Published : 20 Mar 2019 11:14 AM
Last Updated : 20 Mar 2019 11:14 AM
சீனாவைத் தாயகமாகக் கொண்ட சாமந்திப் பூ, தமிழகத்தில் சுமார்2,300 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தை பொருத்தவரை, அன்னூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாமந்திப் பூ சாகுபடி செய்யப்படுகிறது.
சாமந்திப் பூ சாகுபடியில் தண்ணீர் பற்றாக்குறை, ஆட்கள் இல்லாமை, வறட்சி என பல்வேறு சவால்களை விவசாயிகள் எதிர்கொண்டு வரும் சூழ்நிலையில், பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதலும் சாமந்தி சாகுபடியில் கூடுதல் பாதிப்புகளை உருவாக்கி, விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.
சாமந்தி சாகுபடியில், இலைப்பேன்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தும், இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. இதேபோல, வாடல் நோய், துருநோய் போன்றவையும் பூக்களின் தரத்தைப் பாதிக்கின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியதாவது: இளம் மற்றும் வளர்ந்த இலைப்பேன்கள், சாமந்திப் பூச்செடிகளின் இலைகளின் அடிப்பகுதியில் கூட்டம், கூட்டமாக இருந்துகொண்டு, சாறு உறிஞ்சத் தொடங்கும். பாதிக்கப்பட்ட இலைகள் உருவம் சிதைந்து காணப்படும்.
இதேபோல, பூவிழ்களில் உள்ள சாறு உறிஞ்சப்படுவதால் நிறம் மாறிவிடும். இதனால் பூக்களின் அனைத்துப் பாகங்களும் சேதமடையும். நாளடைவில் பூக்கள் உதிர்ந்துவிடும்.
இலைகள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறுவது வாடல்நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறியாகும். சாமந்திப் பூச்செடிகள் அனைத்துப் பருவங்களிலும், இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளா
கின்றன. செடியின் முதிர்ந்த அடிப்பகுதி இலைகள், மஞ்சள் நிறமாக மாறுவது நோய்த் தாக்குதலின் முக்கியமான அறிகுறியாகும். நோய் தாக்கப்பட்ட செடியில் நிலப் பகுதிக்கு அருகில் வேர் மற்றும் தண்டுப்பகுதி பழுப்பு நிறமடைந்து, திசுக்கள் சிதைந்து காணப்படும்.பாதிக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி குறைவதுடன், சில சமயங்களில் பூக்கள் பூப்பதும் தடைபடுகிறது. வெண்ணிறப் பூஞ்சானம் அடிப்பகுதியில் உள்ள வேர்களில் தென்படும்.
அஸ்வினி பூச்சி...
சாமந்திச் செடியின் தண்டுப் பகுதியில் சிறிய கருப்பு நிறத்தில் தோன்றும் பேன்கள் அஸ்வினி பூச்சிகள் எனப்படுகின்றன. இவை நன்றாக வளர்ந்த மற்றும் இளம் பூக்கள், வளரும் குருத்து மற்றும் இலைகளின் அடியில் இருந்து சாறு உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி குறைந்து காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, முதிர்வதற்கு முன்பே உதிர்ந்துவிடும்.
அஸ்வினி பூச்சிகளால் தாக்கப்பட்ட குருத்தின் வளர்ச்சியும் குறைந்துவிடும். இவை சாறு உறிஞ்சும்போது, தேன்போன்ற திரவத்தை வெளியேற்றுவதால், இலைகள் மேல் ஒருவிதமான கரும்பூஞ்சானம் படர்ந்து காணப்படும்.
இளம் மொட்டுகளின் மேல் சிறிய புள்ளிகள் தோன்றுவது இலைப்புள்ளி மற்றும் இலைக்கருகல் நோய்க்கு அடையாளமாகும். அடர்ந்த பழுப்பு நிற சிறிய இலைப்புள்ளிகள் முதலில் தோன்றும். நோய் தீவிரமடையும் போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து, அப்பகுதியே தீய்ந்ததுபோல தோற்றமளிக்கும். இதனால் இலைகள் மற்றும் மொட்டுகள் சேதமடையும்.
இளம் மொட்டுகளில் பழுப்பு அல்லது கரும்புள்ளிகள் தோன்றும். இது மொட்டுகளை சுருங்கச் செய்வதுடன், முதிர்வதற்கு முன்பே உதிரச் செய்துவிடும். குளிர்காலங்களில் மொட்டு கருகல் அறிகுறிகள் அதிகம் தென்படுகிறது. பாதி மலர்ந்த பூக்களின் வெளிப்புற இதழ்கள் இந்த பாதிப்பால் சிறுத்து, அடர்த்தி குறைந்து காணப்படும்.
பருவக் காலங்களில் பூக்களுக்கு மேல் பறக்கும் கருந்தலை கொசுக்களின் தாய்ப்பூச்சியானது, பூக்களின் மொட்டுகளில் முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், பூவின் சூல்பைக்குள் கூட்டுப் புழுக்களாக மாறும். நாளடைவில் அவை உதிர்ந்துவிடும்.
சாம்பல் நோய்!
சாம்பல் நோயால் இலையின் மேற்பரப்பில் வெண்ணிறப் பூஞ்சானம் தோன்றுகிறது. வளர்ந்த செடிகளில் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும். இலையின் மேற்பரப்பில் வெண்ணிற தூள் போன்ற பூஞ்சான வளர்ச்சி காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகி, பின்பு உதிர்ந்துவிடும்.
இலைகளின் அடியில் பழுப்பு நிற கொப்புளங்கள் தோன்றுவது துருநோயின் பாதிப்பு ஆகும். முதலில் இலையின் அடிப்பகுதியில் தோன்றும் கொப்புளங்கள், மஞ்சள் நிறம் கலந்த, பச்சை நிறப் புள்ளிகளாக இருக்கும். அதிலிருந்து துருநோயின் வித்துகள் வெளியேறும். பாதிப்பு தீவிரமடையும் போது, வளர்ச்சி குறைந்து, பூக்கள் பூப்பது நின்றுவிடும்.
சாமந்தியைத் தாக்கும் மஞ்சள் தேமல் நோய், குட்டை நச்சுயிரி நோய் ஆகியவை சாமந்தியில் பாதிப்பை உண்டாக்குகின்றன. இதனால், இலைகள் மொறுமொறுப்பாகி உடைந்துவிடும். செடிகள் வளர்ச்சி குன்றி, வெளிர்ந்த நிறத்தில் காணப்படும். மொட்டுகள் விரிவடையாமலும், சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT