Published : 18 Apr 2019 06:09 PM
Last Updated : 18 Apr 2019 06:09 PM
குடியாத்தம் அருகே திமுக, பாமக நிர்வாகிகள் இடையில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவத்தால் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
குடியாத்தம் அருகேயுள்ள கல்லூர் கிராமத்தில் அமைத்துள்ள வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் திமுக, அதிமுக மற்றும் பாமகவினர் சாவடி அமைத்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று (ஏப்.18) பிற்பகல் வாக்கு சேகரிப்பது தொடர்பாக திமுக, பாமக நிர்வாகிகள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதில் பாமக பிரமுகர்கள் அரவிந்த், ரஞ்சித்குமார், குணசேகரன் ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்கள் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவலால் குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் கல்லூர் கிராமத்துக்கு விரைந்தனர்.
அங்கு கட்சிகள் இடையே ஏற்பட்டிருந்த பதற்றமான சூழலை சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தணித்தனர். மேலும், தாக்குதல் தொடர்பாக சிலரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில், அதிமுக வேட்பாளர் மூர்த்தி, கே.வி.குப்பம் லோகநாதன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாமக பிரமுகர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், பாமக நிர்வாகிகளை தாக்கியதாக திமுக ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி சிலர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்சினை தொரட்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT