Last Updated : 14 Apr, 2019 09:50 AM

 

Published : 14 Apr 2019 09:50 AM
Last Updated : 14 Apr 2019 09:50 AM

தமிழர் பண்பாடு பாரம்பரியத்துக்கு கிடைத்த வெற்றி!- மனம் திறக்கும் `ராம்ராஜ் நாகராஜ்

இந்திய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்பிஏ மாணவர்களிடையே பேச அழைத்திருந்தார்கள். புத்திசாலி மாணவர்களான அவர்களிடம், `உங்கள் லட்சியம் என்ன?' என்று கேட்டேன். அனைவரும் ‘படிப்பு முடிந்து, நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கும் வேலைக்குப் போக வேண்டும்' என்றார்கள். யாருமே சொந்தமாக தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்று கூறவில்லை. காரணம்,  தோல்வியை சந்திப்பதில் அவர்களுக்கு பயம் இருந்தது. தோல்விக்கும், அவமானத்துக்கும் பயந்து ஒதுங்கினால், நாம் வெற்றியை சந்திக்கவே முடியாது. தனிப்பட்ட முறையில் நான் சந்தித்த அவமானங்களும், தோல்விகளுமே எனக்கு ஏணிப்படிகளாக இருக்கின்றன" என்கிற நாகராஜின் மார்க்கெட்டிங் உத்திகள், கல்லூரிகளில் படிக்க முடியாத வெற்றிக்கு வழிகாட்டும் பாடங்கள்.

வேட்டி உடுத்துவது நாகரிகம் இல்லை என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த காலத்தில், வேட்டி கட்டியவர்களை மதிப்புக்குரியவர்களாக மாற்றிய  பெருமைக்குரியவர் நாகராஜ்.

"ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நண்பர்களுடன் போயிருந்தேன். என்னைத் தவிர அனைவரும் பேண்ட்-சட்டை அணிந்திருந்தார்கள். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்த காரணத்தால்,  என்னை மட்டும் செக்யூரிட்டி உள்ளே விட மறுத்துவிட்டார். நிர்வாக அளவில் பேசிப் பார்த்தும் பலனில்லை. ‘வேட்டி கட்டினால் எங்கள் ஹோட்டலில் நுழைய முடியாது’ என்று தடுத்து, என்னை வெளியே அனுப்பினார்கள். வேட்டியைத் தவிர வேறு உடையை உடுத்துவதில்லை  என்ற எனது கொள்கையை விளக்கிய பிறகும், உள்ளே போக அனுமதிக்கவில்லை. அவர்கள் என்னை அவமானப்படுத்தவில்லை. நம் பாரம்பரியத்தை அவமானப்படுத்தியதாக உணர்ந்தேன்.

அந்த ஹோட்டலின் வாயிலில் இருந்த ஒரு மரத்தின் நிழலில்  உட்கார்ந்தபடி, இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசித்தேன். புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்ததுபோல, எனக்கு அந்த மரத்தின் அடியில் ஞானம் வந்தது. வேட்டியைப் பற்றிய எதிர்மறையான எண்ணம் மாறாமல், இந்த நிலை மாறாது என்று உணர்ந்தேன். உடனடியாக தமிழகத்தின் முக்கியமான விளம்பர நிறுவனத்தை அழைத்து, வேட்டியை பெருமைப்படுத்தும் விளம்பரம் எடுக்க வேண்டும் என்று சொன்னேன்.

பிரம்மாண்ட விளம்பரப் படம்!

வேட்டிக்கு பிராண்ட் வைப்பதே சாகச செயலாக பார்த்த காலகட்டத்தில், விளம்பரம் எடுக்க வேண்டும் என்றதும், அதை சரித்திர நிகழ்வாகவே பார்த்தனர்.  விளம்பர நிறுவனத்தினரிடம், `வேட்டி உடுத்துவதால் என்னென்ன அவமானங்கள் ஏற்பட்டதோ, அதையெல்லாம் பாசிட்டிவாக மாற்றி, என் அனுபவத்தைச் சொல்கிறேன். அதையே பிரம்மாண்டமான விளம்பரப் படமாக எடுத்துக்கொடுங்கள்' என்று கூறினேன்.

வேட்டி உடுத்துபவர்களைப் பார்த்தால் பாமரர்கள் என்ற எண்ணம் இருக்கிறது. பார்க்க கம்பீரமாகவும், பிரபலமான நடிகராகவும் இருந்த நடிகர் ஜெயராம் அவர்களை விளம்பரத்  தூதராக ஒப்பந்தம் செய்தோம். எந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேட்டி கட்டியதால் என்னை உள்ளேவிட மறுத்தார்களோ, அதேபோன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாயிலில் வேட்டி கட்டிய ஹீரோ இறங்கும்போது, ஹோட்டலின் நிர்வாகிகள் மதிப்புடன் வரவேற்கும்படி காட்சியை அமைத்தோம்.

வேட்டி கட்டிய மனிதருக்கு உதவியாளராக,  படித்த, நவநாகரிக பெண்கள் இருப்பார்கள்.  அவருக்காக, கூட்ட அரங்கில் பல பெரிய மனிதர்கள் காத்திருப்பார்கள். இறுதியில் மதிப்பின் உச்சமாக, ஹோட்டலுக்கு வெளியே இருக்கும் ஒரு யானை, தனது துதிக்கையைத் தூக்கி, வேட்டி கட்டிய ஜெயராமுக்கு சல்யூட் வைக்கும்.

ராம்ராஜுக்கு சல்யூட்...

பொதுவாக யானைக்கு வெண்மை நிறம் ஆகாது என்றும், அந்த நிறத்தில் உடை உடுத்தியவர்களை அது விரட்டும் என்றும் கூறுவார்கள். அப்படிபட்ட யானையே, வேட்டி கட்டினால் மதிப்பளிக்கும் என்ற கருத்தை விளம்பரத்தின் மூலம் மக்கள் மனதில் பதியவைத்தோம். `சல்யூட், ராம்ராஜுக்கு சல்யூட்'  என்று எடுக்கப்பட்ட இந்த விளம்பரத்தின் ஒவ்வொரு காட்சியுமே,  வேட்டி கட்டியவர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைப்  போக்கி, மதிப்பும் மரியாதையும் கிடைப்பதாக காட்சிகளை அமைத்தோம்.  அந்த விளம்பரத்தில் கற்பனையாக அமைத்த அனைத்து  விஷயங்களும், பின்னாளில் என் வாழ்வில் நிஜமாகின.

வேட்டி உடுத்துபவர்களின் அவமானங்களை  போக்க,  ஒரு விளம்பரப் படம் திரையில் போது மானதாக இருந்தது.  ஆனால், நடைமுறையில் மாற்றம் கொண்டுவர 30 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ராம்ராஜ் சார்பாக முதன்முதலில் விளம்பரம் எடுத்தபோது, ஸ்டார் நடிகர்கள், வேட்டி விளம்பரத்தில் நடிக்கத்  தயங்கினர். இன்று தொலைக்காட்சியில் 10  நிமிடத்தில் 5 வேட்டி விளம்பரங்கள் வருகின்றன. பெரிய ஸ்டார் நடிகர்கள் அதில் நடிக்கிறார்கள்.  இப்போதும் டீலர்கள் சந்திப்பை  ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடத்துகிறோம். வேறு இடத்தில் வைத்தால் செலவு குறையும்  என்று பரிந்துரை செய்வார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் வேட்டி கட்டிக்கொண்டு, ஓர் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வருவதும், ஊழியர்கள் அவர்களை வரவேற்று, கூட்ட அரங்குக்கு  அனுப்பி வைப்பதையும் மனதுக்குள் ரசித்துக் கொண்டேஇருக்கிறேன்.

காலத்திற்கேற்ப புதுமைகளைச் செய்யாமல், வெறும் விளம்பரம் மட்டும் எடுத்தால் வெற்றியடைய முடியாது. இளைஞர்கள் ஏன் வேட்டியைக் கட்ட தயங்குகிறார்கள் என்று சர்வே எடுத்தோம்.  இடுப்பில் நிற்காது என்ற கவலையே முதல் தடையாக இருந்தது. வெள்ளை நிறத்தில் பெல்ட் தயாரித்து விற்பனை செய்தபோது, இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெண்மை நிற செல்போன் உறை தயாரித்து விற்பனை செய்தபோது, ஓரளவு வரவேற்பு கிடைத்தது.  வேட்டிக்கான பிரத்யேக தேவைகளை ஆராய்ந்து, வெள்ளை நிற உள்ளாடை,  பனியன்,  கர்ச்சீஃப் என மதிப்பு கூட்டும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டோம்.

பாக்கெட் வைத்த வேட்டி!

`பேண்ட் பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக் கொள்வதைப்போல வேட்டியில் வைக்க முடியாதே' என்று ஆதங்கப்பட்டனர்  வாடிக்கையாளர்கள். வேட்டியில் எப்படி பாக்கெட் வைப்பது என்று குழப்பமாக இருந்தது. பலவிதமான பரிசோதனைகளை செய்து, முதன்முதலாக வேட்டியில் பாக்கெட் வைத்து தயாரித்தோம்.

இளைய தலைமுறை யின் மனநிலை அறிந்து, ‘ஒட்டிக்கோ-கட்டிக்கோ‘ என்ற உத்தியோடு,  ‘வெல்குரோ' வேட்டிகளை அறிமுகப்படுத்தியபோது, அமோக வரவேற்பு கிடைத்தது. வைதீகமான குடும்பங்களில் பஞ்சகட்ச வேட்டியை கட்ட அதிக நேரமாகிறது என்பதால், இளைஞர்கள் கட்ட மறுப்பதாக கவலையுடன் தெரிவித்தனர். பேண்ட்போல உடுத்திக்கொள்ளும் ரெடிமேட் பஞ்சகட்ச  வேட்டியை அறிமுகப்படுத்தினோம்.

ஆரம்பகாலத்தில் குடும்பமாக எங்கேனும் நான் செல்லும்போது,  உறவினர் குழந்தைகள் சிலர், ‘நீங்கள் வேட்டி உடுத்திக்கொண்டு வந்தால், எங்கள் நண்பர்கள் எங்களை கேலி செய்கிறார்கள்’ என்று என்னிடம் நேரடியாகவே சொல்லி இருக்கிறார்கள். நாளைய தலைமுறையின் மனதில் வேட்டியைப் பற்றி தவறான எண்ணம் இருப்பது என்னை வெகுவாகப் பாதித்தது. அந்தப் பாதிப்பில்தான்,  குழந்தைகளே விரும்பி வேட்டி கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், `லிட்டில் சூப்பர் ஸ்டார்'  வேட்டிகளை அறிமுகம் செய்தோம். இப்படி,   குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரது தேவைகளை உணர்ந்து, அதை  பூர்த்தி செய்துகொடுத்தபோது வேட்டி பெருமைமிகு அடையாளமாக மாறியது.

சட்டை போடாத நெசவாளர்கள்!

மனிதனின் உயிரைக் காப்பது உணவு என்றால்,  மானம் காப்பது நெசவு. இன்று  விவசாயிகள், நெசவாளர்கள் இருதரப்பினரின் வாழ்வும் கேள்விக்குறியாகி நிற்கிறது. நான் விற்பனைக்காக பல ஊர்களில் சுற்றித்  திரிந்தபோது, ஒவ்வொரு கடை வாசலிலும், மேலாடை இல்லாமல் நெசவாளர்கள் காத்திருப்பார்கள். பொழுதுசாயும்போது

கடை முதலாளி கூலியைக் கொடுத்து அனுப்புவார். `காலையிலேயே பணத்தைக் கொடுத்தால், அவர்களது நேரம் வீணாகாதே' என்று பலரிடம் கூறியிருக்கிறேன். `உடனே கூலி கொடுத்தா,  அடுத்த கடையில்போய் வியாபாரம் பேசுவார்கள்' என்று பதில் கூறினர். நெசவாளர்களிடம் `ஊருக்கே உடை கொடுக்கிறீர்கள். நீங்க சட்டைப் போட்டு கௌரவமாக வந்தால் என்ன?' என்று கேட்டதற்கு, `அவ்வளவு வசதி இல்லீங்க' என்று சொன்னது, என்னை உலுக்கியது. வளர்ந்த பிறகு, என்னால் முடிந்த மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். ராம்ராஜ் காட்டன் நிறுவனம், வளர்ச்சி நிலையில் இருந்தபோது, நெசவாளர்களிடம் துணி வாங்கிய அடுத்த நிமிடம், பணம் கொடுத்து விடுவதை நிறுவனத்தின் கொள்கை முடிவாக கொண்டுவந்தேன். அடுத்து, சட்டை அணிந்தே வரவேண்டும் என்று நெசவாளர்களை கட்டாயப்படுத்தினேன்.

மீட்டர் இரண்டு ரூபாய் இருந்த காலத்தில், மூன்று ரூபாய் கொடுத்தால், சட்டை அணிந்து வருவதாக சொன்னார்கள். நான் `நான்கு ரூபாய் தருகிறேன். நன்றாக சாப்பிட்டு, நன்றாக உடுத்திக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள்' என்று சொன்னபோது, அவர்களே சிரித்தார்கள். இரண்டு ரூபாய் கொடுத்து மற்றவர்கள் வியாபாரம் செய்யும்போது, நீங்கள் இரண்டு மடங்கு விலைகொடுத்தால், சீக்கிரமே நஷ்டம் வந்து, கடையை மூடிவிடும் நிலை உருவாகும் என்று எச்சரிக்கை செய்தனர். `பொருளை தரமாக உற்பத்தி செய்து கொடுங்கள். மக்கள் ஆதரவு தருவார்கள்'  என்று நம்பிக்கையுடன் கூறினேன். வயிறு நிறைந்தும், மனம் நிறைந்தும் எங்கள்  நெசவாளர்கள் வேலை செய்கிறார்கள். மற்ற நிறுவனங்களைவிட தரமான தயாரிப்புகள் எங்களுக்கு கிடைத்தன.

நெசவாளர்களும்... வாடிக்கையாளர்களும்...

எனக்கு ஏற்பட்ட அவமானமும், நெசவாளர்கள் மீதான அபிமானமும், எனக்கு கடுமையாக உழைக்க உந்துசக்தியாக இருந்தது. இன்று நெசவாளர்களுக்கு வங்கிக் கணக்கை உருவாக்கி, அவர்கள் நேரில் வரவேண்டிய சூழலே இல்லாமல் செய்திருக்கிறோம். `இது எங்கள் நிறுவனம்' என்று நெசவாளர்களும், வாடிக்கையாளர்களும் நினைப்பதால், போட்டிக்கு எத்தனையோ நிறுவனங்கள் வந்தபிறகும், நிலையான வளர்ச்சியை அடைய முடிந்திருக்கிறது. வேட்டிக்கு பெரிய சந்தை இருக்கிறது என்ற நம்பிக்கையை பலருக்கும்  உருவாக்கி இருக்கிறோம்.

ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைந்ததும்,  புதிய இலக்கை தீர்மானிப்பது எங்களின் பலம். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, அனைவரும் வேட்டியை உடுத்திக் கொண்டாட வசதியாக, நான்கு முழ வேட்டியை நூறு ரூபாய்க்கு வழங்க முடிவு செய்தோம். வணிக வளாகங்களில் இருக்கும் திரையரங்குகளில் ஒரு திரைப்படம் பார்க்க ரூ.120  செலவழிக்க வேண்டும். அதுவே,  இணையத்தில் டிக்கட் முன்பதிவு செய்தால் ரூ.150. இந்த நிலையில், ரூ.100-க்கு தரமான வேட்டிகளை விற்பனை செய்தபோது, மக்கள் மகிழ்ச்சியாக பண்டிகையைக் கொண்டாடினர். அப்போது லாபம் இல்லாமல் போகலாம். ஆனால், அந்த மகிழ்ச்சியின் பலன் நமக்கு இரண்டு மடங்காக வந்து சேரும் என்பது என் நம்பிக்கை.

வேட்டிக்கென்று தனி ஷோரூம்கள்...

வேட்டிக்கென்று தனி ஷோரூம் உருவாக்க நினைத்தபோது, பெரிய பிராண்ட் நிறுவனங்களின், நவீன உடைகளை வாங்கவே மக்கள் ஷோரூம் வருவார்கள் என்று  கருத்து இருந்தது. இது வாடிக்கையாளர்களை குறைத்து மதிப்பிடுவதாக நினைத்தேன். இன்று தமிழகத்தில் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என்று வேட்டியைப்  பிரதானப்படுத்தும் ராம்ராஜ் ஷோரூம்   கிளைகள் விரிவடைந்துகொண்டே செல்கின்றன. ஜவுளிக் கடைகளில் துணி வாங்குபவர்களுக்கு  இலவச காலண்டர், பைகள் போன்றவை வழங்கப்படும்.  வாடிக்கையாளர்களை,  வாசகர்களாக மாற்றும் முயற்சியாக, ‘வெண்மை எண்ணங்கள்’ என்ற மாத இதழைத் தொடங்கி, பயனுள்ள எண்ணங்களைப் பரிசாக அளிக்கிறோம்.

வேட்டி தினம் கொண்டாட்டம்!

அன்னையர் தினம், காதலர் தினம், சுற்றுச்சூழல் தினம் என்று விசேஷ நாட்களை உருவாக்கும்போக்கு வந்தபோது,வேட்டியைக் கொண்டாட ஒரு விசேஷ தினம் உருவாக்கும் எண்ணம் தோன்றியது. ஒரு நாள் இல்லாமல், ஒரு வாரமாக இதைக் கொண்டாடுவோம் என்று முடிவு செய்து,  ஜனவரி 1முதல் 7-ம் தேதி வரை வேட்டி வாரமாக அறிவித்துக் கொண்டாடுகிறது  ராம்ராஜ் காட்டன்.

நெசவாளர்கள் வாழ்வில் மலர்ச்சியையும், வாடிக்கையாளர்கள் முகத்தில் மகிழ்ச்சியையும் கொண்டுவருவதே இந்த சிறப்புக் கொண்டாட்டத்தின் நோக்கமாக முடிவு செய்தோம். வேட்டியும் சட்டையும் சேர்த்து ரூ.500-க்கு கிடைக்கும்படி விலையைக் குறைத்தோம். வேட்டி வாரத்தின் சிறப்புகளை மக்கள் உணரும் வகையில் விளம்பரங்கள் செய்து, வேட்டியின் புகழைப் பரவச் செய்தோம்.

தொழில் வளர்ச்சி என்பது, பணம் அதிகம் சேர்ப்பது என்பதாகவே பலரும் புரிந்து வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் வேலைக்கு கிடைக்கும் ஒரு முக்கியமான பலன் பணம். ஆனால், அது மட்டுமே தொழில் வளர்ச்சி ஆகிவிடாது என்கிற தெளிவு இருந்தால்  மட்டுமே,  நிலையான வளர்ச்சியை அடைய முடியும் என்பது என் அனுபவம்.

ஒருமுறை, நெடுஞ்சாலையில் 30 ஏக்கர் நிலம் நல்ல விலைக்கு வந்தது. புதிதாக ஒரு தொழிலகத்தைத் தொடங்கலாம், அல்லது  எதிர்காலத்தில் பலமடங்கு விலையேறக்கூடிய  இடத்தை வாங்கிப்போடலாம் என்ற சூழல் வந்தது. 30 ஏக்கர் நிலம் மூன்றே வருடத்தில் 30 மடங்கு லாபம் தரும் விலைக்குப் போவதாக கூறி, நல்ல வாய்ப்பை தவறவிட்டதாக ஆதங்கப்பட்டார் ஒரு இடைத்தரகர்.

தொழிலாளர்களே முக்கியமானவர்கள்...

நான் புதிதாக ஆரம்பித்த யூனிட்டில், முதலீட்டை  மூன்று வருடத்தில் எடுப்பதே பெரிய சாதனையாக இருந்தது. ஆனால், அதில் ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. ஒன்றுமே செய்யாமல் விலை உயர்ந்த நிலத்தைவிட, ஆயிரம் பேருக்கு வேலை தருவதே எனக்கு மனநிறைவாக இருக்கிறது" என்கிற நாகராஜை ஆசீர்வதிக்கிறார் அவரது குருவான வேதாத்ரி மகரிஷி.

பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் சரியாக கலந்து, காலத்தின் மாற்றத்துடன்  கைகோர்த்து நிற்கிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். நாகராஜின் வெற்றி என்பது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் வெற்றி மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டுக்கும்,  பாரம்பரியத்துக்கும் கிடைத்த வெற்றி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x