Published : 14 Apr 2019 12:00 AM
Last Updated : 14 Apr 2019 12:00 AM
தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த குடியாத்தம் தனி தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டியால் தேர்தல் களம் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
‘குட்டி சிவகாசி’ என்ற அடை மொழியுடன் தொழிலாளர்கள் நிறைந்த குடியாத்தம் தொகுதி இரண்டாவது இடைத் தேர்தலை சந்திக்கிறது. முதல் இடைத் தேர்தலின் மூலம் காமராஜரை வெற்றிபெற வைத்து முதலமைச் சராக்கி அழகுபார்த்த தொகுதி என்ற பெருமைக்குரியது. இரண்டாவதாக நடைபெற உள்ள இந்த இடைத் தேர்தலில் 1,30,397 ஆண்கள், 1,36,416 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் என மொத்தம் 2,66,835 பேர் வாக்களிக்க உள்ளனர். கடந்த 1951-ம் ஆண்டு முதல், பொதுத் தொகுதியாக இருந்துவந்த இந்தத் தொகுதி 2011-ல் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.
கஸ்பா ஆர்.மூர்த்தி (அதிமுக), எஸ்.காத்தவராயன் (திமுக), தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் (அமமுக), கலையேந்திரி (நாம் தமிழர் கட்சி), ச.வெங்கடேசன் (மக்கள் நீதி மய்யம்) உட்பட மொத்தம் 7 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தொகுதியில் முகாமிட்டுள்ளமுக்கிய பொறுப்பாளர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.
அதிமுகவுக்கு ஈடாக திமுகவினரும் சுறுசுறுப்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கூட்டுறவு கடன் ரத்து, 5 சவரன் தங்க நகைக் கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து போன்ற திமுகவின் தேர்தல் அறிக்கைகள் கிராம மக்கள் மத்தியில் திமுகவுக்கு சாதகமாக பார்க்கப் படுகிறது.
இவர்கள் இருவருக்கும் சளைத்தவர்கள் நானில்லை என்பதுபோல் அமமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன் அணியினர் தேர்தல் வேலையில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். முஸ்லிம் வாக்குகளை கவருவதற்காக பர்தாஅணிந்து செல்வதும் ஜமாத் நிர்வாகி களை சந்தித்து ஆதரவு திரட்டுவதிலும் ஜெயந்தி பத்மநாபன், வேகம் காட்டி வருகிறார். அமமுகவினர் தங்கள் வியூகங்களை வார்டு வாரியாக, கிளை வாரியாக செயல்படுத்தி வருகின்றனர்.
பகுதி நேர இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு வரி விலக்கு, கைத்தறிலுங்கி உற்பத்திக்கு வரி விலக்கு, பீடி தொழிலாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், குடியாத்தம் புறவழிச்சாலை, பேரணாம்பட்டு நகர பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யும் பிரச்சினை, கிடப்பில் போடப்பட்ட பத்தரப்பல்லி அணை கட்டுமான திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT