Published : 17 Mar 2019 11:58 AM
Last Updated : 17 Mar 2019 11:58 AM
தனது சொந்த ஊரான தளிக் கோட்டை அடங்கியுள்ள தஞ்சை மக்களவைத் தொகுதியில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டவர் அக்கட்சியின் தற்போதைய முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு. ஆனால், தஞ்சை மக்களவைத் தொகுதியில் 8 முறை போட்டியிட்டு, 4 முறை வெற்றிபெற்ற பழநிமாணிக்கம், 2 முறை மத்திய நிதித் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
இதனால் பழநிமாணிக்கத்தின் கைப்பிடியிலிருந்த கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பின்றி, அதிமுகவின் புதுமுக வேட்பாள ராகப் போட்டியிட்ட பரசுராமனிடம், டி.ஆர்.பாலு கடந்த தேர்தலில் தோல்வியடைய நேர்ந்ததாக கூறப்படுவதுண்டு. இதனால் விரக்தியடைந்ததால்தான் வரும் மக்களவைத் தேர்தலில் தஞ்சைக்கு குட்பை சொல்லிவிட்டு ஸ்ரீபெரும்புதூருக்கு டி.ஆர்.பாலு விருப்ப மனு அளித்துள்ளார்.
டி.ஆர்.பாலுவுக்கு எதிராக, கடந்த தேர்தலில் வேலை பார்த்த கட்சி நிர்வாகிகள் பலரும், திமுக தலைமைக்கு நெருக்கமாகிவிட்ட அவரின் ஆசிர்வாதம் கிடைக்காதா என ஏங்கியுள்ள நிலையில், தற்போது பழநிமாணிக்கத்துக்கு எதிராகவே காய் நகர்த்தி டி.ஆர்.பாலுவின் நன்மதிப்பை பெரும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
அதற்காக தஞ்சை தொகுதிக்குப் புதுமுகம் வேண்டும் என கடந்த 10-ம் தேதி நேர்காணலின்போது நடந்த கருத்துக் கேட்பில் நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் கூறி பழநிமாணிக்கத்தை அதிர்ச்சி யடைய வைத்துள்ளனர். கடந்த தேர்தலில் தோல்வியடைய அடிப்படை காரணமாக இருந்த பழநிமாணிக்கத்தை தோற்கடிப்பது, மன்னார்குடி எம்எல்ஏவாக உள்ள டிஆர்பி.ராஜாவின் (டி.ஆர்.பாலுவின் மகன்) எதிர்கால அரசியலுக்கு ரூட் கிளியர் செய்வது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க டி.ஆர்.பாலுவுக்கு திட்டம் போட்டுக் கொடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் முன்வைக் கும் யோசனை இதுதான்.
மறைந்த மன்னை நாராயண சாமியின் பேரன் சோழராஜனை வேட்பாளராக அறிவித்தால் தொண்டர்கள் மத்தியில் அவரை அறிமுகம் செய்வது மிகவும் எளிதாக இருக்கும் என்பதுடன், திமுக தலைமையும் மன்னை குடும்பத்துக்கு மரியாதை செய்ததாகக் கருதுவார்கள்.
அல்லது, மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு போட்டியிடத் தகுதியிருந்தும் டிஆர்பி.ராஜாவின் வரவால் வாய்ப்பு கேட்டு வழங்காத நிலையிலும் ராஜாவின் வெற்றிக்கு 2 முறையும் உழைத்த கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலுவுக்கு வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தற்போதே ரூட் கிளியர் செய்துகொள்ளலாம்.
இவர் ஏற்கெனவே பழநிமாணிக் கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் என்பதால், இதற்கு பழநிமாணிக்கம் தரப்பிலிருந்தும் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்றும் கூறி, டி.ஆர்.பாலுவை அணுகத் தொடங்கியுள்ளனர். இந்தப் பட்டியலில் திருவோணம் முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் நேர்காணலின் போது, பழைய பகையை ஒதுக்கி வைக்க வேண்டும். தலைமையின் முடிவை ஏற்க வேண்டும். வெற்றியை நோக்கி கவனம் செலுத்த வேண்டுமென நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இதன்மூலம், பணம் செலவு செய்யும் தகுதியுள்ள ஒரே வேட்பாளர் பழநிமாணிக்கம் என்று கருதியே இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகக் கருதும் தற்போதைய டி.ஆர்.பாலு ஆதரவாளர்களோ, தஞ்சை தொகுதிக்கும் சேர்த்து தாங்களே செலவு செய்வதாக ஒப்புதல் அளித்து, சீட் வாங்கித் தரவேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் தஞ்சைக்கு பழநிமாணிக்கமா அல்லது புதுமுகமா என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் அதிகரித் துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT