Published : 04 Apr 2019 08:27 AM
Last Updated : 04 Apr 2019 08:27 AM
அமைச்சர்கள் மாவட்டத்துக்கு உள்ளேயே முடங்கியதால், பிரச்சாரத்துக்கு ஆளில்லாமல் அதிமுக கூட்டணியினர் தவித்து வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தலில் 20 இடங்களில் அதிமுகவும், மற்ற இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. சட்டப்பேரவை இடைத் தேர்தலில் 18 இடங்களிலும் அதிமுக போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது அந்தந்த மாவட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அந்தந்த மாவட்டத்துக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர்.
செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, சீனிவாசன், உதயகுமார், பாண்டியராஜன் உள்ளிட்ட முக்கிய அமைச் சர்கள் கூட வெளி மாவட்ட பிரச்சாரங்களுக்கு செல்லவில்லை. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மட்டுமே தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேபோல, கூட்டணிக் கட்சிகளில் பாஜகவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தேமுதிக மாநில துணைச் செயலாளர் சுதீஷ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி போன்றோரும் அவர்களது தொகுதிகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
தற்போது பாமக தலைவர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமாகா ஜிகே.வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் போன்றோர் மட்டுமே பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜக தலைவர்கள் அமித்ஷா, பியூஸ்கோயல் போன்றோர் ஒருசில இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்துவிட்டு சென்றுள்ளனர். அதேபோல் பிரதமர் மோடியும் ஒருசில இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அமைச்சர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் அந்தந்த தொகுதிக்குள்ளேயே முடங்கியதால் பிரச்சாரத்துக்கு ஆளி ல்லாமல் அதிமுக கூட்டணி தவிக்கிறது. அதிமுகவினர் கூறியதாவது:
தொகுதிக்குள் தினந்தோறும் ஏதாவது ஒரு தலைவர் பிரச்சாரத்துக்கு வந்தால் மட்டுமே தொண்டர்களிடம் எழுச்சி ஏற்படும். அமைச்சர்கள் சொந்த மாவட்டங்களிலேயே தங்கி பிரச்சாரம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அவர்களால் வெளியே வர முடியில்லை. தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வராததால் களப் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றார்.செங்கோட்டையன், சீனிவாசன், உதயகுமார், பாண்டியராஜன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கூட வெளி மாவட்ட பிரச்சாரங்களுக்கு செல்லவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT