Published : 12 Apr 2019 10:39 AM
Last Updated : 12 Apr 2019 10:39 AM
நீரின்றி அமையாது உலகு’ என்பார்கள். ஆனால், நீர்நிலைகளை அழிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள் மனிதர்கள். குழாய்களில் தண்ணீர் வருவது நின்றுபோனால்தான், தண்ணீரின் முக்கியத்துவம் பற்றியே சிந்திக்கத் தொடங்குகிறோம். பொதுவாக, நிலத்தடி நீரையே அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகின்றனர். குளம், ஏரி நீரை நேரடியாகப் பயன்படுத்தாததால், அவற்றைப் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை மக்களுக்கு குறைந்துவிட்டது. அதை மாசுபடுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலில்தான், குப்பை, கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஆக்கிரமிப்புகளை மீட்டு கோவை குளங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
நொய்யல் ஆற்றை அடிப்படையாக வைத்து, கோவையைச் சுற்றி கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி, சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரிய குளம், குனியமுத்தூர் செங்குளம், வாலாங்குளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
ஒருபக்கம் ஆக்கிரமிப்புகளால் குளங்களின் பரப்பு சுருங்கி வருகிறது. மறுபக்கம் கட்டிடக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் இடமாகவும், சாக்கடைநீர் கலக்கும் இடமாகவும் குளங்கள் மாறி வருகின்றன. “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குளங்களை அழகுபடுத்தும் பணிகளில்தான் ஈடுபட்டு வருகிறார்கள். அவற்றை அழிவிலிருந்து மீட்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை” என்று குற்றம் சுமத்துகின்றனர் தன்னார்வலர்கள்.
அண்மையில் குளத்துப்பாளையம் குளத்தில் ‘பெலிக்கன்’ பறவையின் அலகில் பாலிதீன் கவர் சிக்கி, அதை அகற்ற முடியாமல் அந்தப் பறவை தவித்ததை பறவை ஆர்வலர் எஸ்.பிரசாத் புகைப்படமாக எடுத்திருந்தார். அந்தப் புகைப்படம் பறவை ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியது. இதற்குக் காரணம், குளக்கரையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளே.
இது தொடர்பாக ‘கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி’ அமைப்பின் தலைவர் பி.ஆர்.செல்வராஜ் கூறும்போது, “ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடைவிதித்திருந்தாலும், அதை கடைப்பிடிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு. பாலிதீன் கவர்களை குளக்கரையில் வீசுவதால், அவை குளங்களில் மிதந்து வருகின்றன. ‘பெலிக்கன்’ பறவையின் அலகு பெரிதாக இருப்பதால், அப்படி மிதந்து வந்த பாலீதின் கவர் பறவையின் அலகில் எதிர்பாராதவிதமாக சிக்கியுள்ளது.
இவ்வாறு சிக்கிக்கொள்ளும் பாலிதீனால், அந்தப் பறவையால் உணவு உட்கொள்ள முடியாது. ஒருவேளை அந்தக் கவரை விழுங்கினால் இறக்கவும் நேரிடும். அண்மையில் வாலாங்குளத்திலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அங்கு, நீண்ட நேரம் போராடிய பறவை, பின்னரே தன் அலகில் சிக்கிய பாலிதீன் கவரை விடுவித்தது. எனவே, குளங்களுக்கு அருகில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
ஆட்கள் நியமிக்கப்படுவார்களா?
மார்ச் இறுதியுடன் சீசன் முடிந்ததால், கோவை நீர்நிலைகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை தற்போது இல்லை. இருப்பினும், பெலிக்கன், கிரே ஹெரான், லிட்டில் கிரீப், எக்ரெட் போன்ற உள்ளூர் நீர்நிலைகளில் வாழும் பறவைகள் உள்ளன. எப்படி வனத்தைக் கண்காணிக்க வனத் துறை பணியாளர்களை நியமித்துள்ளதோ, அதேபோல குளங்களைப் பாதுகாப்பதற்கென்றே ஆட்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் கழிவுநீர் கலப்பது, குப்பை கொட்டுவது, பறவைகளை வேட்டையாடுவது, அவற்றுக்குத் தொந்தரவு அளிப்பது போன்ற செயல்களைத் தடுக்க முடியும்.
அறிவிப்பு பலகை இல்லை!
கோவையில் உள்ள ஒவ்வொரு குளத்திலும் என்னென்ன பறவைகள், உயிரினங்கள் இருக்கின்றன என்ற அறிவிப்புப் பலகைகளை குளக்கரைகளில் வைக்கவேண்டும். அப்போதுதான் பறவைகளின் முக்கியத்துவம் குறித்து ஓரளவுக்காவது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். உக்கடம் குளத்தில் கடந்த 3 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் பறவைகள் வருகை குறைந்துவிட்டது. தற்போது, உக்கடம் குளக்கரையில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்த பிறகு மனிதர்கள் நடமாட்டம் இருக்கும் என்பதாலும், பறவைகள் வரத்து மேலும் குறையக்கூடும்.
மனித நடமாட்டம் இல்லாமலும், குளத்தின் இயல்பு மாறாமலும் இருந்தால் மட்டுமே பறவைகள் வரத்து அதிகரிக்கும். எனவே, நகருக்குள் இருக்கும் குளங்களின் முக்கியத்துவத்தை அரசு அதிகாரிகள் உணர வேண்டும்” என்றார்.
நொய்யல் தொடக்கத்திலேயே கழிவுநீர் கலப்பு!
“மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யலாற்றில், கோவை குற்றாலம் அருகில் உள்ள சாடிவயல் பகுதியிலேயே சாக்கடை கழிவுநீர் நேரடியாக கலக்கத் தொடங்குகிறது.
கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களுக்கு வரும் வாய்க்கால்களிலும் சாக்கடைக் கழிவுநீர் கலக்கிறது. மேலும், மத்வராயபுரம், பேரூர் பகுதிகளில் ஆற்றின் அருகிலேயே குப்பைக்கிடங்குகள் அமைந்துள்ளன. இதனால் குளங்களுக்கு வரும் நீர் மாசடைந்து, ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளன. தூய்மையான மழை நீர் நமக்கு கிடைத்தாலும், அதை முறையாகப் பயன்படுத்த முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம்.குளங்களில் இருந்து தண்ணீர் வெளியேறும் கலிங்குகளும், வாய்க்கால்களும் தூர்ந்துபோயுள்ளன. இதனால் ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளத்துக்கு தண்ணீர் செல்வதும் தடைபடுகிறது. குளங்களில் கழிவுநீர் கலந்துள்ளதால் அவற்றில் உள்ள மீன்களைச் சாப்பிடுவோருக்கும் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே, குளங்களின் பிரதான வாய்க்கால்களில் நேரடியாக கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, கழிவுநீர் செல்ல தனி வாய்க்கால்களை அமைத்து, அதை சுத்திகரித்த பின்னர் குளங்களில் நிரப்பலாம். அதேபோல, நீர்த்தேக்கப்பகுதி, வாய்க்கால் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கட்டிட இடிபாடுகளைக் கொட்டவும், அவற்றை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ள மாநகராட்சி, இதை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களை இணைத்துள்ளனர். இந்த திட்டத்தில், குளத்தின் வாய்க்கால்களைச் சீரமைக்கும் நடவடிக்கைகளையும் இணைக்க வேண்டும்.
குளத்தின் நீரை சுத்திகரித்து வெவ்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்துவதன் மூலம், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதைக் குறைக்கலாம். அதோடு, குளங்களில் கழிவுநீர் கலப்பவர்கள், கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அதிக அபராதத் தொகையை விதிக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT