Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரக் கூட்டத்தில் இருக்கைகளை அப்புறப்படுத்தி, தேர்தல் செலவு கணக்கு எகிறாமல் இருக்க காங்கிரஸார் கண்ணும், கருத்துமாக உள்ளனர்.
மக்களவைத் தொகுதி வேட்பாளர் அதிகபட்சம் ரூ.70லட்சம், சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் அதிகபட்சம் ரூ.28லட்சம் மட்டுமே செலவழிக்க வேண்டு மென, தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
இதனால் வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்கா ணிக்க செலவினத் தேர்தல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.அக் குழுவினர் வேட்புமனுதாக்கல் செய்ததில் இருந்து முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களையும், அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் தலைவர்களையும் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செலவையும் வீடியோ எடுத்து வேட்பாளர் செலவு கணக்கில் சேர்த்து வருகின்றனர். சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் மற்ற தலைவர்களைப் போன்று ஒருசில இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்யாமல், ஊர், ஊராகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இதனால் அவரது செலவு கணக்கும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.
இதனால் செலவுகணக்கு எகிறாமல் இருக்க, காங்கிரஸ் நிர்வாகிகள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். சிங்கம்புணரி அருகே பிரான் மலையில் சிதம்பரம் பிரச்சாரக் கூட்டத்துக்காக 100 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அங்கு வந்த நிர்வாகிகள், தேர்தல் அதிகாரிகள் வருவதற்குள் இருக்கைகளை அப்புறப்படுத்தி மறைத்து வைத்தனர். அதன்பின்பே ப.சிதம்பரம் அங்கு வந்து பிரச்சாரம் செய்தார். இதுபற்றி காங்கிரஸார் கூறுகையில், சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்ப ரத்துக்கு ஆதரவாக அதிகளவில் தலைவர்கள் வந்து செல்கின்றனர். இதனால் செலவு கணக்கு அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT