Published : 05 Apr 2019 12:00 AM
Last Updated : 05 Apr 2019 12:00 AM
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் பிரச்சாரத்தில் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுக கையாளும் புதிய உத்தியால் பிரச்சாரக் கூட்டங்களில் பெண்கள் மட்டுமே குவிந்து வருவதும் தேர்தல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.
தமிழகத்தில் கவனிக்கப்படும் தொகுதியாக இருந்த தேனிக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத் குமாருக்கு அதிமுகவில் சீட் வழங்கியதும் விஐபி தொகுதியாக மாறிவிட்டது. அமமுக.வில் கொள்கை பரப்புச் செயலாளரான ஓபிஎஸ்-ன் அரசியல் எதிரியாக கருதப்படும் தங்கத்தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் பரபரப்பு மேலும் தொற்றிக்கொண்டது.
காங்கிரஸ் கட்சியில் முன்னாள் தலைவர் மற்றும் மத்திய அமைச்சராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தமிழகத்திலேயே மிக முக்கிய தொகுதியாக மாறிவிட்டது.
தூத்துக்குடி, சிவகங்கை, கன்னியாகுமரி என சில தொகுதிகள் வேட்பாளர்களைப் பொறுத்து முக்கியத்துவம் பெற்றாலும், 3 கட்சி வேட்பாளரும் விஐபி அந்தஸ்தில் போட்டியிடுவது தேனியில் மட்டுமே.
ஆளுங்கட்சியில் 2-வது அதிகார மையாகத் திகழும் ஓபிஎஸ் தனது மகனை நேரடியாக களத்தில் இறக்கியதன் மூலம் அதிமுகவினர் எதிர்பார்ப்பில் முதன்மைத் தொகுதியாகிவிட்டது. அதிமுக, அமமுக, காங்கிரஸ் என 3 முக்கியக் கூட்டணி கட்சிகளும் இத்தொகுதியின் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கின்றன.
தங்களின் வெற்றி, கவுரவம் இத்தொகுதி முடிவில் அடங்கியுள்ளதால் பிரச்சாரம், ஆட்களை திரட்டுவது, எதிர்தரப்பினர் மீது வார்த்தைப்போர் தொடுப்பது என ஒவ்வொரு நாளும் தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கி வருகின்றனர்.
ஈவிகேஎஸ். இளங்கோவன், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் ஓபிஎஸ்-சின் கடந்தகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி கடுமையாகச் சாடி வருகின்றனர். வாரிசு அரசியல், தர்மயுத்தத்துக்கு எதிரான செயல்பாடு என புகார்களை அடுக்கி வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே செல்கின்றனர்.
இந்தப் புகார்கள், விமர்சனங்கள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முழுமையாக மக்களைச் சந்திக்கும் வகையில் பிரச்சாரம் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தின்போது பெண்களைப் பார்த்து அம்மா, அக்கா, தங்கை, பாட்டி என அழைத்து நல்லா இருக்கீங்களா? எனக்கேட்டு ரவீந்திரநாத் குமார் பேச தொடங்குகிறார். எனக்கு ரொம்ப பேசத் தெரியாது. மற்றவர்களைப்போல் வாயில் வடை சுடவும் தெரியாது. உங்கள் பிரச்சினைகள் எனக்கு தெரியும்.
தேனியை முன்மாதிரி தொகுதியாக மாற்றும் கனவுத்திட்டம் என்னிடம் உள்ளது. அதை நிறைவேற்றுவேன்’ என சுருக்கமாக 2 நிமிடங்களில் பேசி முடித்து விடுகிறார்.
எதிர்த்து நிற்கும் வேட்பாளர், கட்சிகள் என யாரையும் விமர்சிப்பதில்லை. இந்தக் கூட்டங்களில் ஆண்கள் பெரிய அளவில் இருப்பதில்லை. எனினும் ஓபிஎஸ் மகன் யார் என பார்க்கும் ஆர்வம் பெண்களிடம் உள்ளது.
பெண்களே மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருப்பதால், அவர்களை குறி வைத்து அதிமுக நடத்தும் பிரச்சாரம் இதுவரை இல்லாத வகையில் புதுமையாக உள்ளது. அமைச்சர் ஆர்,பி.உதயகுமார் வகுத்துக்கொடுத்த திட்டம் இது என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT