Published : 11 Apr 2019 12:00 AM
Last Updated : 11 Apr 2019 12:00 AM

மோடி பிரச்சாரத்தால் உற்சாகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி

`மருதமலை முருகனுக்கு அரோகரா' என்று மழலைத் தமிழில் கோவை பொதுக் கூட்டத்தில் தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, சகட்டுமேனிக்கு எதிர்க்கட்சிகளை விளாசியதுடன், `புதிய வாக்காளர்களே! தேசத்தின் நலனுக்காக, பாதுகாப்புக்காக வாக்களியுங்கள்' என்று வேண்டுகோளும் விடுத்துச் சென்றுள்ளார். மோடியின் பிரச்சாரம் பாஜக-அதிமுக கூட்டணியை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.

கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு என 5 தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

கோவையின் கல்வி, தொழில் வளம், கலாச்சாரம், பண்பாடு, கொஞ்சும் தமிழ் மொழியை சிலாகித்த அவர், `மருதமலை முருகனுக்கு அரோகரா' என்று கூறி தமிழில் பேச்சைத் தொடங்கியபோது கரவொலி காதைப் பிளந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வணக்கம் செலுத்துவதாகக் கூறிய அவர், தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்துகளையும் தெரிவிக்க மறக்கவில்லை.

சாதனையும், விமர்சனமும்..

ஆனால், அதற்குப் பிறகு அவரது பேச்சில் சூடும், காரமும் குறையவில்லை. பாஜகவின் அத்தனை சாதனைகளையும் கச்சிதமாய் பட்டியலிட்டார். குறிப்பாக, நாட்டின் பாதுகாப்புக்கு கவனம் செலுத்துவதை குறிப்பிட்டதுடன், ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் மையம் தமிழகத்தில் அமையும் என்று உறுதியளித்தார்.

தனது பேச்சில் எதிர்க் கட்சியினரையும் வறுத்தெடுத்துவிட்டார். 1998-ல் கோவை குண்டுவெடிப்பின்போது காங்கிரஸ்-திமுக அரசுகள் அலட்சியமாக நடந்துகொண்டதாக குறிப்பிட்ட அவர், தற்போதும் நாட்டின் பாதுகாப்பில் எதிர்க்கட்சி அக்கறையில்லாமல் இருப்பதுடன், பயங்கரவாதிகள், எதிரிகள் மீது மென்மையான அணுகுமுறையைக் கையாள்கிறார்கள் என்றும் பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.

தான் தேசியத்தைப் பற்றிப் பேசுவதை கிண்டல் செய்கிறார்கள் என்று குறிப்பிட்ட மோடி, தேசியம் பற்றி பேசுவது அவ்வளவு பெரிய குற்றமா? என்று கேள்வி எழுப்பியதுடன், தேசியத்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் வங்கிக் கணக்கு வைத்திருப்பதாகவும், 50 கோடி பேருக்கு சுகாதாரத் திட்டம், பல்லாயிரக்கணக்கான கிராமங்களுக்கு மின் வசதி, 42 கோடி பேருக்கு ஓய்வூதியம், 1.50 கோடி குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தந்ததாகவும் குறிப்பிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மறைமுகமாகச் சாடிய அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் விட்டுவைக்கவில்லை.

ஜிஎஸ்டி சரி செய்யப்படும்தொடர்ந்து உள்ளூர் பிரச்சினைகளுக்கு வந்த அவர், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கு பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் எப்போதும் துணை நிற்கும். வரிகளைக் குறைத்து, வரி செலுத்தும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காகத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதாகவும், ஜிஎஸ்டியால் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை சரி செய்யத் தயாராக இருப்பதாகவும் உறுதிஅளித்தார்.

இறுதியில், திமுக-காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கு எதிரானது என்று சித்தரித்த மோடி, அவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல பெண்களை தரக்குறைவாக விமர்சித்ததாகவும் சுட்டிக்காட்டினார். மொத்தத்தில், பிரதமரின் பேச்சு, பாஜக-அதிமுக கூட்டணிக் கட்சியினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. நிச்சயம் இது வெற்றியைத் தேடித் தரும் என பாஜகவினர் நம்புகின்றனர்.

அதேசமயம், “மோடியின் இந்த பிரச்சாரம் எல்லாம் வட மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும். தமிழக மக்களிடம் என்னதான் பிரச்சாரம் செய்தாலும், அதிமுக-பாஜகவுக்கு காத்திருப்பது தோல்விதான்’’ என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x