Published : 06 Apr 2019 12:00 AM
Last Updated : 06 Apr 2019 12:00 AM
கடந்த 2014 தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு 37 எம்பிக்கள் கிடைத்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் மக்களவைக்கு போட்டியிடத் தயங்கி வந்தனர். எனினும், அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணியை வலுவானதாகக் கருதியதால் பல எம்.பி.க்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டனர். கூட்டணியில் அதிமுகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கு முன்னதாகவே போட்டியிடத் தயாராகினர்.
இதற்காக, பல எம்பிக்கள் வேட்புமனு தாக்கலில் இணைக்க மக்களவையில் அளிக்கப்படும் என்ஓசியை பெறும் முயற்சியில் இறங்கினர். நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகளின் எம்பிக்களுக்கு இந்த என்ஓசி தேவைப்படும். இதனால், என்ஓசியை உடனடியாகப் பெறுவதில் மக்களவையில் கடும் போட்டி இருக்கும். இதில், எம்.பி.க்களின் அரசு குடியிருப்பில் வாடகை, மின்கட்டணம் உள்ளிட்டவை பாக்கி இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். நூலகங்களில் படிக்க எடுக்கப்பட்ட புத்தகங்கள் திருப்பி ஒப்படைத்தல் உள்ளிட்டவையும் அதில் அடங்கும். இதை அளிக்காத எம்.பி.க்களின் வேட்புமனு ஏற்கப்பட மாட்டாது.
இதனிடையில், அதிமுக எம்பிக்களில் டாக்டர் பி.வேணுகோபால், எம்.தம்பிதுரை, மரகதம் குமாரவேல், டாக்டர் ஜெ.ஜெயவர்தன், ஏழுமலை, மகேந்திரன் ஆகிய ஆறு பேருக்கு மட்டுமே மறுவாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும், இந்த ஆறு பேருடன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிமுக எம்பிக்களும் மக்களவையில் என்ஓசி பெற்றுள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அதிமுக எம்பிக்கள் வட்டாரம் கூறும்போது, ‘பாமகவும், தேமுதிகவும் கூட்டணியில் இணைந்ததால் எங்கள் வெற்றியில் நம்பிக்கை பிறந்தது. இதனால், மீண்டும் போட்டியிடும் ஆர்வம் அனைவருக்கும் எழுந்ததால் பலரும் என்ஓசி பெற்றனர். சீட் கிடைத்த வேட்பாளர்களின் மனுக்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்க முடியாமல் போனால் அந்த வாய்ப்பு தமக்கு கிடைக்கும் எனக் கருதி என்ஓசி பெற்றவர்களும் உண்டு’ எனத் தெரிவித்தன.
இந்தவகையில், நாமக்கல் எம்.பி.யான சுந்தரம் அங்கு மாற்று வேட்பாளராக மனு செய்ய முயன்றுள்ளார். திருப்பூரின் எம்.பி.
யான சத்யபாமா, ஈரோட்டின் செல்லக்குமார் சின்னையன் உள்ளிட்ட சிலர் மறுவாய்ப்பில் அதிக நம்பிக்கை வைத்து ஏமாற்றம் அடைந்தனர். திருவண்ணாமலை தொகுதி எம்.பி.யான வனரோஜாவை மறுவாய்ப்பிற்கு கட்சியில் எவரும் கண்டுகொள்ளவில்லை. விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், விருப்பமனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல், வேலூரின் செங்குட்டுவன், நாகப்பட்டினத்தின் கோபால், கோயம்புத்தூரின் நாகராஜன் ஆகிய எம்.பி.க்கள் கட்சி சார்பிலான விருப்பமனுவையும் வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாற்றுக்கட்சிகளுக்கு தம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் அருகில் உள்ளவற்றில் போட்டியிடவும் சில எம்.பி.க்கள் முயன்றுள்ளனர். இதுபோன்றவர்களுக்கும் அதிமுகவில் மறுவாய்ப்பு கிடைக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT