Published : 27 Mar 2019 08:56 PM
Last Updated : 27 Mar 2019 08:56 PM
மதுபோதைக்கு 47 சதவீத ஆண்கள் அடிமையாக உள்ளனர். நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு மதுவிற்கும் அரசே அதற்கு பொறுப்பு என ஏன் அறிவித்து தண்டனை விதிக்கக்கூடாது என அரசுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்த வழக்கில் வீராசாமி உட்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில், ”தமிழகத்தில் சொந்த மக்களுக்கு மதுபான விற்பனையை மாநில அரசே நடத்தி அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் 31,750 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதும், மாநில பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் மது விற்பனையால் கிடைப்பது என்பது துரதிருஷ்டவசமானது.
இதுதவிர தேசிய சுகாதார பணிகள் துறை ஆய்வுபடி, 47% ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற செயல்கள் அதிகரித்து வருவதற்கு குடிபோதைதான் காரணமாக இருக்கிறது.
மது கொள்கையில் தமிழக அரசு மாற்றங்களை கொண்டு வராவிட்டால், இதுபோன்ற குற்றசம்பவங்கள் அதிகரிக்கவே செய்யும். மது போதையில் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது.
இந்த குற்ற சம்பவங்களுக்கு மதுவை விற்கும் தமிழக அரசை பொறுப்பாக்க வேண்டும். குற்ற சம்பவங்களில் மாநில அரசை குற்றத்திற்கு உடந்தையாக சேர்த்து தண்டனை விதிப்பதுடன், அபராதமும் விதிக்க முடியும்” என எச்சரித்த நீதிபதி இதுபோன்று அரசை பொறுப்பாக்குவது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT