Published : 02 Apr 2019 12:00 AM
Last Updated : 02 Apr 2019 12:00 AM

மகனை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம்: சிவகங்கை தொகுதியில் முடங்கிய ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தனது மகனுக்காக சிவகங்கை தொகுதியில் இருந்து வெளியேற முடியாமல் தொகுதிக்குள்ளேயே முடங்கியுள்ளதாக அவரது கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இருந்து 7 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ப.சிதம்பரம். இவர் மத்திய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். ப.சிதம்பரத்தின் புள்ளி விவரப் பேச்சு, தேர்தல் சமயங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளுக்கும் கடந்த காலங்களில் உதவியுள்ளது. அதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைந்தபோதெல்லாம் ப.சிதம்பரம் தெரிவித்த யோசனைகளுக்கு கருணாநிதி முக்கியத்துவம் அளித்து வந்தார். டிவி போன்ற இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பு ப.சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்திய பின்பே தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிட்டார்.

தேர்தல் களத்தில் புள்ளி விவரங்களோடு பிரச்சாரம் செய்து எதிரணியினரை ப.சிதம்பரம் திணறடிப்பார். அவ்வாறு சுற்றிச்சுழன்று தேர்தல் பிரச்சாரம் செய்த ப.சிதம்பரம், கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி ஏற்படாததால், தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தனது மகன் கார்த்தியை சிவகங்கையில் போட்டியிட வைத்து பிரச்சாரம் செய்தார். தற்போதைய தேர்தலில் திமுக, கம்யூ னிஸ்ட், விடுதலைச் சிறுத் தைகள் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி பலத்தோடு தனது மகனை மீண்டும் சிவகங்கையில் களமிறக்கியுள்ளார். காங்கிரஸுக்குள் எழுந்த பலத்த எதிர்ப்பைச் சமாளித்து நீண்ட முயற்சிக்குப் பிறகே தனது மகனுக்கு அவரால் சீட் பெற முடிந்தது. இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது எனக் கருதி, சிவகங்கை தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டுமே தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். கூட்டணிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸின் பிற வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்கு அவர் செல்லவில்லை. இதனால் கூட்டணிக் கட்சியினர் மட்டுமின்றி, காங்கிரஸை சேர்ந்தவர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

நாடு முழுவதும் 25 கோடி ஏழைகளுக்கு மாதம்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ராகுல்காந்தி அறிவித்துள்ளார். இதை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சிக்கின்றனர். அதை முறியடிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டிய ப.சிதம்பரம், தனது மகனுக்காக சிவகங்கை தொகுதியை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்த ப.சிதம்பரம், வேட்பாளரை ஆதரித்து பேசுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், சிவகங்கை தொகுதி பிரச்சாரத்துக்கு செல்லப்போவதாகக் கூறி விட்டுச் சென்றார்.

மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளை புள்ளி விவரத்தோடு பேசக்கூடியவர் மற்ற தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்யாமல் இருப்பது கூட்டணி கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் மற்ற தொகுதிகளிலும் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x