Published : 11 Mar 2019 12:44 PM
Last Updated : 11 Mar 2019 12:44 PM
மக்களவைத் தேர்தலுக்கான ஆரம்பக் கட்டப் பணிகளை அனைத்துக் கட்சிகளும் விறுவிறுப்பாக மேற்கொண்டு வரும் நிலையில் விருதுநகர் தொகுதியில் அதிமுக ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி திமுக தமிழகம் முழுவதும் ஊராட்சிக் கூட்டங்களை நடத்தி அந்தந்தப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து அதைப் பூர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்தது.
விருதுநகர் மாவட்டத்தில், எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் காலியான சாத்தூர் தொகுதியில் கடந்த மாதம் திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தியது. மேலும் மாவட்ட அளவில் அனைத்து பூத் கமிட்டி பொறுப்பாளர்களையும் திரட்டி அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டத்தையும் நடத்தி முடித்தது. இது தவிர தென் மாவட்ட அளவில் விருதுநகரில் திமுக மாநாட்டையும் நடத்தியது.
விருதுநகர் தொகுதியை எதிர்பார்த்திருந்த மதிமுகவும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளைத் தொடங்கி அனைத்துப் பகுதியிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கியது. அதைத் தொடர்ந்து, தேர்தல் நிதி அளிப்புக் கூட்டத்தையும் மதிமுக நடத்தியது. வழக்கம்போல் இந்த முறையும் விருதுநகர் தொகுதியில், தான் போட்டியிடலாம் என வைகோ நினைத்திருந்தார். ஆனால், திமுக கூட்டணியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு நட்சத்திரப் பேச்சாளர் அந்தஸ்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக யாரும் இல்லை என்பதால் மக்களவை, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வைகோவை பிரச்சாரத்துக்காக களமிறக்க திமுக முடிவு செய்தது. அதனால், வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கவும், ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் போட்டியிடவும் திமுக வாய்ப்பளித்துள்ளது.
அமமுகவும் தனது பங்குக்கு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. குறைந்த பட்சம் மாதத்துக்கு ஒரு முறையாவது விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு தனது கட்சியினரை உற்சாகப்படுத்தி ஆதரவைத் திரட்டி வருகிறார் டி.டி.வி.தினகரன். கொடியேற்றி வைப்பது, நிர்வாகிகள் இல்ல விழாவில் பங்கேற்பது என ஏதாவது ஒரு வகையில் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அமமுக மாவட்டச் செயலாளரான எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எதிர்கோட்டை சுப்பிரமணியனும், அதிமுகவால் ஓரம் கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழனும் தங்களது செல்வாக்கை மீண்டும் வளர்த்துக்கொள்ள பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களைக் காட்டிக்கொள்ள தர்ணா, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் மூலம் மக்களைச் சந்தித்தும், தேர்தலுக்கான களப்பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியும் அவ்வப்போது கட்சியினரிடையே கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
ஆனால், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை எதிர்கொள்ள எந்தக் கூட்டமும் நடத்தாமல், பூத் கமிட்டி உள்ளிட்ட குழுக்கள் அமைத்து, பணிகளை விரைவுபடுத்தாமல் வழக்கமான பாணியில் வாக்காளர்களை 'கவனித்து` விடலாம் என்ற எண்ணத்தில் அதிமுக உள்ளது. இதனால் அக்கட்சி தற்போது அமைதி காத்து ஆமை வேகத்தில் செயல்படுகிறது.
இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், மாவட்டச் செயலரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நலத்திட்டங்கள் வழங்குவது, அடிக்கல் நாட்டு விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம் மக்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார். வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் பணி தொய்வின்றி நடைபெறும் என்றனர். கடந்த மக்களவைத் தேர்தலைப் போல இந்தத் தேர்தலிலும் கடைசி நேரத்தில் 70 முதல் 80 சதவீத வாக்காளர்களை வழக்கமான பாணியில் `கவனித்தால்' எளிதாக வெற்றி பெறலாம் என்று கணக்குப் போட்டு அதிமுக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
கருணாநிதியின் தலைமைப் பண்பில் ஸ்டாலினை பொருத்திப் பார்க்க முடியுமா? - தொல்.திருமாவளவன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT