Published : 27 Mar 2019 08:54 AM
Last Updated : 27 Mar 2019 08:54 AM
நாட்டின் சில பகுதிகளில் மதங்களின் பெயரால் மனிதர்கள் மோதிக் கொண்டாலும், மதங்களைக் கடந்து மனிதநேயமே முக்கியம் என்று வாழ்பவர்களும் இங்கு அதிகமுண்டு. இயற்கைச் சீற்றம், பேரிடர்களின்போது மட்டும் இந்த மனிதநேயம் வெளிப்படுவதில்லை. பண்டிகை, திருவிழாக்களின்போதும் மதமாச்சர்யங்களை மறந்து, எல்லாருமே விழாவைக் கொண்டாடி மகிழ்வதும் உண்டு. குறிப்பாக, தமிழகத்தின் பல இடங்களில், இந்து, முஸ்லிம் என்ற மத அடையாளம் கடந்து, மனிதம் என்ற உன்னத உணர்வுடன் இரு மதத்தைச் சேர்ந்த மக்களும், இன்றளவும் உறவு கொண்டாடி மகிழ்வதைக் கண்கூடாக காணலாம். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் என்ற கிராமத்தில், இந்துக்களின் பண்டிகையான பங்குனி உத்திரத் திருவிழாவை, முஸ்லிம் மக்களும் கொண்டாடி, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர்.
ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையத்தில், பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக மஞ்சள் நீராடல் நடைபெறும். இதில் முஸ்லிம்களும் கலந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுடன், மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ வீடுகளில் சந்தனம் பூசுவர். மேலும், இனிப்பு, பழ வகைகளையும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
இந்தாண்டு விழா, கடந்த சில தினங்களுக்கு முன் விமரிசையாக நடந்து முடிந்தது. இதில், ஏராளமான முஸ்லிம் சமூக மக்கள் கலந்துகொண்டனர்.
கைத்தறி நெசவுத் தொழில்!
நுாற்றாண்டைக் கடந்து நடைபெறும் இவ்விழா குறித்து ராசிபுரம் பள்ளிவாசல் தலைவர் டி.கே.உசேன் கூறும்போது, “குருசாமிபாளையத்தில் கைத்தறி நெசவுத் தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைத்தறி நெசவுக்குத் தேவைப்படும் அச்சுகளை, ராசிபுரத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் செய்து வழங்குவர். இதனால், தொழில் ரீதியாக குருசாமிபாளையத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவுத் தொழிலாளர்களான இந்துக்களுக்கும், எங்களுக்கும் இடையே நல்ல அறிமுகம் இருந்து வருகிறது.
அறிமுகம் என்பதைக் கடந்து, ‘மாமா, மச்சான், பெரியப்பா, சித்தப்பா’ என உறவுமுறையாக, எங்களது முன்னோர் காலம்காலமாகப் பழகி வருகிறோம் என்பதே உண்மை. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் குருசாமிபாளையம் கிராம மக்கள் பலர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டனர். அப்போது, எங்களின் முன்னோர் கிராமத்தில் உள்ள வேப்பமரத்தின் கீழ் அமர்ந்து ‘பாத்திஹா ஓதி’, பொட்டுக்கடலை, நாட்டுச் சர்க்கரை வழங்கினர். இதனால், கிராம மக்கள் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்ததாகக் கூறுவர்.
இதற்கு மரியாதை செய்யும் வகையில், கிராமத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு, எங்களை அழைப்பர். நாங்களும் கலந்து கொள்வோம். வெறுமனே வாய் வார்த்தையாக அழைப்பதில்லை. விழாவுக்கு, ஒரு மாதத்துக்கு முன் பழத் தட்டு, சீர்வரிசையுடன் ராசிபுரத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு, குருசாமிபாளையம் கிராம பெரியதனக்காரர்கள் வந்து, விழாவில் பங்கேற்குமாறு எங்களை அழைப்பர்.
மஞ்சள் நீராட்டு விழாவில்...
அவர்களின் அழைப்பை ஏற்று, விழாவின் கடைசி நாளான மஞ்சள் நீராட்டு விழாவில் நாங்கள் கலந்து கொள்வோம். அப்போது கோயிலுக்கு உள்ளே நாங்கள் செல்வோம். மேலும், மேள, தாளம் முழங்க, கோயிலில் இருந்து வெள்ளைக்கொடி ஏந்தியபடி கிராமம் முழுவதும் சென்று, ஒவ்வொரு வீட்டின் முன்பும் மக்களுக்கும் சந்தனம் பூசுவோம். நோய் பாதிப்புகளில் இருந்து விடுபட, இதை மேற்கொள்கிறோம்.
பின், கிராமத்தில் உள்ள பாவடி மைதானத்தில், கோயில் மரத்தின் கீழ் அமர்ந்து முஸ்லிம்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் சந்தனம் பூசி மகிழ்வோம்.
பழம், தட்டு சீர்வரிசை மற்றும் பொட்டுக்கடலை, நாட்டுச் சர்க்கரை கலந்த இனிப்பை இந்து மக்களுக்கு வழங்குவோம். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் விருந்து வழங்குவர். இந்த நிகழ்வுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவுபெறும்.
இதுபோல, ரம்ஜான் பண்டிகையின்போது நாங்களும், குருசாமிபாளையத்தைச் சேர்ந்த மக்களை அழைப்போம். அவர்களும் பண்டிகையின் ஏதாவது ஒரு நாளில் கலந்துகொண்டு, நோன்பு கஞ்சி சாப்பிடுவர். ஏறத்தாழ 150 ஆண்டுகளாக இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மதங்களைக் கடந்து மனிதத்தைப் போற்றும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT