Published : 17 Apr 2019 03:12 PM
Last Updated : 17 Apr 2019 03:12 PM

வேலூரில் தேர்தல் ரத்து: பணப் பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? - நீதிபதிகள் கேள்வி

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று மாலைக்கு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, அத்தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஏ.சி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் ஆஜராகி, "தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு, ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையம் புகார் தொடர்பாக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம். முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அதிகாரம் உள்ளது. ஆனால் தேர்தலை ரத்து செய்ய முடியாது.

ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறிழைத்தால் அவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக ரத்து கூடாது. தேர்தல் ரத்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது. வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் ரத்து மனுதாரரின் அடிப்படை உரிமையைப் பாதிக்கிறது. வாக்குச்சாவடி கைப்பற்றுதல், வன்முறை உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே தேர்தலை ரத்து செய்ய முடியும். தேர்தல் பிரச்சாரம் மாலை ஓய்ந்த பிறகு, இரவு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்" என வாதாடினார்.

அப்போது, வேலூரில் தேர்தலை ரத்து செய்யக் கூடாது என்றால், பணப் பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, சுயேட்சை வேட்பாளர் சுகுமார் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, "கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் நோக்கில் வைக்கப்பட்டதாகத்தான் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், "அப்படியென்றால் அது விநியோகிக்கப்பட வைத்தது இல்லை என்கிறீர்களா?", என கேள்வியெழுப்பினர்.

"விநியோகம் செய்வதற்கு முன்பாகவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக ரத்து கூடாது" என, சுகுமாரன் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, "தேர்தல் ஆணையப் பரிந்துரைக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பரிந்துரைக்கு கையெழுத்து போட்டுள்ளார். வேலூர் செலவினப் பார்வையாளர்களிடமும் அறிக்கை பெறப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. வெறும் பணம் மட்டுமல்லாமல், வாக்காளர் பட்டியலும், பூத் ஸ்லிப் புகைப்படங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய முடிவுகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பது உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது குற்றம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்" என வாதாடினார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ரகசிய ஆவணங்கள் நீதிபதிகளிடம் தாக்கல் செய்யப்பட்டது. வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கான ரகசிய விசாரணை ஆவணங்கள் மற்றும் அறிக்கையை தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தாக்கல் செய்தார். பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும்,மீதம் உள்ளவர்களுக்கு பட்டுவாடா செய்யவே பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வருமான வரித்துறை அறிக்கை அளித்ததாக தேர்தல் ஆணையம் வாதத்தை முன்வைத்தது.

மற்ற தொகுதிகளில் பணப் பட்டுவாடா தொடர்பாக என்ன நிலை என தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை என, ஏ.சி.சண்முகம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை இன்று மாலை 4.30 மணிக்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x