Published : 05 Mar 2019 10:06 AM
Last Updated : 05 Mar 2019 10:06 AM
ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை மறைந்துள்ளது. அதை சரியாகக் கண்டெடுப்பவர் சாதனை படைக்கிறார். திறமையை வெளிக்கொணர்வதற்கான தருணமும், முயற்சியும் அவசியம். அப்படி ஒரு தருணத்தில் தன்னை உணர்ந்து, சாக்பீஸ்களில் சிற்பம் வடிக்கிறார் உதகையைச் சேர்ந்த ஹரிணி.
நுண் சிற்பங்களை சாக்பீஸ் துண்டுகளில் உருவாக்குவதற்கு தனித் திறமை அவசியம். இந்தத் திறமையை வசப்படுத்தியுள்ள ஹரிணி, திருவள்ளுவர், கோயில், தாஜ்மஹால், சதுரங்க விளையாட்டுக் காய்கள், பறவை, வாகனங்கள் என வகைவகையான சிற்பங்களை சாக்பீஸில் உருவாக்கி ஆச்சரியப் படுத்துகிறார்.
சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் சாக்பீஸ் சிற்ப கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்த வகையில், உதகையின் முதல் சாஸ்பீஸ் சிற்பக் கலைஞராகத் திகழ்கிறார் ஹரிணி.“இந்தக் கலையின் தொடக்கம் வேடிக்கையானது” என்றுகூறி சிரிக்கிறார் ஹரிணி. “வகுப்பு போர் அடித்ததால், சாக்பீஸைக் கொண்டு விளையாடினோம். அப்போதுதான், அதில் சிற்பங்கள் வடிக்கும் எண்ணம் உருவானது” என்று வேடிக்கையாகத் தெரிவித்தார். அவரிடம் உரையாடினோம்.
சாக்பீஸ் சிற்பம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
கல்லூரியில் படிக்கும்போது பொருளாதார வகுப்பு மிகவும் போர் அடிக்கும். அப்போது, சாக்பீஸை வைத்து பல உருவங்களை வடிவமைக்கத் தொடங்கினேன். இது பெரிய ஆர்வமாக மாறி, தற்போது சாக்பீஸ் சிற்பத்தை கவனத்துடன், தொழில்முறையாக செய்யத் தொடங்கியுள்ளேன். திருவள்ளுவர், கோயில், தாஜ்மஹால், சதுரங்க விளையாட்டுக் காய்கள், பறவை, வாகனங்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சிற்பங்களை சாக்பீஸில் வடிவமைத்துள்ளேன்.
முதல் கண்காட்சி அனுபவம்?
எனது முதல் கண்காட்சி, நான் பணிபுரியும் வானிலை ஆய்வு மையத்தில் நடந்தது. பல பள்ளி மாணவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, ஊக்கப்படுத்தினர்.
உங்கள் லட்சியம் என்ன?
500 சிற்பங்களை வடிவமைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதுதான் எனது லட்சியம். இதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.
குறைந்த நேரம் மற்றும் அதிக நேரம் எடுத்துக்கொண்ட சிற்பங்கள் என்ன?
குறைந்த நேரத்தில் நான் வடிவமைத்தது மாட்டு வண்டி. ஒரு நாளில் அதை வடிவமைத்தேன். அதேபோல, அதிக நேரம் பிடித்தது உலக அதிசயங்களில் ஒன்றான ரோம் கோலோசியம். இதை உருவாக்க சுமார் ஒரு வாரம் பிடித்தது.
குடும்பம் மற்றும் உங்கள் அறிமுகம்?
அப்பா சுகுமார், திருச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரெக்கார்டு கிளர்க்காகப் பணிபுரிகிறார். அம்மா அனிதா, உதகை சாண்டிநல்லாவில் உள்ள செம்மறி ஆடுகள் அபிவிருத்தி மையத்தில் உதவி கணக்காளராகப் பணிபுரிகிறார். அக்கா தாரணி.
நான் 10-ம் வகுப்பு வரை உதகை சாந்தி விஜய் பள்ளியிலும், 11, 12-ம் வகுப்புகள் காரமடையில் உள்ள தனியார் பள்ளியிலும் முடித்து, கோவை பூ.சா.கோ. கலை, அறிவியல் கல்லூரியில் பி.காம். (கார்ப்பரேட் செகரட்டரிஷிப்) படிப்பை 2017-ல் முடித்தேன். தற்போது, உதகை வானிலை மையத்தில் ஓராண்டு பயிற்சி பெற்று வருகிறேன்.
வேடிக்கையாகத் தொடங்கிய
ஹரிணியின் சிற்ப பயணம், கின்னஸ் புத்தகத்தில் முடிய வாழ்த்தினோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT