Published : 12 Apr 2019 05:45 PM
Last Updated : 12 Apr 2019 05:45 PM
தேர்தல் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாட்கள் குறையக் குறைய, கொளுத்துகிற கோடை வெயிலைவிட அனலென தகித்துக்கொண்டிருக்கிறது பிரச்சாரம். இந்த ‘செம ஹாட்’ பிரச்சாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சுகள், தரம் தாழ்ந்துகொண்டிருப்பதாகப் பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள்.
சூறாவளிப் பிரச்சாரம் என்ற வார்த்தையை எந்த வருடம் நடந்த தேர்தலின் போது, சொல்லத் தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. தமிழகத் தேர்தல் களத்தில் உள்ள கட்சியின் தலைவர்களும் அடுத்தகட்டத் தலைவர்களும் அப்படித்தான் சூறாவளிப் பிரச்சாரம், சுனாமிப் பிரச்சாரம் என ஊர்ஊராகப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
‘இந்தக் கட்சியைப் பற்றி அந்தக் கட்சியும் அந்தக் கட்சியைப் பற்றி இந்தக் கட்சியும் குறைகளைப் பட்டியலிட்டு, பேசுவது ஒன்றும் புதிதல்ல. எல்லாத் தேர்தல்களிலும் மாறிமாறி தூற்றிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையும் வாடிக்கையும்!
ஆனால், கலைஞர் கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைவராகப் பொறுப்புக்கு வந்திருக்கிறார் ஸ்டாலின். அவர் தலைமையேற்றதும் வருகிற முதல் தேர்தல் இது. முக்கியமான தேர்தல் இது. ஆனால், இந்தத் தேர்தல் நாள் நெருங்க நெருங்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொஞ்சம் தரம் தாழ்ந்துதான் பேசுகிறாரோ என பலரும் முணுமுணுக்கின்றனர.
ஒரு கூட்டத்தில், ‘மோடி என்று அவரைக் கூப்பிடாதீர்கள். மோசடி என்று கூப்பிடுங்கள். அதுதான் சரி’ என்று பேசினார் ஸ்டாலின். ராகுல் காந்தி வந்திருந்த சேலம் பிரச்சாரக் கூட்டத்தில், ‘மோடி காவலாளி என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறார். அவர், காவலாளி அல்ல. களவாணி’ என்று முழங்கினார் ஸ்டாலின். மேலும், ‘மோடி சர்வாதிகாரி. இங்கே, எடப்பாடி பழனிசாமி உதவாக்கரை’ என்று வார்த்தைகளால் வசைபாடுகிறார் ஸ்டாலின்.
சேலம் பொதுக்கூட்டப் பிரச்சாரம் என்றில்லை. தூத்துக்குடியில் கனிமொழிக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கேயும் இப்படித்தான் அதிரிபுதிரி வார்த்தைகளால், எள்ளி நகையாடினார். ‘ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிற கொடுமையை மறந்துவிடமுடியுமா? மோடி ஏவிவிட்டு, எடப்பாடி செய்தாரா? வாங்கிக்கொண்ட நன்கொடைக்கு மோடி வேலை செய்திருக்கிறார். பெற்றுக்கொண்ட கூலிக்கு எடப்பாடி கொலை செய்ய போலீஸாரை அனுப்பியிருக்கிறார்’ என்று பேசினார் ஸ்டாலின். திமுக என்கிற மாபெரும் இயக்கத்தின் தலைவர், பேசிப்பேசியே கொள்கைகளையும் கட்சியையும் வளர்த்த கட்சிக்கு தலைவராகியிருப்பவர், இப்படியெல்லாம் பேசுவது நன்றாகவா இருக்கிறது எனக் குமுறுகின்றனர் பொதுமக்கள் சிலர்.
கன்னியாகுமரி பிரச்சாரத்தின் போதும் இப்படித்தான்.
’ஓ.பி.எஸ்சை இறக்கிவிட்டு, தான் முதல்வராகி விட வேண்டும் என்பது சசிகலாவின் திட்டம். ஆனால் தீர்ப்பு வந்துவிட்டது. அந்த சமயத்தில் கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்கள் முன்பாக சசிகலா நின்றுகொண்டிருக்கிறார். அவரது காலில் ஏதோ ஊர்ந்தது. பார்த்தால் மண்புழு. அந்த மண்புழுதான் எடப்பாடி பழனிசாமி. இதைச் சொன்னதற்கு, ‘ஆமாம், நான் விவசாயிதான்’ என்றார் எடப்பாடி. அவர் விவசாயி அல்ல. விஷவாயு’ என்றார் ஸ்டாலின்.
’ஆளுங்கட்சியான பாஜகவைப் பற்றியும் அதிமுகவைப் பற்றியும் பேசுறதுக்கும் சொல்றதுக்கும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும்போது, தலைவர் இதையெல்லாம் பேசுறாரேப்பா’ என்று உ.பி.க்கள் புலம்புகின்றனர்.
புதுச்சேரியில் நடந்தது பிரச்சாரம்.
‘இந்த நாட்டையே நாசப்படுத்துகிறவர் மோடி. தமிழகத்தை நாசமாக்குபவர் எடப்பாடி. புதுச்சேரியை நாசமாக்கிக்கொண்டிருப்பவர் கிரண்பேடி’ என்றெல்லாம் டைமிங் ரைமிங் பேச்சுகள், கட்சியில் உள்ள பேச்சாளர்களுக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். கட்சியின் தலைவருக்கு இது அழகல்ல என்கிறார்கள் திமுகவின் சீனியர் சின்ஸியர் உடன்பிறப்புகள்.
‘கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதிதான் தேர்தல் முடிவு நாள். அன்றைய தினத்துடன் மோடி ஆட்சி காலி. பாஜக ஆட்சியின் சேப்ட்டர் க்ளோஸ்’ என்றெல்லாம் போட்டுத்தாக்கியவர், முன்னதாக... ’வரும்... ஆனா வராது...’ என்கிற வடிவேலுவின் டயலாக்கையெல்லாம் பேசுகிற திமுக தலைவரின் பேச்சுகளை சிலர் ரசிக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம், தரம் தாழ்ந்த தன் பேச்சுகளை ஸ்டாலின் இப்போதே மாற்றிக்கொள்ளவேண்டும். இல்லையெனில், இதுவே ஸ்டாலின் ஸ்டைல் என்று முத்திரை குத்தப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT