Published : 08 Apr 2019 12:00 AM
Last Updated : 08 Apr 2019 12:00 AM
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து கண்காணிக்க 10 ஐஏஎஸ்அதிகாரிகளை பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் இயலாமை காரணமாக தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்ததை தொடர்ந்து, அவர்களின் வசதிக்காக வாக்குச் சாவடிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை, தேர்தல்அறிவிப்புக்கு முன்பே, நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் விவரங்களை தேர்தல் ஆணையம் சேகரித்துள்ளது.
இந்த தேர்தலில் முதல்முறையாக, வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துதேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதில், திருவள்ளூர் (தனி), வட சென்னை, தென் சென்னை ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு தமிழ்நாடு மின்னாளுமை முகமை மேலாண் இயக்குநர் சந்தோஷ் கே.மிஸ்ரா, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர் ஆகிய தொகுதிகளுக்கு மாநில திட்ட ஆணைய உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி ஆகிய தொகுதிகளுக்கு தமிழக மின்சாரநிதி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு நிறுவன தலைவர் சந்திரகாந்த் பி.காம்ப்ளி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் ஆகிய தொகுதிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பி.ஜோதி நிர்மலாசாமி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி(தனி) கோவை ஆகிய தொகுதிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் சி.விஜயராஜ்குமார் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி ஆகிய தொகுதிகளுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை ஆகியதொகுதிகளுக்கு தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகத் தலைவர் பி.சந்தரமோகன், நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை ஆகிய தொகுதிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் ஏ.கார்த்திக், தேனி,விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளுக்கு தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஆணையர் ராஜேந்திரகுமார், தென்காசி(தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுக்கு பொருளாதாரம் மற்றும்புள்ளியியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் பணி குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி அமைந்துள்ள வளாகத்தின் நுழைவு வாயில் முதல் வாக்குச் சாவடி வரை தடையின்றி செல்லும்வகையில் உரிய இடத்தில் சாய்வுதளங்களை அமைத்து சீரானபாதையை ஏற்படுத்த வேண்டும்.
சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கைப்பிடிகள் அமைக்க வேண்டும். உரிய வழிகாட்டி பதாகைகளை வைக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த கழிவறைகள், குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். சக்கர நாற்காலி, அதை இயக்குவதற்கான உதவியாளர் இருக்க வேண்டும். வேட்பாளர்களின் பட்டியலை பிரெய்லி முறையில் அச்சிட்டு வைக்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பதற்காக முதல் முறையாக பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இது தொடர்பாக மற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு அமைப்பான ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் எஸ்.அண்ணாமலை கூறும்போது, “மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் பார்வையாளர்களை நியமித்த தேர்தல் ஆணையத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது. இந்த பார்வையாளர்கள், சரியான அளவீட்டில்சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதா, அவற்றுக்கு கைப்பிடிகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்”என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT