Published : 05 Apr 2019 12:00 AM
Last Updated : 05 Apr 2019 12:00 AM
சுட்டெரிக்கும் வெயில், அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் காரணமாக சென்னையில் தினமும் 2 லட்சம் ‘வாட்டர் கேன்கள்’ விற்பனையாகின்றன. தேவை அதிகரித்து வருவதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாகப் பொழிந்தது. அதனால் ஆறு, ஏரி, குளங்கள் வறண்டதால், தமிழ்நாட்டில் பரவலாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தாமிரபரணி ஆறு பாயும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள், காவிரி தண்ணீர் கிடைக்கும் 12 மாவட்டங்கள், கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் ஊர்கள் தவிர மற்ற மாவட்டங்களில் மக்கள் பெரும்பாலும் ஆழ்குழாய்க் கிணற்று நீரையே பொதுமக்கள் நம்பியுள்ளனர்.
தற்போது வெயில் சுட்டெரிப்பதால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால், சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களில்கூட ‘வாட்டர் கேன்கள்’ பயன்பாடு அதிகரித்துள்ளது. 20 லிட்டர் ‘வாட்டர் கேன்’ 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தினமும் 2 லட்சம்‘வாட்டர் கேன்கள்’ விற்பனையாவதாக ‘வாட்டர் கேன்’ உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாகவே கோடை காலத்தில் வாட்டர் கேன்கள் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு கொளுத்தும் வெயிலுடன், தேர்தல் பிரச்சாரமும் சேர்ந்து கொண்டதால் ‘வாட்டர் கேன்’ தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் தண்ணீரைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், ‘வாட்டர் கேன்’களின் விலை யும் அதிகரிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது.
இதுகுறித்து கிரேட்டர் தமிழ்நாடு பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் மேனுபேக்ஸரர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜெ.அனந்தநாராயணன் கூறியதாவது:
குடிநீர் விற்பனைக்காக இந்தியதர நிர்ணய நிறுவனத்தின் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே எங்கள் சங்கத்தில் உறுப்பினராக முடியும். தற்போது 400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஒவ்வொருவரும் பொதுப் பணித் துறையில் அனுமதி பெற்று, இந்தியத் தரநிர்ணய நிறுவனம் மற்றும் உணவுபாதுகாப்புத் துறை உரிமம் பெற்று, ஆய்வகம் அமைத்து, அறிவியல் முறைப்படி தண்ணீரைச் சுத்திகரித்து விற்பனை செய்கின்றனர். யாரும் விவசாயக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதில்லை. ஆழ்குழாய் கிணறுகளில் மட்டுமே தண்ணீர் எடுக்கின்றனர். குடிநீர் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை (பேக்கிங் மெட்டீரியல், லேப் கெமிக்கல்), கூலி உயர்வு, இந்தியத் தர நிர்ணய உரிமக் கட்டணம், உணவுப் பாதுகாப்புத் துறை உரிமக் கட்டணம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. இருப்பினும், 20 லிட்டர் கேனில் ரூ.8-க்கு குடிநீர் பிடித்துத் தருகிறோம். அதை வாங்கிச் செல்லும் விநியோகஸ்தர்கள் போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை விலையில் சேர்த்து விற்கின்றனர். ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இருக்கும் வரை 20 லிட்டர்தண்ணீரை ரூ.8-க்கு தர முடியும்.
ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டால், டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து, அதை சுத்திகரித்து விற்கும்போது இதன் விலை ரூ.9 வரை அதிகரிக்கக் கூடும். தரமான குடிநீர் கேனில், எஃப்எஸ்எஸ்ஐ எண், உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் எண், தயாரிப்பாளர் முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
“ஒருபுறம் குடிநீர் தேவை அதிகரிப்பால் ஆங்காங்கே ‘வாட்டர் கேன்’ விலை ரூ.50-ஐ எட்டியுள்ளது. மறுபுறம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் உரிமம் பெறாமல், முறையாகச் சுத்திகரிக்காமல் விற்கப்படும் ‘கேன் வாட்டர்’களால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தேவையான அளவு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT