Published : 14 Mar 2019 03:16 PM
Last Updated : 14 Mar 2019 03:16 PM
18 தொகுதி சட்டப்பேர்வை இடைத்தேர்தலைப் பொறுத்தவரை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் அமமுகவுக்கே அதிக வாய்ஸும் வாய்ப்பும் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பெரியகுளம் தொகுதியில் அமமுகவால் ஓபிஎஸ் அரசியலை அசைக்கும் திராணியில்லை என்றே தெரிகிறது.
மக்களவைத் தேர்தலோடு 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டன.
கடந்த ஆண்டு கட்சி ஆரம்பித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூட மக்களவைத் தேர்தலில் ஒருமித்த கருத்து கொண்ட கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்துவிட்டார்.
ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டபோது டிடிவி தினகரனிடம் இருந்த அரசியல் பரபரப்புக்கும் கட்சி ஆரம்பித்த பின்னர் அவரிடம் இருக்கும் அரசியல் சுறுசுறுப்புக்கும் இடையேயான இடைவெளி கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்ற அளவில் இருக்கிறது.
இந்நிலையில் டிடிவியின் மனசாட்சி என்றே அமமுகவுக்குள்ளும் அரசியல் அரங்கிலும் அழைக்கப்படும் தங்க தமிழ்ச்செல்வனின் செல்வாக்கு குறித்த கள நிலவரத்தை அறிய முற்பட்டபோது எல்லா ரிப்போர்ட்டும் அவருக்கு சாதகமாகவே வருகின்றன.
அட தங்கத் தமிழ்ச்செல்வனா என்று தொலைபேசியில் ஆரம்பித்த தேனிக்காரர் ஒருவர், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதான்னு எங்க ஊரு அதிமுக கோட்டைதாங்க. அதிமுகவில் நின்னு தங்கத் தமிழ்ச்செல்வன் கூட 3 முறை ஜெயிச்சிருக்காரு. இப்ப அவர் அதிமுகவுல இல்லைன்னாலும் அவரு செல்வாக்கு குறையல. ஆண்டிப்பட்டி தொகுதில நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் வந்துடுவாரு. ஒருவேளை அப்பவே வர முடியலைன்னாலும் அடுத்த வாரமாவது வந்துடுவார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும் தொகுதியில அவருக்குதான் மாஸ் இருக்கு. முக்கியப் பிரமுகர்கள், செல்வந்தர்கள், வணிகர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் என எல்லோரும் அவருக்கு ஆதரவுதான். என்ன இந்தமுறை அவரு இரட்டை இலையில நிற்க முடியாது. இருந்தாலும் இங்க அவருக்கு மவுசு குறையல" என்றார்.
அரசியல் நுணுக்கும் அறிந்த ஆண்டிப்பட்டி தொகுதிக்காரர்களும் இதையேதான் சொல்கிறார்கள். தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் வேட்பாளரைத் தேர்வு செய்வதே அதிமுகவுக்கு சவால்தான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
தங்கத்தமிழ்ச் செல்வனின் வாக்கு வங்கி:
ஆண்டு | வாக்கு சதவீதம் |
2001 | 53.78% |
2011 | 48.10% |
2016 | 51.93% |
தேனியின் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதி நிலவரம் இப்படி என்றால் பெரியகுளம் நிலவரம் அப்படியே நேர் எதிராக இருக்கிறது. பெரியகுளம் எம்.எல்.ஏ., கதிர்காமுவுக்கான சாதக நிலை.
டிடிவி தினகரன் அணியில் இருந்தாலும், ஓபிஎஸ் உடன் ரகசியப் பேச்சு, ஆர்.பி.உதயகுமாருடன் ரகசியப் பேச்சு என்றெல்லாம் சர்ச்சையில் சிக்கியவர்தான் இவர். இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும்கூட வெல்வார் என்று சொல்லும் அளவுக்கு இவரது செல்வாக்கும், வாக்கு வங்கியும் இல்லை. வரவிருக்கும் இடைத்தேர்தலில் பெரியகுளத்தில் ஓபிஎஸ் கைகாட்டுபவர் தான் வேட்பாளர் என்பது ஊரறிந்த உண்மை.
ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதி மட்டுமல்ல மற்ற தொகுதிகளிலும் திமுக அதிருப்தி ஓட்டுகள், அதிமுக அதிருப்தி வாக்குகளை, புதிதாகத் தொடங்கிய கட்சியா இல்லை அமமுகவா என்ற குழப்பத்தில் விழும் வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாக டிடிவி இருப்பார் என்று கணிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT