Published : 10 Apr 2019 11:15 AM
Last Updated : 10 Apr 2019 11:15 AM
முன்பெல்லாம் சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். இப்போது அது செல்ஃபி-யாக மாறியிருக்கிறது. சேலத்தில் இப்போது புதிதாக செல்ஃபி எடுத்துக் கொள்ள 3 இடங்கள் உள்ளன. இவை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதும் சிறப்புக்குரியது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி தலைமை அலுவலகம், ரயில்வே கோட்ட தலைமை அலுவலகம் ஆகியவைதான் இந்த மூன்று இடங்கள்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைபவர்களுக்கு, ராணுவ தலைமை அலுவலகத்துக்கு நுழைந்தது போன்ற அனுபவத்தை தருகிறது முன்புறம் வைக்கப்பட்டுள்ள ராணுவ பீரங்கி. சோவியத் ரஷ்யாவின் தயாரிப்பான இந்த டி-55 ரக பீரங்கி, 1968-ல் வாங்கப்பட்டு, இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் அதிக அளவில் இந்த ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. அந்தப் போரில் இந்திய ராணுவம் பெருமைக்குரிய வெற்றியைப் பெற்றது.
ராணுவ சேவைக்குப் பின்னர் 2016-ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நிறுத்தப்பட்டிருந்த இந்த பீரங்கி, பின்னர் கோவையில் உள்ள ராணுவ பட்டாலியன் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், சேலத்தில் நடைபெற்ற ராணுவ வீரர்கள் சேர்ப்பு முகாமின்போது, இளைஞர்களை ஊக்கப் படுத்துவதற்காக இந்த பீரங்கி சேலத்துக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவத்தில் சேருவதற்கு வந்த இளைஞர்களை உற்சாகப்படுத்திய இந்த பீரங்கி, தற்போது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தரமாக இடத்தைப் பெற்றுவிட்டது. பீரங்கியை நிறுத்துவதற்கென பிரத்யேக தளம் அமைக்கப்பட்டு, அதில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் டி-55 பீரங்கி, இந்திய ராணுவத்தின் வீரத்தைப் பறைசாற்றுவதால், இங்கு வருவோர் பீரங்கியுடன் ஒரு செல்ஃபி எடுக்காமல் செல்வதில்லை. போரில் வெற்றியைத் தேடித் தந்ததால், பீரங்கியின் குழாய் வானை நோக்கி உயர்ந்த நிலையில் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
இதேபோல, சேலம் மாநகராட்சி தலைமை அலுவலகத்துக்கு வருபவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது இங்கு முகப்பில் வைக்கப்பட்டுள்ள ரோடு ரோலர். இதில் என்ன அதிசயம்? இந்த ரோடு ரோலருக்கு வயது 100-க்கும் மேலாகிவிட்டது. அதுமட்டுமல்ல, இந்த ரோடு ரோலரை இயக்குவதற்கு டீசல் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, நிலக்கரியும், தண்ணீரும்தான். அதாவது, நீராவியால் இயங்கும் ரயிலைப் போன்ற இன்ஜினைக் கொண்டது இந்த ரோடு ரோலர் என்பதுதான் அதிசயம். மாநகராட்சி அலுவலகம் வருவோர், இந்த ரோடு ரோலருடனும் செல்ஃபி எடுக்கத் தவறுவதில்லை.
ரயில் மேடை!
சேலத்தின் இன்னொரு அடையாளமாகத் திகழ்கிறது ஒரு ரயில் மேடை. அரசியல் கட்சியினர் மேடை அமைக்கும்போது, சட்டப்பேரவை, நாடாளுமன்றம், செங்கோட்டை என விதவிதமான வகையில் மேடைகளை அமைப்பார்கள். அதேபோல, சேலத்தில் நிஜ ரயிலை நிறுத்த மேடை அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள சேலம் ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தின் முகப்பில் இது அமைந்துள்ளது. சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள ரயில்வே அலுவலகங்களின் முகப்பில், பழமையான ரயில் இன்ஜின் நிறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த நகரங்களின் வரிசையில் சேலத்தைச் சேர்த்துள்ளது இந்த ரயில் மேடை.
ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தின் முகப்பில், உயரமாக அமைக்கப்பட்ட மேடையின் மீது நிஜமான தண்டவாளப் பாதை அமைக்கப்பட்டு, அதன் மீது நீராவியால் இயங்கும் இன்ஜின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட இரண்டு பெட்டிகள் கம்பீரமாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த இடமே ரயில் நிலையத்தில் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவை, இந்த ரயில் மேடையில் தான் நடத்தப்படுகின்றன. இந்த ரயில் மேடை மட்டுமல்ல, அருகில் உள்ள சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் அருகே ஒரு டீசல் ரயில் இன்ஜினும் நிறுத்தப்பட்டுள்ளது. சேலத்துக்கு வருபவர்கள் இந்த 3 இடங்களில் செல்ஃபி எடுக்கத் தவற மாட்டார்கள் என்று உறுதியாய் நம்பலாம்!
படங்கள்: எஸ்.குருபிரசாத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT