Published : 17 Apr 2019 12:00 AM
Last Updated : 17 Apr 2019 12:00 AM
வாக்குப் பதிவு அன்று வாக்குச்சாவடி முகவர்களின் சாப்பாடுச் செலவை வேட்பாளர் கணக்கில் சேர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதிலும், சிவகங்கை மாவட்டத்தில் வாக்குச் சாவடி முகவர்கள் சாப்பாடு செலவு ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
தேர்தலின்போது மக்களவை வேட்பாளர் ரூ.70 லட்சம், சட்டப் பேரவை வேட்பாளர் ரூ.28 லட்சம் வரை செலவழிக்கலாம். வேட்பாளர்கள் செலவு செய்வதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். இதற்காக செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மேலும் கடந்த காலங்களில் வாக்குப்பதிவு அன்று வேட்பாளர் சார்பில் நியமிக்கப்படும் வாக்குச் சாவடி முகவர்களின் சாப்பாடுச் செலவு வேட்பாளர்களின்செலவுக் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் இந்த தேர்தலில் அவர்களது சாப்பாடுச் செலவும் வேட்பாளர் கணக்கில் சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் 3 வேளையும் சேர்த்து முகவர்களின் சாப்பாடு செலவு ரூ.400 என தேர்தல் அதிகாரிகள் நிர்ணயித்ததாகத் தகவல் வெளியானது.
இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முகவர்களே தங்களது சொந்த செலவில் சாப்பிட்டுக் கொள்வர். சாப்பாடுச் செலவை வேட்பாளர் கணக்கில் சேர்க்கக் கூடாது எனக் கூறின. ஆனால், தேர்தல் ஆணையம் இதை ஏற்கவில்லை. இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் வாக்குச்சாவடி முகவர் சாப்பாடு செலவு ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT