Published : 15 Apr 2019 08:48 PM
Last Updated : 15 Apr 2019 08:48 PM
தேர்தல் பிரச்சாரம் நாளை நிறைவடையும் நிலையில் புதுச்சேரியிலுள்ள பெட்ரோல் பங்க்குகள் நிரம்பி வழிகின்றன. அத்துடன் நாளை முதல் 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் விடுமுறை என்பதால் மதுவாங்கவும் கூட்டம் அலைமோதுகிறது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தைத் தொட்டு, பிரச்சாரமும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பிரச்சாரத்துடன் இருசக்கர வாகனங்களில் வலம் வரும் இளைஞர்களும் அதிகரித்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் இருப்பதால் மாலைக்குப் பிறகு பிரச்சாரம் அதிக அளவில் மும்முரமாக நடக்கத் தொடங்குகிறது. பல பெட்ரோல் பங்க்குகள் மாலை நேரங்களில் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன.
பெட்ரோல் பங்க்குகள் தரப்பில் விசாரித்தபோது, "அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து இளைஞர்களுக்கு பெட்ரோல் போட கூப்பன் தரப்படுகிறது. அதில் குறிப்பிடப்படும் வண்ணத்துக்கு ஏற்பவோ, குறியீடுக்கு ஏற்போ பெட்ரோல் நூறு ரூபாய், இருநூறு ரூபாய் அளவுக்கு போடப்படும்" என்கின்றனர்.
முக்கியக் கட்சிகளும் முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள் பேரணி என பலவற்றை நடத்தத் தொடங்கியுள்ளனர். பிரச்சாரத்தில் வரும் வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடன் ஏராளமான மோட்டார் சைக்கிள்களும் வலம் வருவதால் புதுச்சேரியெங்கும் நெரிசல் முன் எப்போதையும் விட அதிக அளவில் உள்ளது.
தேர்தலையொட்டி நாளை முதல் மூன்று நாட்களுக்கு மதுவிற்பனைக்கு தடை என்பதால் மதுக்கடைகளில் கூட்டம் இன்று அலைமோதுகிறது. பலரும் மதுபாட்டில்களை மொத்தமாக கார்கள், இருசக்கர வாகனங்களில் வாங்கிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT