Published : 24 Mar 2019 08:50 PM
Last Updated : 24 Mar 2019 08:50 PM
சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளி தப்ப கிரண்பேடி சட்ட விதிமுறைகளை மீறி வழி செய்ததாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் தரப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நெல்லித்தோப்பு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நன்னடத்தை விதிகளை மீறியதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கண்டிக்கப்பட்டார். இதுபோன்று விதிமீறல் செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அதேபோன்று புகார் தரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சிபிஎம் பிரதேச குழு உறுப்பினர் முருகன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
''புதுச்சேரி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தில் கடந்த 30.10.2018-ல் எம்எல்ஏவாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் அசோக் ஆனந்த் தண்டிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, லஞ்ச ஒழிப்புச் சட்டப்படி எந்த ஒரு எம்எல்ஏவும், லஞ்ச ஒழிப்பு சட்டப்படி தண்டிக்கப்படும் நாளில் இருந்து அவரது எம்எல்ஏ பதவி இல்லாமல் போய் விடுகிறது. அத்துடன் அந்த எம்எல்ஏ பதவியும் தானாகவே காலியாகி விடுகிறது. இத்தீர்ப்பு படி குடியரசுத் தலைவரோ, மாநில ஆளுநரோ லஞ்ச ஒழிப்புச் சட்டத்தில் தண்டிக்கப்பட்ட எம்எல்ஏவின் பதவியைக் காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. அவர்களின் ஒப்புதலும் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
இந்நிலையில் கடந்த 15.3.2019-ல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அசோக் ஆனந்துக்கு சாதகமாகவும் உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராகவும் கிரண்பேடி செயல்பட்டுள்ளார். அசோக் ஆனந்திடம் இருந்து மார்ச் 13-ம் தேதி பெறப்பட்ட கடிதத்தைக் கொண்டு குடியரசுத் தலைவருக்கக் கடிதம் அனுப்பியதே இதற்குக் காரணம். அக்கடிதத்தில் அசோக் ஆனந்தின் எம்எல்ஏ பதவியை தகுதி இழப்பு செய்ய யூனியன் பிரதேச சட்டவிதிப்படி குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுள்ளதால் அவர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடிதம் அனுப்பிய மறுநாளான 16-ம் தேதியன்று விடுமுறையான சனிக்கிழமையாக இருந்தாலும் கிரண்பேடி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி அசோக் ஆனந்துக்கு வழங்கியுள்ளனர். நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் அசோக் ஆனந்துக்கு சாதகமாக கிரண்பேடி செயல்பட்டுள்ளார்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலான நிலையிலும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் கால அட்டவணை வெளியான சூழலிலும் தனது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வகையில் இக்கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு கிரண்பேடி அனுப்பியுள்ளார். தற்போதைய செயல் மூலம் கிரண்பேடி சார்ந்துள்ள பாஜகவுக்கும், கூட்டணிக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸுக்கு சாதகமாகவும் தனது அலுவலகத்தை ஒரு தலைப்பட்சமாக பயன்படுத்தியுள்ளார். இது இந்திய தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளி தப்ப உதவ சட்ட விதிமுறைகளை மீறி வழி செய்துள்ளார். புதுச்சேரி தேர்தல்துறையும், இந்திய தேர்தல் ஆணையமும் இதில் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு சிபிஎம் பிரதேச குழு உறுப்பினர் முருகன் என்று தெரிவித்தார். பேட்டியின் போது காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT