Last Updated : 17 Apr, 2019 05:21 PM

 

Published : 17 Apr 2019 05:21 PM
Last Updated : 17 Apr 2019 05:21 PM

ஆண்டிப்பட்டியில் அமமுகவினர் 4 பேர் கைது; 156 பேர் மீது வழக்கு: தேர்தலை ரத்து செய்ய சதி செய்வதாக நிர்வாகிகள் கொந்தளிப்பு

ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ரூ.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் ஏழு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர 156 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இது தேர்தலை ரத்து செய்ய அதிமுகவினர் செய்யும் சதி என அமமுகவினர் கொந்தளிப்புடன் தெரிவிக்கின்றனர்.

ஆண்டிப்பட்டி அமமுக.அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கட்சியினர் அதிகாரிகளைத் தாக்க முயலவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தென்மண்டல ஐஜி.சண்முகராஜேஸ்வரன், கலெக்டர் பல்லவிபல்தேவ், எஸ்பி.பாஸ்கரன் உட்பட பலர் நேரில் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ரூ.1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அமமுக மாவட்ட துணைத் தலைவர் பழனி, நிர்வாகிகள் சுமன், மது, பிரகாஷ்ராஜ் ஆகியோரைக் கைது செய்து ரிமாண்ட் செய்தனர்.

இவர்கள்மீது 147-சட்டவிரோதமாக கூடுதல், 294-அசிங்கமாக பேசுதல், 332-அரசு ஊழியர்களின் கடமையைச் செய்ய விடாமல் தடுப்பது, 307-கொலை மிரட்டல், 353, வன்முறையில் ஈடுபடுதல், 395-கூட்டுச்சதியில் ஈடுபடுதல், 506-ஆயுதங்கள் இல்லாமல் தாக்க முயற்சித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 156 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் லோகிராஜன், திமுக சார்பில் மகாராஜன், அமமுக சார்பில் ஜெயக்குமார் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தலை ரத்து செய்ய சதி

இந்நிலையில், ஆண்டிப்பட்டியில் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இது குறித்து ஆண்டிப்பட்டி அமமுகவினர், தொகுதியில் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. எம்.எல்.ஏ..க்களின் பலம் குறைந்தால் ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளதால் ஆளுங்கட்சியினர் திட்டமிட்டே இத்தொகுதி இடைத்தேர்தலைத் தடுக்க இவ்வாறு சதி வேலையில் ஈடுபடுகின்றனர் என குற்றம் சாட்டுகின்றனர்.

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், "ஆண்டிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்குச் சொந்தமான வணிக வளாகத்தில்தான் அமமுக அலுவலகம் செயல்பட்டுவந்தது. மேலும் இந்த வணிக வளாகத்தின் உரிமையாளர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில்  நாங்கள் எப்படி இங்கு பணத்தை அங்கு வைத்திருக்க முடியும். இது எல்லாமே அதிமுக.வினரின் திட்டமிட்ட சதியாகும். எங்கள் மீது பழி சுமத்த இதுபோன்று  நாடகம் நடத்தி வருகின்றனர். தோல்வி பயத்தால் அதிமுக செய்த திட்டமிட்ட சதியாகும். இதனால் எங்கள் தேர்தல் பணியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x