Last Updated : 26 Mar, 2019 02:44 PM

 

Published : 26 Mar 2019 02:44 PM
Last Updated : 26 Mar 2019 02:44 PM

225% கல்விக் கட்டணத்தை உயர்த்திய புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம்: மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்

ஜிப்மரை விட புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டணத்தை உயர்த்தியதால் அதை திரும்பப் பெற வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அருகே உள்ள காலாப்பட்டில் மத்தியப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் 90-க்கும் மேற்பட்ட துறைகளும், பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆறாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பருவக் கட்டணத்தினை பல்கலைக்கழக நிர்வாகம் பல மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் மத்தியப் பல்கலைக்கழகம் திடீரென கட்டணம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள்ள பேரணியாகச் சென்று பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தினை இன்று (செவ்வாய்க்கிழமை) முற்றுகையிட்டு உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டினை முழுமையாகத் தர வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பல்கலைக்கழக மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். காலை தொடங்கிய போராட்டம் மதியத்தைக் கடந்தாலும் கல்லூரி நிர்வாக தரப்பில் யாரும் பேச்சுவார்த்தைக்குக் கூட அழைக்கவில்லை என்று மாணவர்கள் குறிப்பிட்டனர்.

போராட்டத்தில் பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை மற்றும் இந்திய மாணவர் சங்கம், மாணவர் காங்கிரஸ், அம்பேத்கர் மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, அம்பேத்கர் பெரியார் மாணவர் கழகம் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மாணவர் கவுன்சிலின் தலைவர் ஜூனைத் நாசர் கூறுகையில், "எம்சிஏ கட்டணம் 225 சதவீதமும், எம்எஸ்சி, எம்டெக் கணினி அறிவியல் கட்டணம் 182 சதவீதமும், எம்பிஏ 125 சதவீதமும், பிஎச்டி பிரிவு 56 சதவீதமும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி பாடத்துக்கு 51 சதவீதமும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்ஏ பாடத்துக்கு 44 சதவீதமும், எம்காம், எம்ஏ எக்னாமிக்ஸ், எம்எஸ்டபுள்யூ பாடத்துக்கு 40 சதவீதமும், அனைத்து எம்எஸ்சி, எம்டெக் (கணினி அறிவியல் தவிர்த்து) பிரிவுகளுக்கு 38 சதவீதமும் என பல பாடங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது.

சராசரியாக 83 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக் கட்டணத்தை விட புதுச்சேரி பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி கட்டணம் உயர்வாக இருப்பது சரியா என்று கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், "ஏழை, எளிய குடும்ப மாணவர்கள் எவ்வாறு கலைக்கல்லூரி பாடங்களை இங்கு எப்படி படிப்பது என்றே தெரியவில்லை. ரூ.17 ஆயிரத்துக்குள் இருந்த செமஸ்டர் கட்டணம் ரூ.24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சில படிப்புகளில் கட்டணம் ஆயிரங்களிலிருந்து மாறி லட்சங்களைத் தொட்டுள்ளது. இனி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளை படிக்க எங்களுக்கு வாய்ப்பில்லை. அதை விட கொடுமை விண்ணப்பங்களின் விலையே ரூ.600 என்றால் நாங்கள் என்ன செய்வது?" என்கின்றனர், கோபமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x