Published : 26 Apr 2019 10:20 PM
Last Updated : 26 Apr 2019 10:20 PM
குழந்தைகளை கடத்தி பொம்மைகளை விற்பது போன்று விலைபேசி விற்ற செவிலியர் ஒருவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிடிபட்டார். இதுபோன்ற சட்டவிரோத குழந்தை கடத்தல் தத்தெடுப்புக்காக நடக்கிறது. இதன் பின்னணியை பல்வேறு கோணத்தில் அலசும் தொடர் இது.
குழந்தைக் கடத்தல் மிகப்பெரிய வியாபாரமாகி வருகிறது. நேற்றே ஒரு பீஸ் வைத்திருந்தேன் விற்றுவிட்டேன், நாளைக்கு ஒருபீஸ் வருகிறது என்று பொம்மையை விலை பேசுவதுபோன்று அமுதா என்கிற செவிலியர் ஒரு வாடிக்கையாளரிடம் குழந்தையை விலை பேசுகிறார்.
நல்ல குழந்தை என்றால் கொழு கொழுன்னு அமுல்பேபிபோல் 3 கிலோ எடையில் வெள்ளையா ஆண் குழந்தை 4 லட்சம் ஆகும், கருப்பாக இருந்தால் 2.5 லட்சத்தில் முடிக்கலாம் என்கிறார். இவைகளுக்கு பின்னே உள்ள பல காரணங்களை அலசியபோது இதுபோன்ற நபர்களின் முதல்குறி குழந்தையில்லா தம்பதிகள்.
குழந்தையில்லா தம்பதிகள் அதற்கான சிகிச்சையைப் பெற்று குழந்தை பெறலாமே? என்றபோது மருத்துவத்துறையில் குழந்தையின்மை சிகிச்சைக்கு ஆகும் செலவு ரூ.10 லட்சம் என்றால் ரூ.4 லட்சத்தில் அமுல் பேபி கிடைத்தால் யார் குழந்தையாக இருந்தால் என்ன? என்று வாங்கிக்கொள்வார்கள் அல்லவா?
அதுவும், 30 ஆண்டுகாலமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வியாபாரம் செய்கிறேன் என்று அந்த செவிலியர் அமுதா கூறும்போது அவரிடம் குழந்தையை வாங்கத்தானே தம்பதிகள் விரும்புவார்கள்.
குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்படுவதற்கும் குழந்தையின்மைக்கும் முக்கிய தொடர்பு உண்டு, இன்றுள்ள வாழ்க்கை சூழ்நிலையில் குழந்தையின்மை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுகுறித்து டாக்டர் காமராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
குழந்தை கடத்தல், சட்டவிரோத தத்தெடுப்புக்குப்பின் பல காரணங்கள் கூறினாலும், குழந்தையின்மையும், அதற்கு ஆகும் சிகிச்சை செலவும் ஒரு காரணமாக வைக்கப்படுகிறதே?
இன்று இந்தியாவில் 100 தம்பதிகளில் 15 தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பது தற்போதைய நிலை. அது பெரிய சதவீதம். இந்தியாவில் இவ்வளவு ஜனத்தொகை இருந்தாலும்கூட 15 சதவீதத்தினருக்கு குழந்தை இல்லை என்பது சீரியசான விஷயம்.
இதில் 11 சதவீதம் பேருக்கு சாதாரண மாத்திரை, மருந்து சிகிச்சையில் சரியாகிவிடும். மீதியுள்ள 4 சதவீதத்தினருக்குத்தான் உயர் சிகிச்சை தேவைப்படும். உயர் சிகிச்சை என்றால் டெஸ்ட் டியூப் பேபி மற்ற சிகிச்சைகளுக்கு போகவேண்டி இருக்கும்.
தற்போதுள்ள காலக்கட்டத்தில் மத்திய தரவர்க்கத்தினர் இதுபோன்ற சிகிச்சைக்கு எளிதாக செல்கின்றனர். காரணம் பேங்க் லோன், சிகிச்சைக்கு பணம் மாத தவணையில் கட்டிவிடலாம் என்பதால் சிகிச்சைக்கு செல்கின்றனர்.
ஆனால் முன்னர் இப்படி இல்லை, இரண்டாவது கல்யாணம், மூன்று கல்யாணம் என குழந்தைக்காக செய்தார்கள். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. ஆனால் உயர் ரக சிகிச்சை என்றால் டெஸ்ட் டியூப் பேபிஸ் போன்ற சிகிச்சைகள் செலவு அதிகம் பிடிக்கும். டெக்னாலஜி , மெடிசின் அனைத்து வெளிநாடுகளில் வாங்கும் நிலை உள்ளது.
ஏன் இதுப்போன்ற சிகிச்சைகள் செலவு அதிகரிக்கிறது?
காரணம் அடிப்படையில் இந்தியாவில் ஆராய்ச்சி மனப்பான்மை என்பது குறைந்துவிட்டது. இந்தியாவில் காப்பி அடிப்பதைத்தவிர வேறு எதையும் செய்வதில்லை. எந்தவிதமான ஆராய்ச்சியும் இல்லை. அறிவியல் படிக்கும், இளைஞர்கள் கிளர்க் வேலைக்கோ, சினிமா, அரசியல் பக்கம் செல்கிறார்கள்.
பெரிய பெரிய நிறுவனங்கள்கூட ஆராய்ச்சிக்காக ஒரு ரூபாய்கூட செலவழிப்பதில்லை. பெரிய நிறுவனங்கள் என சொல்லக்கூடிய பிரபல தொழிலதிபர்களின் நிறுவனங்கள்கூட பணம் சம்பாதிப்பது எப்படி என்றுத்தான் கவனத்தை செலுத்துகிறார்களே தவிர ஆராய்ச்சிக்காக ஐந்துக்காசுக்கூட செய்வதில்லை.
அரசுகூடவா ஆராய்ச்சிக்கு செலவு செய்வதில்லை?
அரசு ஆராய்ச்சியில் அரசியல் செய்கிறது. அரசியலில் பணம் பார்ப்பது பற்றித்தான் யோசிக்கிறார்கள். ஆராய்ச்சித்துறை பேருக்குத்தான் உள்ளது. சிறிய உதாரணத்துக்கு சொல்லணும் என்றால் சிகிச்சைக்கு நல்ல ரிசல்ட் வேண்டும் என்றால் ஒரு பிளாஸ்டிக் பிளேட்டைக்கூட இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.
அது 200 ரூபாய் ஆகிறது, முட்டாள்தனமான விலை, அதைக்கூட டென்மார்க்கில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.
நினைத்தால் கோமாளித்தனமாக இருக்கு, என்னடா ஒரு பிளாஸ்டிக் பிளேட்டைக்கூட தயாரிக்கும் நிலை இல்லையே என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
சிகிச்சைக்கான அனைத்தையும் வெளிநாட்டிலிருந்துத்தான் இறக்குமதி செய்துக்கொண்டு வருகிறோம். இதெல்லாம் கோமாளித்தனமான வேலை, ஆனால் அதுதான் தற்போது நடக்கிறது.
அரசு குழந்தையின்மை சிகிச்சை மையம் எதுவும் இல்லையா?
அரசு ஏழைகளுக்கு மற்ற சிகிச்சைகளுக்கு கொடுப்பது போன்று டெஸ்ட் டியூப் குழந்தைகள் சிகிச்சை மையம் குறைந்தப்பட்சம் அரசு மருத்துவக்கல்லூரிகளிலாவது வைக்கவேண்டும். ஆனால் இல்லை.
இந்தியாவிலேயே மகப்பேறு துறையில் சிறப்பான எழும்பூர் மருத்துவமனையிலுமா இல்லை?
எங்கேயுமே இல்லை. பேருக்கு சொல்கிறார்கள் ஒன்றிரண்டு வைக்கப்போகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அமைக்கவில்லை. அமைத்தால் நிறைய செலவு ஆகும் என்பதால் செய்யவில்லை.
அரசு குழந்தையின்மை சிகிச்சை மையம் அமைத்தால் ஏழைகளுக்கு செலவில்லாமல் சிகிச்சை கிடைக்கும்தானே?
கிடைக்கும், ஆனால் அங்கேயும் செல்வாக்குமிக்கவர்கள், அதிகாரம் படைத்தவர்கள்தான் பலனடைவார்கள். உதாரணத்துக்கு இந்திய ராணுவத்திலேயே இதுபோன்ற உயர் சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. ஆனால் அவர்கள் 5 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். ஆனால் செல்வாக்குமிக்கவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
குழந்தையின்மை சிகிச்சை எங்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி குழந்தையை சட்டவிரோதமாக வாங்கும் நிலைக்கு தள்ளுகிறது?
செலவுதான் முக்கிய காரணம், சாதாரண தம்பதிகள் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்யணும் என்றால் கஷ்டம்தான். அதிலும் வெற்றிகரமாக சிகிச்சைமுடியுமா? என்றால் அது குறைவுதான். அது வெளிநாட்டிலும் உண்டு.
அதனால் ஒரு லட்சம், 2 லட்சம் செலவு செய்து சிகிச்சை பலனளிக்காவிட்டால் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். மீண்டும் சிகிச்சைக்கு வர விரும்ப மாட்டார்கள். அதற்கு பதில் ஏதாவது குழந்தை எதுவும் கிடைக்குமா? என தேட ஆரம்பித்து விடுவார்கள்.
இரண்டாவது காரணம் ஆண் குழந்தைகள் மீதுள்ள மோகம், எனக்கு 2 பெண் குழந்தை உள்ளது ஆண் குழந்தை இல்லை என கேட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்தியாவில் அப்படி செய்ய தடை உள்ளது என்று திருப்பி அனுப்பி விடுகிறோம். அவர்களும் இதுபோன்று முறைகேடான வழியில் குழந்தைகளை வாங்குகிறார்கள்.
தற்போது இளம் தம்பதிகளுக்கு குழந்தையின்மை அதிகமாக இருக்க வாழ்க்கை சூழல், உணவுப்பழக்கம் காரணமா?
இந்தப்பிரச்சினை உலகம் முழுதும் உள்ளது. நிறைய காரணங்கள் உள்ளன. அது மரபியல் காரணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் உள்ளன. விவசாயத்தில் பூச்சி மருந்து அடிப்பது கடுமையான குழந்தையின்மைப் பிரச்சினையை உருவாக்குகிறது. உணவுப்பொருட்கள், குளிர்பானங்களில் கெட்டுப்போகாமல் இருக்க பூச்சிமருந்து சேர்க்கிறார்கள் அல்லவா அவை கடுமையாக பாதிக்கும். பாட்டிலில் பலமாதம் அடைத்து வைக்கும் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கடுமையாக பாதிக்கும். நூடுல்ஸ் வகைகளிலும் அப்படித்தான்.
அதேப்போன்று வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை குழந்தையின்மையை உண்டுப்பண்ணுகிறது. அது ஆண்களைத்தான் பாதிக்கிறது, அது ஆண் ஆர்மோனை குறைத்துவிட்டு பெண் ஆர்மோனாக மாற்றிவிடுகிறது. உடலில் ஈஸ்ட்ரோஜனை அதிகரித்துவிடும். அது குழந்தைப்பிறப்புக்கான ஆண் உயிரணுக்களை பாதிக்கும். இப்படி சூழல் ஒருபக்கம் காரணம், இது தவிர இயல்பாகவே 10 சதவிகிதத்தினருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கும். இது வரலாற்றின் அனைத்து காலத்திலும் உண்டு.
இப்படி பாதிக்கப்படுபவர்கள்தான் செலவைப்பார்த்து மலைத்துப்போய் இப்படிப்பட்ட சட்டவிரோத தத்தெடுப்பை நோக்கி செல்கிறார்களா?
வேறு சில காரணங்களும் உள்ளது. 2500 குழந்தைகள் பிறந்தால் அவர்களில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை சரியாக இருக்காது. அவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறக்கசெய்யவேண்டும். அதற்கு 10 லட்சம், 15 லட்சம் ரூபாய் வரை ஆகும். அதிக செலவு பிடிக்கும். அதற்கு இதுபோன்ற சில லட்சங்கள் கொடுத்து குழந்தையை வாங்குகிறார்கள்.
1.கர்ப்பப்பை இல்லாத நிலை, 2. ஆண் குழந்தை வேண்டும் என்கிற வெறி, பல முறை ட்ரீட்மெண்ட் எடுத்து பலனடையாதவர்கள் இதை நோக்கி போகிறார்கள் போன்ற காரணங்கள்.
நீர்க்கட்டி, குண்டாக இருத்தல் போன்றவைகள் இன்றைய தினம் முக்கிய பிரச்சினையாக உள்ளதாக கூறுகிறார்களே?
ஆமாம் நீர்க்கட்டிகள் பிரச்சினை, குண்டாவது, ஹார்மோன் பிரச்சினை உள்ளது உண்மைதான். ஆனால் அவைகள் எல்லாம் இன்றைய தினம் சிகிச்சையிலேயே சரி செய்கிறோம். நான் மேற்சொன்ன 3 காரணங்கள்தான் சட்டவிரோத தத்தெடுப்புக்கு காரணமாக நினைக்கிறேன்.
இவ்வாறு டாக்டர் காமராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT