Published : 27 Apr 2019 12:00 AM
Last Updated : 27 Apr 2019 12:00 AM
சென்னையில் அமைக்கப்படவுள்ள 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 18 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு சோலார் கருவிகள் நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 2 கோடியே 77 லட்சம் யூனிட் மின்சாரம் பெற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது முதல்கட்ட திட்டத்தில் இருந்தே சோலார் மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி, கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகம், உயர்மட்ட பாதையில் அமைக்கப்பட்டுள்ளள மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் சோலார் கருவிகள் நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. இதுவரையில் 4.1 மெகா வாட் அளவுக்கு சோலார் தகடுகளைப் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்தகட்டமாக 2.5 மெகா வாட் மின்சாரம் உற்பத்திக்கான பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கவுள்ளது.
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்
இந்நிலையில், சென்னையில் தொடங்கப்பட உள்ள 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திலும் உயர்மட்ட பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் சோலார் கருவிகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மாதவரம் - சிறுசேரி தடத்தில் 20 ரயில் நிலையங்களிலும், விவேகானந்தர் இல்லம் - பூந்தமல்லி தடத்தில் 18 ரயில் நிலையங்களிலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் தடத்தில் 41 ரயில் நிலையங்களிலும் அளவுக்கு ஏற்றவாறு 50 கிலோ வாட் முதல் சோலார் மின்உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இதேபோல், மாதவரம், சிப்காட், பூந்தமல்லியில் அமையவுள்ள பணிமனைகளில் தலா 2 ஆயிரம் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு சோலார் கருவிகள் நிறுவப்படவுள்ளன. அதன்படி, மொத்தம் 18 மெகா வாட் அளவுக்கு சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யவுள்ளதாக திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 2.77 கோடி யூனிட்
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அன்றாட மொத்த செலவில் மின்சாரத்தின் பங்கு மட்டும் 40 சதவீதமாகும். இதில், ரயில்கள் இயக்கம், ஏசி பயன்பாடு உள்ளிட்டவை முக்கியமானதாக இருக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களில் சோலார் மின்உற்பத்தி செய்ய முடியும். எனவே, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி, சோலார் கருவிகளை அமைத்து சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல், மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறோம். 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உயர்மட்ட பாதையில் அமையவுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களிலும், பணிமனைகளிலும் சோலார் மூலம் 18 மெகா வாட் அளவுக்கு மின்உற்பத்தி செய்யவுள்ளோம். ஒட்டுமொத்த சோலார் திட்டப்பணிகள் நிறைவடையும்போது, ஆண்டுக்கு 2 கோடியே 77 லட்சம் யூனிட் மின்சாரம் பெற முடியும். இதனால், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொத்த மின்சார செலவில் கணிசமான அளவுக்கு குறைக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT