Published : 06 Apr 2019 12:00 AM
Last Updated : 06 Apr 2019 12:00 AM
ஒரே ஆண்டில் 3,262 ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ள ஐசிஎஃப், உலகின் மிகப் பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலையாக உருவெடுத்துள்ளது. இதுவரை 59 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளது.
இந்திய ரயில்வே துறை 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தினமும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சராசரியாக 2.36 கோடி பேர் ரயில் பயணம் செய்து வருகின்றனர். ரயில்வேக்குத் தேவையான ரயில் பெட்டிகளைத் தயாரிக்க சென்னையில் ஐசிஎஃப், உத்தரப்பிரதேசம் ரேபரேலியில் எம்சிஎஃப், பஞ்சாப் கபுர்தலாவில் ஆர்சிஎஃப் என 3 ரயில் பெட்டிதொழிற்சாலைகள் உள்ளன. இருப்பினும் ஐசிஎஃப் தொழிற்சாலையின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ளரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) கடந்த 1955-ம்ஆண்டு தொடங்கப்பட்டது. பயணிகளின் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்ப அதிநவீன ரயில் பெட்டி, சுற்றுலா, ராணுவத்துக்கான ரயில், மெட்ரோ ரயில் பெட்டி உட்பட 50 வகைகளில் 600 வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ரயில் பெட்டிக்கான கூடுகள் மட்டுமே இங்கு தயாரிக்கப்பட்டன. அதன்பிறகு, மென்மேலும் வளர்ச்சி கண்டுபயணிகளின் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. 1957-ல் 100-வது ரயில் பெட்டியும், 1958-ல்500-வது, 1962-ல் 1000-வது, 2015-ல் 50,000-வது ரயில் பெட்டியும் தயாரிக்கப்பட்டது.
நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வந்த ‘ஐசிஎஃப் வடிவமைப்பு பெட்டி’ மிகவும் பாரம்பரியமானது. அதன்படி, இங்கு மட்டுமே இந்த வகையில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, ரயில்களில் இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. காலத்துக்கு ஏற்ப எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்படுவதால், கடந்த ஆண்டில் நீலநிறப் பெட்டி தயாரிப்பது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, முற்றிலும் எல்எச்பி பெட்டிகள் தயாரிப்புக்கு மாறிவிட்டது. அதன்படி, ஐசிஎஃப் இதுவரை ஒட்டுமொத்தமாக 59 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை புரிந்துள்ளது.
2018-19-ம் நிதியாண்டில், 6 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரிக்க இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கையும் தாண்டி 6,037 ரயில் பெட்டிகள் 3 தொழிற்சாலைகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய நிதியாண்டில் தயாரிக்கப்பட்ட, 4,470 ரயில் பெட்டிகளுடன் ஒப்பிடும்போது, 35 சதவீதம் அதிகம். சீன நிறுவனங்கள் ஆண்டுக்கு 2,600ரயில் பெட்டிகளைத் தயாரிக்கின்றன. இதை, இந்த ஆண்டு பிப்ரவரியில் சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலை 2,919 பெட்டிகள் தயாரித்து முறியடித்தது. கடந்த நிதி ஆண்டில் ஐசிஎஃப்-பில் மட்டும் பல்வேறு வகைகளில் மொத்தம் 3,262 ரயில்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால், உலகில் அதிக ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையாக ஐசிஎப் உருவெடுத்துள்ளது.
மேலும் முதன்முறையாக, இன்ஜின் இல்லாமல் இயங்கும் இந்தியாவின் அதிவேக ரயிலான ‘வந்தேபாரத்’ (ரயில் 18)-ஐ தயாரித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ஐசிஎஃப். கடந்த சில ஆண்டுகளாக ரூ.900 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, விரைவில் ஆண்டுக்கு 3,750 ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் நிறுவனமாக ஐசிஎஃப்-ஐ மாற்ற இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT