Published : 13 Apr 2019 12:00 AM
Last Updated : 13 Apr 2019 12:00 AM
வேட்பு மனுவில் தவறான தகவலை தந்ததுடன், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் வேலூர் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது காட்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த முறை தேர்தல் விதி மீறலில் இதுவரை தமிழகத்தில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல்விதிமீறல் தொடர்பான வழக்குகளில், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி அனுமதிக்கு பிறகே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் சிலர் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (1951) அரசியல்வாதிகளுக்கு சாதகமாகவே உள்ளது. இந்திய தண்டனை சட்டங்களில் பிடியாணை வேண்டிய குற்றம் (Cognizable offence), பிடியாணை வேண்டா குற்றம் (Non Cognizable offence) என இரு வகையில் பிரித்து வகைப்படுத்தியுள்ளதால் காவல்துறை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கு பதிவு செய்ய முடியாது.
நீதிமன்ற அனுமதி பெற்ற பின்பே வழக்குப்பதிவு செய்ய முடியும். அதுதான் தற்போது வேலூர் திமுக வேட்பாளர் விவகாரத்தில் நடைபெற்றுள்ளது.
தெளிவாக இல்லை
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்(1951) -ல் பிரிவு 125 முதல் 135 (C)வரை தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளன. இதில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல் உட்பட தேர்தல் நடத்தை விதிகளை மீறி (corrupt practices) ஊழல் நடவடிக்கைகள் மேற்படி சட்டப்பிரிவு 123-ல் தவறுஎன தெரிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான தண்டனை பற்றியோ, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல் குற்றம் என்றோ இச்சட்டத்தில் தெளிவாக கூறப்படவில்லை.
இந்திய தண்டனை சட்டம் 1920-ம்ஆண்டு தேர்தல் தொடர்பான குற்றங்களான வாக்காளர்களுக்கு லஞ்சம் அளித்தல் உள்ளிட்ட குற்றங்களை 171A முதல் 171 H வரை புதிய அத்தியாயமாக சேர்த்துள்ளனர். சட்டம் இயற்றும் அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாகவே பயன்படுத்தி இதில் திருத்தம் செய்யாமல் வைத்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் இந்திய தண்டனை சட்டம் 188-ன்படி தண்டிக்கக்கூடிய குற்றமாக இருந்தபோதிலும், இக்குற்றம் தொடர்பான நடத்தை விதிகளை பிறப்பித்த தலைமை அலுவலர் அல்லது அவரது உயர் அலுவலர்கள் மட்டுமே குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடியாக தனிநபர் வழக்கு தொடர முடியும் என குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 195(1) கூறியுள்ளது.
இதுவரை இந்திய தேர்தல் வரலாற்றில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான வழக்குகளில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. தேர்தல் முடிந்ததும் அரசியல்வாதிகள் ஆளும் கட்சியினராக மாறுவதால் அவர்களுக்கு கட்டுப்பட்ட அரசு ஊழியர்கள், அவர்களுக்கு சாதகமாகவே சாட்சியம் அளிக்கும் நிலை உள்ளது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT