Last Updated : 26 Apr, 2019 10:10 AM

 

Published : 26 Apr 2019 10:10 AM
Last Updated : 26 Apr 2019 10:10 AM

காலையில் பள்ளி.. மாலையில் வேலை...ஏழ்மையிலும் எதிர்நீச்சல் போடும் தடகள வீரர் அரவிந்தராஜ்!

அப்பா இல்லை. அம்மாவும் உடல் நலம் குன்றி இருக்கிறார். இந்தச் சூழலில் குடும்ப பாரத்தை சுமந்துகொண்டு தடகளத்திலும் சாதித்து வருகிறார் கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும்  மாணவர் மு.அரவிந்தராஜ். மாவட்ட, மண்டல, மாநில அளவிலான 1500 மீட்டர், 3,000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கங்களைக் குவித்து வந்த அவர், தற்போது தேசிய அளவிலானப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.

அரவிந்தராஜின் அப்பா முரளிகணேஷ். வாடகை கார் ஓட்டுநராக இருந்த அவர், புற்றுநோய் பாதிப்பால் கடந்த 2013-ல் காலமானார். அம்மா முத்துலட்சுமி. காசநோய் பாதிப்புக்கு உள்ளான இவர், தற்போது உடல் நலம் தேறி வருகிறார். தம்பி வேணுகோபால்,  ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புக்கு செல்ல உள்ளார்.  அப்பா இறந்த பிறகு குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பு அரவிந்தராஜுக்கு ஏற்பட்டது. இதனால், தடகளப் பயிற்சியைக்  குறைத்துக்கொண்டு, வேலைக்குச் செல்லத்  தொடங்கியுள்ளார்.

காலையில் வீடுகளுக்கு நாளிதழ்கள் விநியோகிப்பது, மாலை பள்ளி நேரம் முடிந்ததும் பேக்கரியில் வேலை என நாட்கள் கழிந்துள்ளன. இதனால், 6-ம் வகுப்பில் தடகளத்தில் பதக்கங்களைக் குவித்த அவர், 7-ம் வகுப்பில் எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை.

ஆசிரியர்கள் அளித்த ஊக்கம்!

இந்த நிலையில், 8-ம் வகுப்பில் மாவட்ட அளவிலான 1,500 மீட்டர், 3,000 மீட்டர் போட்டிக்கு பள்ளியில் மாணவர்களைத் தேர்வு செய்துள்ளனர். அப்போது, முறையான பயிற்சி இல்லாதபோதும், 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுடன் ஓடி, இரண்டாமிடம் பிடித்து ஆச்சரியப்பட வைத்துள்ளார் அரவிந்தராஜ். அவரின் திறமையை கண்டுவியந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் தேன்மொழி, ஜோஸ்பின் ஆகியோர், “உன்னிடம்  திறமை உள்ளது. தொடர்ந்து பயிற்சி செய். தடகளப் போட்டிகளில் வெல்ல முடியும்” என்று  ஊக்கப்படுத்தியுள்ளனர். இதனால், காலை நேரத்தில் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டு, விளையாட்டுப் பயிற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

பள்ளி மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போது, பள்ளியின் மூத்த தடகள வீரர்களான ரவிக்குமார், அருண்பிரபு ஆகியோர் அரவிந்தராஜுக்கு ஊக்கமளித்து, தங்களுக்கு தெரிந்த போட்டி நுணுக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளனர்.

பின்னர்,  10-ம் வகுப்பு பயிலும்போது,கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற,  மாவட்ட அளவிலான 2,000 மீட்டர் ஓட்டப்  போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார். தொடர்ந்து, திருச்சியில் நடைபெற்ற, மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் 4-ம் இடம் பிடித்தார். இதுதவிர, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று வருகிறார். அவரை சந்தித்தோம்.

ஷூகூட இல்லாமல்...

“தினமும் காலையில 5 மணியில் இருந்து 8 மணி வரை பள்ளி மைதானத்தில் பயிற்சி செய்வேன். பள்ளி நேரம் முடிஞ்ச பிறகு மாலையில்  5 மணி முதல் இரவு 7 மணி வரை பயிற்சி முடிச்சுட்டு, பேக்கரியில உதவியாளர் வேலைக்குப் போவேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெயின்ட் அடிக்கும் வேலைக்கும் போவேன். இதில் கிடைக்கும் வருமானம்தான், குடும்பத்தை நடத்த உதவுது.

வெளியூர்களில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள அதிக பணம் செலவாகும். இதனால, மாரத்தான் போட்டி எங்க நடந்தாலும் போய் கலந்துக்குவேன். அந்த போட்டிகள்ல ஜெயிச்ச பணத்துலதான் வெளியூர் பயணச்  செலவு, சாப்பாட்டு செலவை சமாளிக்கறேன். நான் 10-வது படிக்கறப்போ வேலைக்கு போனா படிப்பு பாதிக்கப்படும்ங்கறதால,  கடைசி 5 மாதம், பள்ளி சார்பிலேயே ஒரு ஸ்பான்சர் மூலமா உதவித்தொகை வாங்கிக் கொடுத்தாங்க. போன வருஷம் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சீருடை வாங்கிக் கொடுத்தார். வீட்டுக்குப்  பக்கத்துல இருக்குற ஆட்டோ டிரைவர் சரவணன்,  என் கஷ்டத்த பார்த்து ஷூ வாங்கித்  தந்தார். அதனால ஓரளவுக்கு சமாளிக்க முடிஞ்சது. தடகள வீரர்களுக்கு உடற்பயிற்சியோடு, உணவும் முக்கியம். முட்டை, ஜூஸ், உலர்ந்த பழங்கள் சாப்பிடணும். ஆனா, பணம் இல்லாததால, கிடைக்கறதை  சாப்பிட்டுக்குவேன். ஓட சரியான ஷூகூட இல்லாமல் மாரத்தான் போட்டிகள்ல பலமுறை 6 கிலோமீட்டர் தூரம்  ஓடியிருக்கேன்” என்றார் அரவிந்தராஜ்.

“உனது இலக்கு என்ன?”  என்று கேட்டதற்கு, “ஒலிம்பிக் போட்டியில கலந்துகிட்டு, நாட்டுக்கு பெருமை சேர்க்கணும்ங்கறதுதான் என்னோட கனவு. ராணுவத்துல சேரணும்ங்கறது ஆசை. அதுபோக, நான் நல்ல நிலமைக்கு வந்தபிறகு, என்னை மாதிரியே திறமை இருந்தும், உதவி கிடைக்காம கஷ்டப்படற பசங்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்க உதவணும்” என்றார் உறுதியுடன்.

தேசிய போட்டிக்கு தேர்வு

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் அரவிந்தராஜ் முதல் இடம் பிடித்தார். இதன் தொடர்ச்சியாக வரும் மே 3, 4, 5-ம் தேதிகளில் டேராடூனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி இவர் கோவையில் இருந்து புறப்பட வேண்டும். ஆனால், அங்கு சென்றுவருவதற்கான செலவுத்தொகைகூட இல்லாமல் அரவிந்தராஜ் தவித்துவருகிறார். அவருக்கு உதவ பள்ளியின் முன்னாள் மாணவர்களும் முன்வந்துள்ளனர். இதுதவிர, யாரேனும் அரவிந்தராஜின் பயிற்சிக்கு உதவ நினைத்தால், பள்ளியை தொடர்புகொள்ளலாம்” என்றார் பள்ளித்  தலைமை ஆசிரியர் கோ.ரமேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x