Last Updated : 28 Mar, 2019 12:26 PM

 

Published : 28 Mar 2019 12:26 PM
Last Updated : 28 Mar 2019 12:26 PM

"பிரதமருக்கு இப்போது முழு அதிகாரம் இல்லை; மிஷன் சக்தி அறிவிப்பை வெளியிடலாமா?, மோடி தேர்தல் பிரச்சாரமாக்கிவிட்டார்": பீட்டர் அல்போன்ஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பிரதமருக்கு முழு அதிகாரம் கிடையாது, மிஷன் சக்தி அறிவிப்பை தேர்தல் பிரச்சாரதத்துக்கு மோடி பயன்படுத்திக்கொண்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டினார்.

நாட்டு மக்களுக்கு நேற்று ட்விட் செய்த பிரதமர் மோடி,  நண்பகல் 11.45 முதல் 12 மணிவரை முக்கியத் தகவலுடன் உரையாற்ற இருக்கிறேன். தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்களைப் பாருங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் பிரதமர் மோடி எதைப் பற்றி பேசப் போகிறார், என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் எனும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. பிரதமர் மோடி. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மக்களிடம் உரையாற்றியபோதுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதனால், இந்த முறை அப்படி ஏதேனும் அறிவிப்பு இருக்குமா என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை(இஸ்ரோ) மிகப்பெரிய மைல்கல் சாதனையாக, செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சியில் எதிரிநாட்டு செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளதைக் குறிப்பிட்டார். இந்த மிஷன் சக்தி தி்ட்டம் வெற்றிகரமாக செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் தேர்தல் நடத்தை விதமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது பிரதமர் மோடி இதுபோன்ற அறிவிப்புகளை செய்வதை விதிமுறை மீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பீட்டர் அல்போன்ஸ்  "தி இந்து தமிழ்திசை"க்கு (ஆன்-லைன்) பேட்டி அளித்தார்.

தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி மிஷன் சக்தி அறிவிப்பு தேர்தல் விதிமுறை மீறலா?

நிச்சயமாக விதிமுறை மீறல்தான், ஏனென்றால், பிரதமர் மோடி இப்போது முழுமையான அதிகாரத்தோடு செயல்படும் பிரதமர் அல்ல. தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததில்இருந்து, தேசியக் கொடியைக் கூட பிரதமர் பயன்படுத்த முடியாது. ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும்  என்பதற்காக பணியாற்றுகிறாரேத் தவிர முழு அந்தஸ்து பெற்று பிரதமராக பணியாற்ற முடியாது. நிச்சயமாக இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறானது.

தேர்தல் நேரத்தில் அலுவலகங்களில் இருக்கும் பிரதமர், முதல்வர் படத்தைக் கூட எடுக்ககூடிய அளவுக்கும், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளைக்கூட மூடிவைக்க வேண்டிய அளவுக்கும் தேர்தல் விதிமுறைகள் இருக்கின்றன. ஜனநாயகத்தில் அரசுக்கும் காலாவதி நேரம் உண்டு. மருந்துக்கு காலாவதி காலம் இருப்பதைப் போல் அரசுப் பதவிகளுக்கும் காலாவதி காலம் உண்டு

மிஷன் சக்தி அறிவிப்பை யார் வெளியிட்டு இருக்க வேண்டும் ?

மிஷன் சக்தி அறிவிப்பை இஸ்ரோ தலைவர்தான் வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் அதிகாரத்தை பெற்றிருக்கின்ற எந்த நிறுவனங்களை முறையாக பணியாற்ற மோடி அனுமதிப்பதில்லை.

எல்லா அதிகாரமும் தனக்கே என்று நினைத்து செயல்படுகிறார், அது உச்ச நீதிமன்றமோ, நாடாளுமன்றமோ, ரிசர்வ் வங்கியோ, பத்திரிகை சுதந்திரமோ, அவர் தான் நினைத்ததைப் போல்  நடக்க வேண்டும் என்று நினைக்கிறாரே தவிர, அரசியல் சாசனப்படி நடக்க வேண்டும் என்று பிரதமர் நினைப்பதில்லை.

நம்முடைய சில முக்கிய கண்டுபிடிப்புகள் சிலவற்றை நாம் வெளிநாடுகளுக்கு தெரியாமல் வைத்துக் கொள்ளுதல் வேண்டும் அவ்வாறு தெரிந்தால், நம்முடைய அண்டை நாடுகள், நம்மைக்காட்டிலும் நவீனமான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க முடியும், அல்லது வாங்கிடமுடியும். ஆதலால், இதுபோன்ற கண்டுபிடிப்புகளை வெளியாமல் தெரியாமல் வைத்துக்கொள்ளுதல் ராணுவத்துக்கு பலம் சேர்க்கும்.

இதற்கு முன் பிரதமர்கள் மக்கள் முன் தோன்றி உரையாற்றி இருக்கிறார்களா

மிகமிக முக்கியமான காலக்கட்டங்களில் தேசிய பேரிடர் வரும்போது, ராணுவ நடவடிக்கை எடுக்கின்றபோது பிரதமர்கள் நாட்டு மக்கள் முன்தோன்றி உரையாற்றுவது உண்டு. அன்றாட மத்திய அரசில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளை பிரதமரே அறிவிப்பது என்பது, தேர்தல் நேரத்தில் பயன்படும் மலிவான விளம்பர தந்திரம், யுத்தி

அப்போது இந்த அறிவிப்பை தேர்தல் பிரச்சாரத்துக்கான யுத்தியாக மோடி பயன்படுத்திக்கொண்டாரா?

நிச்சயமாக, தன்னுடைய அரசின் மிகப்பெரிய சாதனை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களிடம் பிரதமர் அறிவிக்கிறார். இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் முன் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றிருக்கிறாரா என்பதை அறிய வேண்டும்.

ஏனென்றால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்ற போது, நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றுகின்றார் என்றால், அரசு ஊடகங்களை பயன்படுத்துகிறார் என்றால் தேர்தல் ஆணையத்திடம் முன்அனுமதி பெற்றிருக்கிறாரா என்பதை அறிய வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருக்க வேண்டும்.

 பிரதமர் என்ன பேசப்போகிறார் என்பது குறித்த வரைவு அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி முன் அனுமதி பெற வேண்டும். இவற்றை செய்தார்களா எனத் தெரிய வேண்டும்.

செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை இப்போது தேவையாதானா, செயற்கைக்கோள் அத்துமீறல் நடக்குமா?

இதுபோன்ற தொழில்நுட்பங்களை நாடுகள் செய்யக்கூடாது என்று சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் எல்லா நாடுகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தேவையில்லாமல் இங்குநடக்கும் யுத்தத்தை விண்வெளிக்கு கொண்டு செல்லும் ஆபத்தான முயற்சி. விண்வெளியையாவது யுத்தமின்றி வைத்திருங்கள் என்பதற்காக இயக்கமே நடக்கிறது. விண்வெளியுத்தத்தை நடத்த அனுமதித்தால் எந்த நாடும் அமைதியாக இருக்க முடியாது. இது துணைக்கண்டத்தில் தேவையில்லாத ஆயுதப் போட்டியை ஏற்படுத்தும்.

இப்படி யுத்தப்பதற்றம் நடந்தால், தேர்தல் நேரத்தில் மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று பிரதமர் நினைக்கிறார். தேர்தல் முடியும் வரை யுத்தப்பதற்றம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று கருதுகிறார். ஏனென்றால், புல்வாமா தாக்குதலின் வேகம் மக்கள் மத்தியில் குறைந்துவிட்டது அதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்றால், தன்னை வீரம் மிகுந்த தலைவர் என நினைக்கமாட்டார்களோ என்று அஞ்சித்தான் இந்த அறிவிப்பை மோடி செய்துள்ளதாக நான் நினைக்கிறேன்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x