Last Updated : 03 Mar, 2019 09:52 AM

 

Published : 03 Mar 2019 09:52 AM
Last Updated : 03 Mar 2019 09:52 AM

பறவைகளை கண்டு பதறும் சூரிய காந்தி விவசாயிகள்!

உக்ரைன் நாட்டின் தேசிய மலர் என்ற பெருமையைப் பெற்ற சூரியகாந்திப் பூ, உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளால் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்குப் பயன்படுகிறது. சிறுவர்கள் விரும்பி வரையக்கூடிய பூக்களில் சூரியகாந்தி முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பு பரவலாக பெரும்பாலான கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட சூரியகாந்தி, பறவைகளால் தொல்லை, கட்டுப்படியான விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் அதன் சாகுபடிப் பரப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவருகிறது.

திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டும் சூரியகாந்தி பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  வேகமாக விளையக் கூடிய செடி வகையான சூரியகாந்தி 3 அடி முதல் 18 அடி உயரம் வரை வளரக்கூடியது. மூன்று  மாதங்கள் தொடங்கி 6 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி விடுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கொழுமம், தாராபுரம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட இடங்களில் சில விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். சூரியகாந்தி விதைகள் பறவைகள் விரும்பும் உணவாக இருப்பதால், சாகுபடி முழுமையாக கிடைப்பதில்லை. இதனால், கட்டுப்படியான விலை கிடைத்தாலும், இதை சாகுபடி செய்வதில் விவசாயிகளிடையே பெரிய அளவுக்கு ஆர்வமில்லை.

உடுமலை அடுத்த கொழுமம் அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சூரியகாந்தி விவசாயி ரவி கூறும்போது,  "நான் 2 ஏக்கரில் சூரியகாந்தி பயிர்செய்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படுகிறது. அறுவடைக் காலங்களில் பூக்களை தனியாக வெட்டியெடுத்து, கதிரடிக்கும் இயந்திரங்கள் மூலம் விதை தனியாக பிரித்தெடுக்கப்படும். ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவாகிறது. வெள்ளக்கோவில்தான் முக்கிய சந்தை.  மகசூலின்போது கிளிகள் உள்ளிட்ட பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது. இதனால் மகசூல் பாதிக்கிறது. நிறைய விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியில் ஈடுபட்டால், பறவைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

விதைகளைத் தனியாகப் பிரித்தெடுப்பதற்குத் தேவையான அறுவடை இயந்திரங்கள் உடுமலை பகுதியில் தேவையான எண்ணிக்கையில் கிடைப்பதில்லை"  என்றார்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் கூறும்போது, "சூரியகாந்தி விதை வெள்ளக்கோவில் பகுதியில் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.40, ரூ.41 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது.  ஒரே ஊரில் 100 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் இணைந்து சாகுபடி செய்ய வேண்டும். அப்போதுதான்,  பறவைகளால் ஏற்படும் பாதிப்பு குறையும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x