Published : 25 Apr 2019 12:00 AM
Last Updated : 25 Apr 2019 12:00 AM
வீடு வாங்கும்போது 12 சதவீதமாக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதால், ரூ.40 லட்சத்துக்குள் வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். அதற்குமேல் விலை கொடுத்து வாங்கினால் வீட்டின் விலை அதிகமாக இருக்கும் என்கின்றனர் கட்டுமானத் துறையினர்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை விற்கும்போது 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதனால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இந்த வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. மலிவு விலைக்கு வீடு (Affordable House) வாங்குவோருக்கு ஜிஎஸ்டி வரி ஒரு சதவீதம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
இதனால் மலிவு விலை வீடு வாங்குவோருக்கு அதாவது 600 சதுர அடிக்கு கீழ் வீடு கட்டுவோர் அல்லது ரூ.40 லட்சத்துக்கு குறைவான விலையில் வீடு வாங்குவோருக்கு மட்டுமே பயன்பெறும் நிலை உள்ளது. மற்ற பிரிவினருக்கு வீட்டின் விலை அதிகமாக இருக்கும்.
இதுகுறித்து இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சென்னை பிரிவு தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீப் கூறியதாவது:வீடு கட்டும்போது வாங்கப்படும் சிமென்ட்டுக்கு 28 சதவீதம், இரும்பு கம்பிக்கு 18 சதவீதம், கருங்கல் ஜல்லிக்கு 5 சதவீதம்என ஒவ்வொரு மூலப்பொருளுக்கும் வெவ்வேறு விதமான ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. முன்பு வீட்டுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டபோது மேற்கண்ட மூலப்பொருட்களுக்கு நாங்கள் செலுத்திய ஜிஎஸ்டி வரியைக் கழித்துக் கொண்டு மீதமுள்ள வரியை செலுத்தினால் போதும். ஆனால், ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்ட பிறகு கட்டுமான மூலப்பொருட்களுக்கு நாங்கள் செலுத்திய வரிக்கான தொகையை கழிக்கக்கூடாது என்று கூறிவிட்டனர். அதனால் கட்டுமானச் செலவு அதிகரித்துவிட்டது.
சென்னை ஆவடியில் வீடு கட்ட ஒரு சதுர அடிக்கான செலவு ரூ.3,500-ல் இருந்து ரூ.3,800 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்கள் தலையில்தான் சுமத்தப்படுகிறது. கட்டுமான செலவு அதிகரித்து வீட்டு விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இந்த உண்மை தெரியாமல், ரூ.50 லட்சத்துக்கு வீடு வாங்கினால், ஜிஎஸ்டி 12 சதவீதமாக இருந்தபோது ரூ.6 லட்சம் செலுத்த வேண்டும். இப்போது அரசு 5 சதவீதமாகக் குறைத்துவிட்டதால் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தினாலே போதும் என்று மக்கள் தவறாக நினைக்கின்றனர். இவ்வாறு ஹபீப் கூறினார்.
இந்திய கட்டுனர்கள் சங்க தென்னக மையத்தின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள எல்.வெங்கடேசன் கூறியதாவது:ஒருவர் நிலம் வைத்திருந்து, அந்த நிலத்தில் ஒப்பந்ததாரர் மூலம் வீடு கட்டினால் 18 சதவீதம் ஜிஎஸ்டி, கட்டுனர் வீடு கட்டி விற்றால் 5 சதவீதம் ஜிஎஸ்டி, ரூ.40 லட்சத்துக்கு கீழ் உள்ள வீடுகளுக்கு ஒரு சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. நிலம் வாங்கும்போது தமிழக அரசுக்கு 11 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்துகிறோம். அந்த நிலத்தில் வீடு கட்டும்போது நிலத்துக்கும், கட்டுமானத்துக்கும் சேர்த்து ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. நிலத்துக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதால் கட்டுமான விலை அதிகமாகிறது.
ரூ.40 லட்சம் வரையிலான மலிவு விலை வீடுகளுக்கு ஒரு சதவீதம் ஜிஎஸ்டி விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. ரூ.40 லட்சத்துக்கு மேல் வீடு வாங்குபவர்களுக்கும் நியாயமான விலையில் வீடு கிடைக்க வேண்டுமானால் ஒப்பந்ததாரர் மூலமாக வீடு கட்டினாலோ, கட்டுனரிடம் இருந்து வீடு வாங்கினாலோ ஒரேமாதிரியாக 2 முதல் 3 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT