Published : 04 Apr 2019 10:39 AM
Last Updated : 04 Apr 2019 10:39 AM
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உதகையில் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேற்று இரவு உதகை வந்தார். உதகையில் உள்ள சுலைவன் கோர்ட் ஹோட்டலில் தங்கினார்.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குந்தா ஒன்றிய செயலாளர் வசந்தராஜ், கீழ்குந்தா ஒன்றிய செயலாளர் காதர் தலைமையில் அதிமுகவினர் நீலகிரி மாவட்ட செயலாளர் புத்தகத்தினுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக அவர்கள் ஓ.பன்னீர் செல்வம் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வசந்தராஜ் மற்றும் காதர் கூறும் போது, "நீலகிரி மாவட்ட செயலாளர் புத்திசந்திரன் டிடிவி தினகரனுக்கு பினாமியாக செயல்பட்டு வருகிறார். டிடிவி தினகரன் உதகை வந்த போது அவரை சந்தித்துள்ளார். தன்னிச்சையாக செயல்படுகிறார். அவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுப்பதாக துணை முதல்வர் தெரிவித்தார். மேலும், வைகை செல்வனிடம் புகார் அளிக்குமாறு கூறினார்" என்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேர்தலுக்கு முன்பு தான் கே.ஆர்.அர்ஜூணன் மாற்றப்பட்டு புத்திசந்திரன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவால் தேர்தல் நெருங்கிய நிலையில் புத்திசந்திரன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார் என மாவட்ட அதிமுகவில் அதிருப்தி நிலவி வருகிறது.
தற்போது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்பு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT