Published : 27 Apr 2019 03:38 PM
Last Updated : 27 Apr 2019 03:38 PM
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை ஃபானி புயலாக மாற உள்ள நிலையில், அந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை கிடைக்குமா அல்லது கடுமையாக வெயிலைக் கொண்டுவருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைபெற்றிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று, வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது, தற்போது வடதமிழக கடற்கரையில் இருந்து சுமார் 1150 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது. இது, இன்று மாலைக்குள் புயலாக வலுப்பெற்று, நாளை தீவிர புயலாகவும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் ஏப்ரல் 30-ம் தேதி வடதமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழையைப் பொறுத்தவரையில், வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 30 மற்றும் மே 1-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், வங்கக்கடலில் உருவாகும் இந்தப் புயலுக்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபானி புயல், தமிழகத்தில் இருந்து 300 கி.மீ. தொலைவாகக் கடந்து செல்லும். இதனால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், மழை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சில மாதிரிகள் கூறுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் எழுதிவரும் பிரதீப் ஜானிடம், ‘இந்து தமிழ் திசை’ (ஆன்லைன்) சார்பில் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர் அளித்த விளக்கம்...
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக அடுத்த ஒருநாளில் புயலாகவும், அதிதீவிரப் புயலாகவும் மாறக்கூடும். என்னைப் பொறுத்தவரை தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று தொடக்க நிலை ஆய்வுகள், மாதிரிகள் (மாடல்கள்) தெரிவித்தன. ஆனால், தற்போது புயலின் நகர்வைப் பார்க்கும்போது, தமிழகக் கடற்கரையோரத்தில் இருந்து 300 கி.மீ. தொலைவில் கடந்து செல்லவே வாய்ப்புள்ளதாகப் பெரும்பாலான மாடல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஃபானி புயல், தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை.
உண்மையில், தமிழகத்துக்கு அருகே 150 கி.மீட்டருக்குள் புயல் கடக்கும் பட்சத்தில் மட்டும்தான் நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், 300 கி.மீ. தொலைவில் புயல் கடந்து செல்லும்போது, மழை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. மாறாக, மேற்குத்திசையில் இருந்து ஒட்டுமொத்த ஈரப்பதத்தையும் வெப்பத்தையும் புயலானது இழுத்துக்கொண்டு கடக்கத் தொடங்கும். அப்போது, வெயிலின் தாக்கம் இயல்புக்கும் அதிகமாக இருக்கும். மேலும், கடற்கரையில் இருந்துவரும் கிழக்குக் காற்றும் நிலப்பகுதிக்கு வராது என்பதால், வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
அதனால் இப்போதுள்ள மாடல்களின் நிலவரப்படி, ஃபானி புயலால் முழுமையாக மழை கிடைக்கும் என்று கூறிவிட முடியாது. நாளைதான் தெளிவாகக் கூறமுடியும். தமிழகத்துக்கு 150 கி.மீ. தொலைவுக்குள் ஃபானி புயல் கடந்து சென்றால், நிச்சயம் மழைபெய்ய வாய்ப்பு உண்டு.
தமிழகக் கடற்கரையோர மாவட்டங்கள், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் ஆகிவற்றிலும் மழை பெய்யக்கூடும். மழை எந்த அளவு இருக்கும், எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும், மழை வருமா? வராதா? என்பதைப் பற்றி நாளைதான் தெளிவாகக் கூறமுடியும்.
சில உதாரணங்களைக்கூட கூறமுடியும். கடந்த 1998-ம் ஆண்டு மே 30-ம் தேதி உருவான புயல் தமிழகத்துக்கு அருகே வந்து திரும்பிச் சென்றதால் ஏற்பட்ட வெயிலின் தாக்கத்தால், இந்தியாவில் 2,500 பேர் இறந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் 44.1 டிகிரி அதிகபட்சமாக இருந்தது.
அதேபோல், கடந்த 2003-ம் ஆண்டு மே 31-ம் தேதி தமிழகத்துக்கு அருகே வந்த புயல் பர்மா நோக்கிச் சென்றது. அப்போது ஏற்பட்ட வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலையால், இந்தியாவில் ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இப்போதுள்ள நிலையில், பெரும்பாலான மாடல்கள் தமிழகத்தில் இருந்து 300 கி.மீ. அப்பால் புயல் கடந்து செல்லவே வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன. ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த உக்மெட், உக்மெட்டை அடிப்படையாகக் கொண்ட என்சிஎம்டபிள்யுஆர்எப் (NCMWRF) ஆகியவை மட்டும் தமிழகத்துக்கு அருகே ஃபானி புயல் வரும் என்று கூறுகின்றன. மற்ற மாடல்களான ஐரோப்பாவின் ஈசிஎம், அமெரிக்காவின் ஜிஎப்எஸ், கனடாவின் சிஎம்சி, ஜெர்மனியின் ஐகான்,ஆஸ்திரேலியாவின் பாம் உள்ளிட்டவையே எதிர்மறையாகத் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT