Published : 13 Apr 2019 12:00 AM
Last Updated : 13 Apr 2019 12:00 AM
பத்தொன்பது வேட்பாளர்கள் களம்காணும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே, அமமுக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் முந்துவது யார் என்பதைத் தீர்மானிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
அதிமுக சார்பில் தமிழக முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, திமுக கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாந்தி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முத்துலட்சுமி உட்பட 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால், தேர்தல் களத்தில் ஐஜேகே, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையேதான் போட்டி நிலவுகிறது.
இத்தொகுதியில், அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சிவபதி, தனக்கு நெருக்கமானவர் என்பதால் தமிழக முதல்வர் பழனிசாமி, இத்தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜகவைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட தலைவர்கள் தொகுதிக்குள் பிரச்சாரம் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்திச் சென்றுள்ளனர். அதிமுகவின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஒருங்கிணைந்து வெற்றிக்கு வியூகம் அமைத்து தேர்தல் பணிகளைக் கவனித்து வருகின்றனர்.
சிவபதி தனது பிரச்சாரத்தின் போது, "பெரம்பலூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியே ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்" எனக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
பாரிவேந்தரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தி.க. தலைவர் கி.வீரமணி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்ட திமுக செயலாளர்கள் கே.என்நேரு (தெற்கு), தியாகராஜன்(வடக்கு), பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் தோழமைக் கட்சியினர் ஒருங்கிணைந்து வியூகம் அமைத்து தேர்தல் களப்பணியாற்றி வருகின்றனர். கடந்த முறை பாஜக அணியில் போட்டியிட்டு 3-வது இடத்தைப் பிடித்த பாரிவேந்தர், இம்முறை எப்படியாவது வெற்றிக்கனியை பறித்தே தீர வேண்டும் எனத் திட்டமிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
"தொகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தி தடையற்ற குடிநீர் விநியோகம் நடைபெற நடவடிக்கை எடுப்பேன். நான் வெளியூர்க்காரன் அல்ல. எனது மூதாதையர்களின் பூர்வீகம் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மால்வாய் கிராமம். எங்களது குல தெய்வக்கோயில் பெரம்பலூரில் உள்ளது. மக்கள் எப்போதும் என்னைச் சந்திக்கும் வகையில் நான் இங்கே விரைவில் குடிபெயர்ந்து வந்துவிடுவேன்.
எனது கல்வி நிலையத்தில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியும், படித்த ஏழை இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பும் வழங்குவேன்" எனக் கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார் பாரிவேந்தர்.
அமமுக வேட்பாளர் ராஜ சேகரனை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பிரச்சாரம் செய்துவிட்டுச் சென்றுள்ளார். தினகரனின் பிரச்சாரத்துக்குப் பிறகு அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளது. அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரான முன்னாள் அரசு கொறடா மனோகர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் திட்டமிட்டு களப்பணியாற்றி வருகின்றனர். கடந்த முறை இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவிய ராஜசேகரன், இம்முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
"காவிரி ஆற்றில் முசிறியிலிருந்து கால்வாய் வெட்டி தாத்தையங்கார்பேட்டை, துறையூர் வழியாக பெரம்பலூர், அரியலூருக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுப்பேன். மழைக்காலத்தில் வீணாக கடலுக்குச் செல்லும் காவிரி நீர் இந்த கால்வாய் வழியாக சென்று வறட்சியான பகுதிகளை சில மாதங்கள் செழுமைப்படுத்தும். இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அரசு மருத்துவக் கல்லூரி அமையவும், கிடப்பில் போடப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்தைக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுப்பேன்" எனக் கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார் ராஜசேகரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT