Published : 17 Mar 2019 12:02 PM
Last Updated : 17 Mar 2019 12:02 PM
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக மீண்டும் போட்டியிடும் நிலையில் அக்கட்சி சார்பில் களமிறங்க முக்கிய நிர்வாகிகளின் சிபாரிசுகளுடன் பலர் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கான இத்தொகுதி பின்னர் அதிமுகவின் வசம் வந்தது. 1977-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆலடி அருணா வெற்றி பெற்று இத்தொகுதியில் அக்கட்சியின் கணக்கை தொடங்கி வைத்தார். 1984, 1989, 1991, 1998 தேர்தல்களில் அதிமுக வேட்பாளரான கடம்பூர் ஜனார்த்தனம் தொடர்ந்து வெற்றிபெற்றதன் மூலம் இத்தொகுதியில் அதிமுகவின் பலம் வெளிப்பட்டது.
1999-ல் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட பி.எச். பாண்டியன் வெற்றி பெற்றார்.
அடுத்து 2004-ல் நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதி மீண்டும் காங்கிரஸ் வசம் வந்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட தனுஷ்கோடி ஆதித்தன் 3,70,127 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் அமிர்தகணேசன் 2,03,052 வாக்குகளுடன் 2-வது இடத்தையே பெறமுடிந்தது.
வாய்ப்பான தொகுதி
இதுபோல் 2009 தேர்தலிலும் காங்கிரஸிடம் அதிமுக தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராமசுப்பு 2,74,932 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் அண்ணாமலை 2,53,629 வாக்குகளையும் பெற்றிருந்தனர். கடந்த 16-வது மக்களவை தேர்தலில் அதிமுக மீண்டும் இத் தொகுதியை கைப்பற்றியது. அக்கட்சி வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரன் 3,98,139 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
தமிழகத்தில் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதியாக கட்சி தலைமையாலும், தொண்டர்களாலும் நம்பப்படும் இத் தொகுதியில் இம்முறை அதிமுக மீண்டும் போட்டியிடுகிறது. எதிரணியில் திமுகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதை முறியடித்து வெற்றி பெற வேண்டுமென்றால் அதிமுக தான் போட்டியிட வேண்டும். இதுகுறித்து கட்சி தலைமைக்கும் தெரியும். தொகுதி ஒதுக்கீட்டில் திருநெல்வேலி அதிமுகவுக்கு கிடைக்கும் என்று அக் கட்சியினர் உறுதியாக சொல்கிறார்கள்.
40 பேர் விருப்ப மனு
இத்தொகுதியில் போட்டியிட 40 பேர் வரை விருப்ப மனுக்களை கட்சி தலைமையிடம் அளித்து, நேர்காணலுக்கும் சென்று திரும்பியுள்ளனர். இத்தொகுதியில் நாடார் சமுதாயத்தினரின் வாக்குகள் அதிகம் இருப்பதால் முந்தைய தேர்தல் களில் முக்கிய கட்சிகள் அனைத்தும் அச்சமுதாயத்தை சேர்ந்தவர்களை மட்டுமே தங்கள் கட்சி வேட்பாளராக நிறுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தன. அந்தவகையில் அதிமுகவும் நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரையை வேட்பாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
தற்போது அதிமுக சார்பில் இத்தொகுதியில் களமிறங்க திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏ.கே. சீனிவாசன், தற்போதைய மக்களவை உறுப்பினர்
கே.ஆர்.பி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களை தவிர அதிமுக வழக்கறிஞர் பிரிவிலுள்ள பழனிசங்கர், திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பால்துரை உள்ளிட்டோரும் காய் நகர்த்துகின்றனர். இவர்களில் ஜெரால்டு, ஏ.கே. சீனிவாசன், மனோஜ்பாண்டியன் ஆகியோரில் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோரின் பலத்த சிபாரிசுடன் ஜெரால்டும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப் பேரவை உறுப்பினர் முருகையா பாண்டியன் உள்ளிட்டோரின் சிபாரிசுடன் ஏ.கே. சீனிவாசனும் வேட்பாளராக தீவிர முயற்சி கொண்டுள்ளனர். இத்தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க கட்சி தலைமை யாருக்கு வாய்ப்பு அளிக்கும் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT