Published : 25 Apr 2019 10:09 AM
Last Updated : 25 Apr 2019 10:09 AM
கொங்கு மண்டலத்தில் தொழில்நுட்ப ஜவுளித் தொழிலை (டெக்னிக்கல் டெக்ஸ்டைல்) அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் பல்வேறு ஜவுளித் தொழில் துறையினரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தொழில்நுட்ப ஜவுளித் தொழில் தேசிய முதலீட்டாளர் மாநாடு கோவையில் நேற்று நடைபெற்றது.
இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக முக்கியத் துறையாகவும், அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாகவும் இருப்பது ஜவுளித் தொழில். எனினும், சர்வதேச போட்டி, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இத்தொழிலில் சில பாதிப்புகள் உள்ளன. இந்த நிலையில், ஜவுளித் துறையின் ஓர் அங்கமான தொழில்நுட்ப ஜவுளித் தொழிலை மேம்படுத்தி, ஜவுளித் துறையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட மாநிலங்களில் தொழில்நுட்ப ஜவுளித் தொழில் வேகமடைந்துள்ள அளவுக்கு, தமிழகத்தில் இன்னும் வேகமடையவில்லை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில், தொழில்நுட்ப ஜவுளித் தொழிலை மேம்படுத்தும் வகையில், இந்திய தொழில்நுட்ப ஜவுளித் தொழில் சங்கம் (ஐடிடிஏ), இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (ஐடிஎஃப்), தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) ஆகியவை இணைந்து, கோவையில் முதல்முறையாக தேசிய அளவிலான தொழில்நுட்ப ஜவுளித் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தின.
அதிக வாய்ப்புகள்!
இதுகுறித்து ஐடிடிஏ தேசிய தலைவர் கே.எஸ்.சுந்தரராமன், ஐடிஎஃப் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் ஆகியோர் கூறும்போது, “ஜவுளித் துறையில் மதிப்பு கூட்டப்பட்ட துணிகள், புதிய கண்டுபிடிப்புகள், போட்டியில்லா தயாரிப்புகள், வாடிக்கையாளர் விரும்பும் சொகுசான பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நிறுவனங்கள்தான் எதிர்காலத்தில் மாபெரும் வெற்றி பெறும்.
இந்த வகையில், தொழில்நுட்ப ஜவுளித் தொழிலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வழக்கமான ஆடைகளைத் தாண்டி, மருத்துவம், ராணுவம், தீயணைப்பு, காவல், கட்டுமானம், ஆகாயப் போக்குவரத்து, விளையாட்டு, கனரகத் தொழில் என பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஆடைகளை உற்பத்தி செய்வதே தொழில்நுட்ப ஜவுளித் தொழிலாகும். ஃபிளக்ஸ் போர்டு, மருத்துவமனைகளில் உபயோகிக்கும் துணிகள், விமானங்களில் பயன்படுத்தப்படும் துணிகள், சாலை அமைக்கும்போது பயன்படுத்தப்படும் துணிகள் முதல், விண்வெளி வீரர்களின் ஆடைகள், குண்டுதுளைக்காத ஆடைகள் வரை தயாரிப்பதே தொழில்நுட்ப ஜவுளித் தொழிலாகும்.
எனினும், இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளித் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. இந்தத் தொழிலின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கும் உற்பத்தித் திறனிலும், நுகர்விலும் பின்தங்கிய நிலையிலேயே இவை உள்ளன. பல தொழில்நுட்ப ஜவுளிகளை வெளிநாடுகளில் இருந்து தருவிக்கும் நிலையே உள்ளது. இந்த நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.கொங்கு மண்டலத்தில் உள்ள வசதிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை, தொழில்நுட்ப ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு அனுகூலமாக உள்ளன. எனவேதான், கோவையில் தேசிய முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியுள்ளோம்.
குறைந்த முதலீடு போதும்...
நூற்பாலைகள் போன்றவற்றை உருவாக்கும்போது, அதிக முதலீடுகள் தேவை. ஆனால், தொழில்நுட்ப ஜவுளி தொழில் தொடங்க ரூ.3 முதல் ரூ.5 கோடி இருந்தாலே போதுமானது. இந்த தொழில் தொடர்பான பல புதிய திட்டங்கள், ஐ.டி.டி.ஏ.விடம் உள்ளது. இதை தொழில்முனைவோருக்கு வழங்கத் தயாராக இருக்கிறோம். முதலீடுகள், சந்தை வாய்ப்பு, தொழில்நுட்ப ஆலோசனை என அனைத்தும் வழங்குவோம். இந்த துறையில் 10 மடங்கு உற்பத்தியை அதிகரித்தால்மட்டுமே, சர்வதேச அளவில் போட்டியிட முடியும். மேலும், நிறைய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கலாம்.
இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு இதில் மிகுந்த கவனம் செலுத்தி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கருத்தரங்குகள், கலந்தாய்வுக் கூட்டங்களும் நடத்தும். இத்துறையில் தடம் பதிக்க விரும்பும் தொழில்முனைவோருக்கு அத்தனை உதவிகளையும் ஐ.டி.எஃப். செய்யும்” என்றனர்.
மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய மத்திய அரசின் ஜவுளித் துறை செயலர் ராகவேந்திரா சிங், “மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுடனும் கலந்துபேசி, அந்தந்த துறைகளுக்குத் தேவையான ஆர்டர்களைப் பெற்றுத்தர உதவுவோம். தொழில்நுட்ப ஜவுளித் தொழிலை ஊக்குவிக்க மத்திய அரசு தயாராக உள்ளது” என்றார்.
மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன பொது இயக்குநர் ஏ.கே சிங் பேசும்போது, “ஜவுளி நிறுவனங்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் தேசத்துக்கும், சமுதாயத்துக்கும் உதவுவதுடன், தொழில் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்” என்றார்.
தென்னிந்திய மில்கள் சங்கத் தலைவர் எம்.நடராஜ் பேசும்போது, “தொழில்நுட்ப ஜவுளித் துறையில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொழில்முனைவோர் இதில் கவனம் செலுத்தி, மதிப்புமிக்க பொருட்களைத் தயாரிக்க முன்வர வேண்டும்” என்றார்.
ஜப்பான் தொழில்முனைவோர்!
இதில், தொழில்நுட்ப ஜவுளித் துறையில் முன்னிலை வகிக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப ஜவுளித் துறையினர் நிஸ்ஸான்கென், மெஸ்சி பிராங்பர்ட் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய தொழில்முனைவோரை ஜப்பானுக்கே அழைத்துச் சென்று, தொழில்நுட்ப உதவி, ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். வட மாநிலங்களில் தொழில்நுட்ப ஜவுளித் தொழிலை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் தொழில்முனைவோரும், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இந்த மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஜவுளித் தொழில்முனைவோர், அரசுத் துறையினர், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதிய தொழில், வணிக வாய்ப்புகளை அணுகுவதில் முன்னணியில் உள்ள கொங்கு மண்டலம், தொழில்நுட்ப ஜவுளித் தொழிலில் பிரகாசித்து, தென்னிந்திய அளவில் தொழில்நுட்ப ஜவுளித் தொழிலின் முன்னோடியாக மாற வேண்டுமென்பதே ஜவுளித் துறையினரின் எதிர்பார்ப்பு.
தொழில்நுட்ப ஜவுளி துறையின் பிரிவுகள்!
தொழில்நுட்ப ஜவுளிகள் 13-க்கும் மேற்பட்ட வகையாக தொகுக்கப்பட்டுள்ளன. அக்ரோ டெக் (மீன்வலை, நிழல்மறைப்பு ஜவுளிகள், பறவை தடுப்புவலை), பில்டு டெக் (கூடாரத்
துணி, தரை, சுவர் விரிப்பான், மூடுஉறை), குளோத் டெக் (தையல் நூல், இணைப்பான், மீள் சக்தியுள்ள குறுகிய துணிகள்) ஜியோ டெக் (மண் வலை, குழாய், வடிகட்டும் மற்றும் அதிக வலுவுள்ள தொழில்நுட்ப துணிகள், கூட்டமைப்பு பொருள்) ஹோம் டெக் (நிரப்பு இழை, திணித்து வைக்கப்பட்ட பொம்மை, மறை திரை, கிருமிநாசினி படுக்கை, தலையணை, அதிவேக நீர்உறியும் துண்டுகள், தண்ணீர் விலக்கும் மேஜை விரிப்புகள், இன்டோ டெக் (கன்வேயர்பெல்ட், பேட்டரி செப்பரேட்டர்), மெடி டெக் (குழந்தை டயாப்பர், தூய்மையான கைக்குட்டை), சர்ஜிக்கல் டெக் (செயற்கை உடலுறுப்புகள், சுவாசிக்கும் முகத்திரை), ஓகோ டெக் (நீர், காற்றுவடிகட்டி), மொபைல் டெக் (இருக்கை, காற்றுப்பை, இருக்கை மூடி), பேக் டெக் (பழம், தானிய உறை), புரோ டெக் (குண்டு துளைக்காத ஜவுளிகள், நெருப்பு விலக்கும் ஜவுளிகள், கையுறை), ஸ்போர்ட் டெக் (விளையாட்டு துணிகள், பாராசூட் துணிகள், தூங்கும் கூடாரம்).
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதிக அளவில் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி செய்தால், ஏற்றுமதி வர்த்தகத்தையும் அதிகரிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT