Published : 05 Apr 2019 12:00 AM
Last Updated : 05 Apr 2019 12:00 AM
மக்களவைத் தேர்தல் பிரச்சார களத்தை மேளதாள கலைஞர்கள் விறுவிறுப்பாக்கி வருகிறார்கள். திருநெல்வேலியில் செண்டை மேளம், பேண்ட் வாத்தியம் ஆகியவற்றால் பிரச்சார களங்கள் களைகட்டுகின்றன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரு வாரங்களே பாக்கியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டியிருக்கின்றன.
பிரச்சாரம் சுறுசுறுப்பு
ஆட்டோக்களில் ஒலி பெருக்கிகளை கட்டிக்கொண்டு தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது, மக்கள் கூடும் முக்கிய இடங்கள், கடைவீதிகளில் நடையாய் நடந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்வது என்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பு காட்டி வருகிறார்கள். பெரிய பிரச்சார வாகனங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர்கள் கிராமம் கிராமமாக சென்று சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆதரவு திரட்டுகிறார்கள்.
கூட்டம் முக்கியம்
முக்கிய தலைவர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் மக்கள் கூட்டத்தை கூட்டியாக வேண்டிய கட்டாயத்துக்கு அந்தந்த தொகுதி வேட்பாளரும், மாவட்ட, கிளைக்கழக நிர்வாகிகளும் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு மக்களை ஒரே இடத்தில் திரட்டவும், பிரச்சார இடத்தை களைகட்ட வைக்கவும், முக்கிய தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையிலும் மேளதாளங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
தலைவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்து சேருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே அந்த இடத்துக்கு செண்டை மேளம், பேண்ட் வாத்திய இசைக் கலைஞர்கள் சென்று, இசைக் கருவிகளை முழக்கி பிரச்சார களத்தை சுறுசுறுப்பாக்குகிறார்கள். இதனால், உள்ளூர் இசைக் கலைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. மேளதாளங்களுக்கு தகுந்தாற்போல் கட்சி தொண்டர்கள் கொடிகளுடன் ஆட்டம் போடுவதும் ஆங்காங்கே காணமுடிகிறது.
உள்ளூர் கலைஞர்கள்
திருநெல்வேலியில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களில் செண்டை மேளம், பேண்ட் வாத்தியம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபோல் கடந்த சில நாட்களுக்குமுன் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வந்தபோதும் இத்தகைய இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதை வேடிக்கை பார்க்கவும் கூட்டம் இருந்தது.
திருநெல்வேலியில் தேர்தல் பிரச்சார களத்தை விறுவிறுப்பாக்கி வரும் ஸ்ரீமணிகண்டன் செண்டை மேளம் மற்றும் சிங்காரி மேளம் குழுவைச் சேர்ந்த மா.முருகராஜ் கூறியதாவது:
தேர்தல் காலத்தில் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு கட்சியினர் அழைக்கும்போது காலையிலும், மாலையிலும் செண்டை மேளத்தை முழக்குகிறோம். வழக்கமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு ரூ.15 ஆயிரம் வரையில் கட்டணம் நிர்ணயித்துள்ளோம். பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அதைவிட குறைவாகவே கட்டணம் அளிக்கிறார்கள்.
நெல்லையைச் சேர்ந்தவர்கள்
கடந்த தேர்தல்களின்போது கேரளத்திலிருந்து செண்டை மேள கலைஞர்களை வரவழைத்து இந்நிகழ்ச்சிகளை அரசியல் கட்சியினர் நடத்தினர். தற்போது, உள்ளூரிலேயே செண்டை மேள குழுக்கள் அதிகம் உள்ளன. இந்த குழுக்களை அந்தந்த பகுதி அரசியல் கட்சிகள் அமர்த்திக் கொள்கின்றன. கேரளத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் செண்டை மேளம் கலையை கற்றுவந்து, இங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுத்தருகிறோம். செண்டை மேள இசைக்கருவிகளும் தற்போது இங்கேயே கிடைக்கின்றன என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT