Last Updated : 11 Apr, 2019 02:31 PM

 

Published : 11 Apr 2019 02:31 PM
Last Updated : 11 Apr 2019 02:31 PM

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே வடிவேல் கூறுவது போல் வரும் ஆனா வராது: ஸ்டாலின் கிண்டல்

ராகுல் தான் அடுத்த பிரதமர்; நிச்சயம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பங்கேற்று பேசியதாவது:

என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பற்றி மறைந்த ஜெயலலிதா கடுமையாக விமர்சித்துள்ளார். கூட்டணி தர்மத்தை குழிதோண்டி புதைத்தவர் ரங்கசாமி என கூறியிருக்கிறார். ஜெயலலிதா எதிர்த்தவரோடு தற்போது அதிமுகவினர் கூட்டணி வைத்துள்ளனர்.

பாமக வன்முறை கட்சி என்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். அதிமுகவை திமுக விமர்சனம் செய்யும். ஆனால், தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யாது. ஆனால், ராமதாஸ் தரம் தாழ்ந்து அதிமுக அரசையும், எடப்பாடி பழனிச்சாமியையும் தரம் தாழ்ந்து பேசினார். ஆனால், அவர்களோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பொல்லாத ஆட்சிக்கு ஒரே சாட்சி பொள்ளாட்சி சம்பவம். அதேபோல் புதுச்சேரியில் பொருந்தாத கூட்டணியை அதிமுக வைத்துள்ளனர்.

பாஜக 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என சொன்னார்கள். ஆனால், ஒருவருக்குக் கூட வேலை கொடுக்கவில்லை. வங்கி கணக்கில் 15 லட்சம் போடப்படும் என சொன்னார்கள். ஆனால், 15 பைசா கூட போடவில்லை. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே வடிவேல் கூறுவது போல் 'வரும் ஆனா வராது'. தற்போது பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கனவு காணும் தேர்தல் அறிக்கை.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. மோடி வெளிநாடு வாழ் பிரதமர். கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி மோடி காலியாகி விடுவார். மோடியை மோசடி என்று கூப்பிடுங்கள். மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவேன் என்று வாக்குறுதி அளித்து கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரால் ஏன் மாநில அந்தஸ்து வாங்கி தர முடியவில்லை? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டது முதன் முதலில் திமுக தான்.

மக்களை ஏமாற்ற இந்தியாவுக்கு பிரதமர் மோடி, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரிக்கு கிரண்பேடி என மூன்று பேரும் உள்ளனர். நாட்டை நாசமாக்க ஆளுநர்கள் உள்ளனர். தமிழக ஆளுநர் தனியாக ஒரு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அதை தட்டி கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை. ஆனால், புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியின் அராஜகத்தை முதல்வர் நாராயணசாமி எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார்.

ராகுல்காந்தியே புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என கூறியிருக்கார். ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர். நிச்சயம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x