Published : 07 Apr 2019 11:49 AM
Last Updated : 07 Apr 2019 11:49 AM
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பொதுக்கூட்டப் பிரச்சாரத்தில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி மீது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிப் பேசியதாக தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில், இரண்டு பிரிவுகளில் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து, பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்தார்.
அதில், வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அன்புமணி, ''இங்கு நமது கூட்டணி ஆட்கள்தான் அதிகம். எதிரணியில் உள்ள திமுகவுக்கு கொஞ்சம் ஓட்டு உள்ளது. கூட்டணியினர் கொஞ்சம் இருக்கிறார்கள். கூட்டணிக் கட்சியினருக்கு ஒரு செல்வாக்கும் இல்லை. தேர்தல் அன்று என்ன நடக்கும், பூத்தில் என்ன நடக்கும். நாம் தான் இருப்போம் பூத்தில்.
நம் ஆட்கள் மட்டும்தான் இருப்பார்கள். என்ன புரிகிறதா. அப்புறம் என்ன சொல்ல வேண்டுமா வெளியில்'' என்று கேட்டார்.
இதனால், கள்ள ஓட்டுப் போடுவதை ஊக்குவிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் பொதுமேடையில், தொண்டர்களைப் பார்த்து பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், திமுக சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா, அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு திருப்போரூர் தேர்தல் அலுவலர் ராஜூவுக்கு உத்தரவிட்டார்.
இதன்பேரில், திருப்போரூர் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, தேர்தல் விதிகளை மீறி பொதுக்கூட்டத்தில் பேசியதாக அன்புமணி மீது போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிப் பேசியதாக அன்புமணி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் திருப்போரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT