். கல்லூரியில் பயிலும்போது கபடி, தடகள விளையாட்டு வீரராக இருந்ததால், விளையாட்டுகளைக் கற்பிப்பது எளிதாக இருந்தது.
தொடர் பயிற்சி காரணமாக, மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் எங்களது பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். மாநில அளவிலான போட்டியிலும் கலந்துகொள்ள மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறேன்.
பேச்சு, கட்டுரை போட்டிகள்...
ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் பேச்சு, கட்டுரைப் போட்டியில் எங்களது பள்ளி மாணவிகளை பங்கேற்கச் செய்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று வருகின்றனர்.
இதுபோல், வனத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்படும் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் மாணவிகளை பங்கேற்கச் செய்து வருகிறேன். மாணவி வித்யா, தேசிய அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அந்த மாணவிக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மட்டுமின்றி, தமிழ் பாடத்திலும் மாணவிகள் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த செயல்பாடுகள் அடிப்படையில் 2018-ல் தமிழக அரசு ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கியது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 5 ஆசிரியர்களில் நானும் ஒருவன். இதற்கு முழுக் காரணமாக இருந்தவர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் பாக்கியம்.
மாணவிகளின் வாசிப்பை மேம்படுத்தும் வகையில், தீபாவளியன்று புத்தகங்கள் வாங்குவதற்கு மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறேன். மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு விளக்கி, மரம் வளர்க்க மாணவிகள் மத்தியில் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறேன்.
வாட்ஸ்-அப் குழு!
மேலும், ‘செங்காந்தள் அறிவுசார் நடுவம்’ என்ற வாட்ஸ்-அப் குழுவைத் தொடங்கி, பள்ளியின் முன்னாள் மாணவிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது. மேலும், போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளையும் நடத்தி வருகிறேன்.
பள்ளிப் படிப்பைத் தாண்டி, இதுபோன்ற ஊக்குவிப்புகள் மாணவிகளின் எதிர்கால வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக அமையும். கனவு ஆசிரியர் விருது பெற்றமைக்காக, தனியார் தன்னார்வ அமைப்புகள் விருது வழங்கிப் பாராட்டின. இந்த விருதும், பாராட்டுகளும், மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிப்பதாக அமைகின்றன” என்றார்.
அரசுப் பள்ளிகள் என்றாலே மக்கள் மத்தியில் உள்ள தயக்கத்தை மாற்றி, அரசுப் பள்ளி ஆசிரியர்களும் சிறப்பாக கற்பிப்பார்கள், கல்வியைத் தாண்டி விளையாட்டு, கலை, தனித் திறன்களை ஊக்குவிப்பார்கள் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த இதுபோன்ற ஆசிரியர்கள் செயல்பாடுகளே காரணமாக இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளுக்கு ஈடாக மக்களிடம் வரவேற்பைப் பெற வேண்டுமெனில், ஒவ்வொரு ஆசிரியரின் செயல்பாடும் இதுபோல
அமைய வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT