Published : 12 Apr 2019 12:00 AM
Last Updated : 12 Apr 2019 12:00 AM

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் மக்களின் மகுடத்தை அலங்கரித்து கொள்ள திமுக, அதிமுக யுத்தம்: இரு கட்சிகளிலும் உள்வேலைக்கு பஞ்சமில்லை

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மக்களின் மகுடத்தை அலங்கரித்துக் கொள்ள திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இடையே கடுமையான யுத்தம் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மக்க ளவைத் தொகுதியில் 25 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில், திமுக வேட்பாளராக போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை, கடந்த 2014-ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆதரவாளர் என்பதால், மீண்டும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இவரது பிரச்சாரத் திட்டங்கள் உட்பட அனைத்தையும்,எ.வ.வேலு கவனித்துக் கொள் கிறார்.

மக்களுக்கு எதிரான திட்டங் களை பாஜக மற்றும் அதிமுக அரசுகள் செயல்படுத்தி வருவதாக கூறி வாக்கு சேகரிக்கிறார். மேலும், திமுக தேர்தல் அறிக்கை மற்றும் உள்ளூர் கோரிக்கைகளை முன் வைத்து பயணிக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பிரச்சாரம் செய்துள் ளதை பலமாக கருதுகிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாளை(13-ம் தேதி) பொதுக்கூட்டம் மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில நிர்வாகிகள், பிரச்சாரத்துக்கு வரவில்லை. மேலும், வன்னியர்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் அதிகம் உள்ள தொகுதியில், அந்த சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் வராமல் இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

பிரச்சாரத்துக்கு திமுக முன்னணி நிர்வாகிகள் கடமைக்காக வந்தாலும், கிராமங்களில் நடைபெறும் களப்பணி, வேட்பாளருக்கு ஆறுதலை கொடுக்கலாம். எதிர் முகாமில் பாஜக அங்கம் வகிப்பதால், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகள் கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ் ணமூர்த்தி களத்தில் உள்ளார். கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் வனரோஜா வெற்றிக்கு களப்பணி யாற்றியவர். இந்த தேர்தலில் தனது வெற்றிக்கு பாடுபடுகிறார்.

வேளாண் அதிகாரி முத்துகுமார சாமி தற்கொலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, முதல்வர் பழனிசாமி மூலமாக பொதுக்கூட்டம் நடத்தி பதில் அளிக்க வைத்தது, கட்சியினர் மத்தியில் பலமாக பார்க்கப்படுகிறது. வன்னியர்களின் வாக்குகளை பெறுவதற்காக பாமக நிறுவனர் ராமதாசை அழைத்து வந்து பிரச்சாரம் செய்துள்ளார். மேலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் பிரச்சாரம் மூலம் ரயில் திட்டங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி சாதகமாக உள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பிரச்சாரம் வலு சேர்த்துள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களின் பிரச்சாரம் மூலம் பலம் பெற்றிருந்தாலும், சொந்த கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் உள்வேலைகளால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனை, தனக்கு நெருக்கமான நபர்களை களம் இறக்கி சமாளித்து வருகிறார்.

தேர்தல் அனுபவம் மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 250 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அனுபவம் ஆகியவற்றை கூட்டிக்கழித்து கணக்குப் போட்டு தேர்தல் பிரச்சாரத் திட்டத்தை வகுத்துக் கொண்டு பயணிக்கிறார். இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தலித் தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின தலைவர்கள் இல்லாமல் இருப்பது, அந்த சமூகங்களின் வாக்குகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பண பலம் இல்லை

திமுக மற்றும் அதிமுகவுக்கு இணையாக அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி களத்தில் உள்ளது. இந்த மூன்று கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஞானசேகர்(அமமுக), அருள் (மக்கள் நீதி மய்யம்), ரமேஷ்பாபு (நாம் தமிழர் கட்சி) ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தலைமையைவிட்டால் யாரும் கிடையாது. டிடிவி தினகரன், சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரது பிரச்சாரம் அந்த கட்சிகளை சேர்ந்த வாக்காளர்களுக்கு கூடுதலாக வாக்குகளை பெற்றுக் கொடுக்கலாம். இரண்டு திராவிட கட்சிகளை எதிர்த்து செலவு செய்யும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லாதது பின்னடைவாக கருதப்படுகிறது. மற்ற 20 வேட்பாளர்களும் மவுனமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை தொகுதியில் “மக்களின் மகுடம்” யாருக்கு என்பதை தெரிந்துகொள்ள மே 23-ம் தேதி வரை காத்திருப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x