Published : 15 Mar 2019 12:14 PM
Last Updated : 15 Mar 2019 12:14 PM
மதுரையில் சித்திரைத் திருவிழாவின் தேரோட்டம், எதிர்சேவை நடைபெறும் நாளிலேயே மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் மதுரை போலீஸார் பாதுகாப்புக் குழப்பத்தில் உள்ளனர்.
கூடல், கோயில் நகரம் என்றழைக்கப்படும் மதுரையில் சித்திரைத் திருவிழா என்பது மதுரைக்கு மட்டுமல்லாது தமிழகத்தின் தென்பகுதி மக்களுக்கான முக்கியத் திருவிழா.
இத்திருவிழா சைவ, வைணவ ஒற்றுமையை நிலைநாட்ட நடக்கிறது. இத்திருவிழாவில் மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் போன்ற தென் மாவட்டத்தின் அநேக மக்களும் இதில் பங்கேற்பர்.
ராமநாதபுரம், சிவகங்கை பகுதியில் பலருக்கும் குலதெய்வமாக கள்ளழகர் விளங்குகிறார்.
மதுரை நகரின் தென்பகுதியில் மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளும், வடபகுதியினருக்கு எதிர்சேவை, வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் இறங்கும் வைபவம், பூ பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் மக்களைக் கவரும் விழாக்களாக உள்ளன.
பெரும்பாலும், கடந்த காலங்களில் மக்களவைத் தேர்தல் என்பது மே மாதத்தில் நடந்திருக்கிறது. இதனால் மதுரையின் சித்திரை விழாவுக்கான போலீஸ் பாதுப்பில் பாதிப்பு எழ வாய்ப்பில்லை.
அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரை நகர் எல்லைக்கு வரும்வரை மாவட்ட போலீஸார் பாதுகாப்பில் இருப்பர். சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
மதுரை நகரில் சுமார் 5 ஆயிரம் பேர் திருவிழா பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இவ்வாண்டு சித்திரைத் திருவிழா வழக்கமாக நடந்தாலும், மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே வந்துள்ளது.
சித்திரைத் திருவிழாவின் தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை, தேர்தல் வாக்குப்பதிவு ஒரே நாளில் (ஏப்.,18) நடக்கிறது.
மறுநாள் (ஏப்.,19) மதுரை வடபகுதியின் திருவிழா தொடங்கும். கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை, அதிகாலையில் வைகை ஆற்றில் இறங்குதல் நடக்கிறது.
கள்ளழகர் வைகை இறங்கும் நிகழ்வை காண தென் மாவட்ட மக்கள் முதல் நாளே அதாவது வாக்குப்பதிவன்று கிளம்பி மதுரைக்கு வருவதில் சிக்கல் உள்ளது.
நேர்த்திக் கடன் செலுத்துவோர், குடும்பத்தினருடன் மதுரைக்கு உறவினர் வீடுகளுக்கு வருவோரும் மாலை 5 மணிக்குமேல் புறப்பட்டு வர வேண்டிய சூழல உள்ளது.
தேர்தலா, திருவிழாவா என மக்கள் குழப்பத்தில் இருக்கும் அதே வேளையில் காவல்துறையும் பாதுகாப்புக் குழப்பத்தில் உள்ளது. ஏப்ரல் 18- ல் வாக்குப்பதிவு என்பதால் முதல் நாளே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி, பதற்றமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தலும் சேர்ந்தால் அதற்கும் பணி ஒதுக்க முடியாது.
மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டு இருக்கும். பேருந்து, ரயில் நிலையம், விடுதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பும். இது போன்ற சூழலால் தவிப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். ஆனாலும், சமாளித்தே தீரவேணடும் கட்டாயத்தில் போலீஸார் உள்ளனர்.
பக்தர்கள் கூறியது:
மதுரை சித்திரைத் திருவிழா நேரத்தில் கள்ளழகரை குலதெய்வமாகப் போற்றும் பக்தர்கள் மெட்டை எடுத்தல், மா விளக்கு, திரி எடுத்தல், கள்ளழகர் வேடமிட்டு தண்ணீர் பீய்ச்சுதல் போன்ற நேர்த்திக் கடன்களைச் செலுத்துவர்.
சித்திரைத் திருவிழா என்றாலே, தென் மாவட்டத்திலுள்ள மக்கள் ஒரு நாளுக்கு முன்னதாகவே மதுரையில் குவியத்தொடங்குவர்.18-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடப்பதால் திட்டமிட்டு கிளம்பி வரமுடியாது.
தேர்தலா, குலதெய்வ வழிபாடா என்பதிலும் மக்களுக்கு குழப்பம் இருக்கும். குலதெய்வமே முக்கியம் என, கருதும்போது, ஓட்டுப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. தேர்தல் தேதியை மாற்றியமைக்க பரிசீலிக்க வேண்டும், என்றனர்.
இது தொடர்பாக தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரனிடம் கேட்டபோது, ''தேர்தல், சித்திரைத் திருவிழா இரண்டும் ஒரே நேரத்தில் வந்தாலும், பாதுகாப்பு அளித்தே ஆகவேண்டும்.
ஏற்கெனவே இருக்கும் போலீஸ் எண்ணிக்கையோடு, கூடுதலாக தமிழ்நாடு சிறப்புப் படை (பட்டாலியன்) சில கம்பெனிகள் பெறப்படும்.
எல்லா இடங்களிலும் தேர்தல் நடப்பதால்,பிற மாவட்டத்தில் இருந்தும், போலீஸார் வரவழைப்பதிலும் சிரமம் இருக்கலாம் எதுவாக இருந்தாலும், பாதுகாப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT