Last Updated : 03 Apr, 2019 06:58 PM

 

Published : 03 Apr 2019 06:58 PM
Last Updated : 03 Apr 2019 06:58 PM

கோபமடைந்த நேருவை ‘கூல் செய்த திருநாவுக்கரசர்

திருச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் திருநாவுக்கரசர் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அரிஸ்டோ ரவுண்டானா அருகில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு நடைபெறும் என கூட்டணி கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காலை 6.40 மணிக்கே திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு அங்கு சென்றார். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள், வேட்பாளர் திருநாவுக்கரசர் என யாரும் இல்லாததால் கே.என்.நேரு கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டார். மேலும், காங்கிரஸ் நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘இதுக்கெல்லாம் வேட்பாளர்தான் சீக்கிரம் வர வேண்டும். ஆனால் நாங்கள் வந்து காத்துக் கொண்டிருக்கிறோம்' என கடிந்து கொண்டாராம்.

கே.என்.நேருவை மையப்படுத் தியே திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார வியூகம் அமைந்துள்ள நிலையில், அவர் கோபித்துக் கொண்டு சென்றதாக தகவல் பரவ, அடுத்த அரை மணிநேரத்துக்குள் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அவசரம், அவசரமாக தேர்தல் அலுவலகம் வந்தனர். அதன்பின் மீண்டும் அங்குவந்த கே.என்.நேரு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு, ஒரு நொடிகூட தாமதிக்காமல் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அனைவரையும் அழைத்துக் கொண்டு பிரச்சாரத்துக்கு புறப்பட்டார்.

‘பிரச்சாரம் தொடங்கிய முதல் நாளிலேயே, கே.என்.நேரு கோபப்படும் நிலை ஆகிவிட்டதே' என திமுக, காங்கிரஸ் கட்சியினரிடம் சலசலப்பு காணப்பட்டது.

இந்த சூழலில் அன்றிரவு பாலக்கரை எடத்தெருவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய திருநாவுக்கரசர், ‘காலை 7 மணிக்கு அலுவலகம் திறப்பு என்றால், கே.என்.நேரு அதற்கு முன்பே வந்து நிற்கிறார். ஆனால், எங்களால் நேர மேலாண்மையை சரியாக கடைபிடிக்க முடியவில்லை. பெரியார் நேர மேலாண்மையை கடைபிடித்தவர். அவரிடமிருந்து வந்த கருணாநிதியை பின்பற்று வதால் இவர்களிடம் நேர மேலாண்மை உள்ளது. நாங்கள் எம்.ஜி.ஆரிடமிருந்து வந்த ஆட்கள். நாங்களெல்லாம் நேர மேலாண்மையை கடைபிடிப்பது சற்று சிரமம். தாமதமாக வந்ததற்கு பொறுத்துக் கொள்ளுங்கள். இதை சில சமயங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியிடமும் கூறியிருக்கிறேன். அவரும் சிரித்துக் கொண்டே விட்டுவிடுவார்' என தன்னுடைய தாமதத்துக்கு ஒரு காரணத்தை விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நானும் வைகோவும் அண்மைக்காலமாக கோபப்படுவதில்லை என்று இங்கு பேசும்போது கூறினார்கள். உண்மைதான். எங்களுக்கு 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. கே.என்.நேருவும் 70 வயதைத் தாண்டிவிட்டால் கோபப்படமாட்டார். இப்போதுகூட, அவரிடம் கோபம் இல்லை. கே.என்.நேருவின் கோபம் ‘பொன்சிட்டு மிளர்வதைப்போல' என்பார்கள். மின்னல்போல வந்துவிட்டு போய்விடும். அதன்பின் அவர் கட்டியணைத்துக் கொள்வார். அப்படித்தான் இப்போதும்' என்றார். இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த கே.என்.நேருவின் முகத்தில் புன்முறுவல் அடங்க நீண்ட நேரம் ஆனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x