Published : 11 Mar 2019 09:58 AM
Last Updated : 11 Mar 2019 09:58 AM
தூய்மை நகரங்கள் பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பேரூராட்சிகள் முன்னிலை அடைந்துள்ளன.
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தில், தேசிய அளவில் சிறந்த, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தரவரிசைப் பட்டியல், ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. நகரின் தூய்மை, திடக்கழிவு மேலாண்மை மற்றும் இன்னபிற நவீன செயல்முறைகளின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
17 பேரூராட்சிகள்
இந்த ஆண்டுக்கான பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட உத்திரமேரூர், திருப்போரூர், மாமல்லபுரம், பீர்க்கன்காரணை, வாலாஜாபாத், குன்றத்தூர், பெருங்களத்தூர், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, பெரும்புதூர், இடைக்கழிநாடு, மாங்காடு, அச்சரப்பாக்கம், கருங்குழி ஆகிய 17 பேரூராட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அனைத்துப் பேரூராட்சிகளும் சுகாதாரப் பணியில் முன்னேற்றம் அடைந்துள்ளன.
81-ல் இருந்து 21-க்கு..
குறிப்பாக உத்திரமேரூர் பேரூராட்சி தென் மண்ட|லத்தில் 108-வது இடமும், மாநில அளவில் 21-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில், 81-வது இடத்தில் இந்த பேரூராட்சி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மாநில அளவில், 472-வது இடத்தில் இருந்த மாங்காடு பேரூராட்சி மட்டும், 616-வது இடத்தில் பின் தங்கியுள்ளது.
முன்னேற நடவடிக்கை
இதுகுறித்து பேரூராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின் ஆய்வில், தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் ஒவ்வோராண்டும் புது யுக்திகளைப் பயன்படுத்தும், தூய்மை நகரங்கள் கவுரவிக்கப்படுகின்றன. இதில், திடக்கழிவு மேலாண்மை, சாலைகளின் தூய்மை, 'ஸ்வச்சத்தா' செயலியில் வரும் புகார் மீதான நடவடிக்கைகள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டு, தர வரிசை வழங்கப்படுகிறது. சில பேரூராட்சிகள் பட்டியலில் பின்தங்கியிருந்தாலும், வரும் காலங்களில் அவையும் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் காண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT