Published : 28 Apr 2019 12:00 AM
Last Updated : 28 Apr 2019 12:00 AM
கோடை வெயிலால் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல இடங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் குடிநீர் தேடி வன விலங்குகள் அலைகின்றன.
ராஜபாளையம், திருவில்லி புத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக புலி, சிறுத்தை, யானை, மான், மிளா, காட்டெருமை, காட்டு மாடு, காட்டுப் பன்றி, செந்நாய், கரடி உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன. சில அரிய வகை பட்டாம் பூச்சிகளும் இங்கு காணப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் குடிநீர் தேடி வன விலங்குகள் பல்வேறு இடங்களுக்கு அலைகின்றன. குடிநீர் தேடி அடிவாரப் பகுதிக்கு வரும் வன விலங்குகள் தோட்டங்கள், பண்ணைகளில் உள்ள மரங்களையும் விட்டுவைப்பதில்லை. பல இடங்களில் மான்கள் குடிநீர் தேடி ஊருக்குள் வரும்போதும், சாலையைக் கடக்கும்போதும் அடிபட்டு இறப்பது வழக்கமாகி வருகிறது.
வன விலங்குகள் உயிர்ச் சேதத்தையும், பயிர் சேதத்தையும் தடுக்கும் வகையில் மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மலை அடிவாரப் பகுதிகளில் வனத் துறை சார்பில் திருவில்லிபுத்தூர் அம்மன் கோயில், புதுப்பட்டி, குன்னூர், ரெங்காதீர்த்தம், சாப்டூர் பகுதியில் மல்லபுரம், வத்திராயிருப்பு பகுதியில் தொப்பிமலை, ராஜபாளையம் பகுதியில் அம்மன் கோயில், வாலைக்குளம், சாப்பாணி பரம்பு, அய்யனார் கோயில், தேவியாறு பகுதிகளிலும், பிள்ளையார் நத்தம், தொட்டியபட்டி பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளுக்கான குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றில் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் அடிவாரப் பகுதிகளில் உள்ள நீர்த் தேக்கங்களில் மழையால் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளன. அடர்ந்த வனப்பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் தேடி அடிவாரப் பகுதிகளுக்கு வனவிலங்குகள் வரத் தொடங்கியுள்ளன.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் தற்போது வறட்சி நிலவுகிறது. அடர்ந்த மற்றும் உச்சிப் பகுதியில் வசித்து வந்த விலங்குகள் தண்ணீருக்காக அடிவாரப் பகுதிக்கு வருகின்றன. குறிப்பாக யானைகள், காட்டெருமைகள், மான்கள், செந்நாய்கள், வரையாடுகள் அதிகம் வருகின்றன. அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் அருந்தும் வன விலங்குகள் குறிப்பிட்ட பரப்பளவிலேயே சுற்றி வருகின்றன எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT