Published : 04 Mar 2019 06:59 PM
Last Updated : 04 Mar 2019 06:59 PM
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 சட்டப்பேரவை தொகுதிகள் கேட்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் புதுச்சிக்கல் எழுந்துள்ளது.
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுகவுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தோளோடு தோள் கொடுத்து இயக்கங்களில் பங்கேற்ற மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகளுக்கு இடம் வழங்குவதில் தொய்வு இருந்து வந்தது.
ஆரம்பத்திலேயே காங்கிரஸுக்கு பாண்டிச்சேரியுடன் சேர்த்து 10 தொகுதிகளை திமுக வழங்கியது. பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையில் தேமுதிக வந்த பின்னர் முடிவெடுக்கலாம் என பேச்சுவார்த்தை தள்ளிப்போனது.
ஆனால் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை இழுபறியில் செல்ல ஒருகட்டத்தில் தேமுதிக கூட்டணி பேச்சை நிறுத்தி மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை திமுக தொடர்ந்தது. தேமுதிக வந்தால் அனைவருக்கும் ஒரு தொகுதி மட்டுமே வழங்குவது என்கிற முடிவில் இருந்த திமுக பின்னர் தேமுதிக வராத நிலையில் அனைவருக்கும் 2 தொகுதிகளை வழங்க முடிவெடுத்தது.
இந்நிலையில் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிதாக சில கோரிக்கைகளை வைத்துள்ளதால் கூட்டணியில் இழுபறி நீடிப்பதாக திமுக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சற்று கூடுதலான கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு இடங்கள் மற்றும் ராஜ்ய சபா ஒன்று மற்றும் சட்டப்பெரவை இடைத்தேர்தலில் 2 தொகுதிகள் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் 21 தொகுதிகளில் தாம் நின்ற பெரியகுளம், பெரம்பூர் தொகுதிகளை வழங்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இது வழக்கமான இடைத்தேர்தலாகப் பார்க்க முடியாது. இது மினி சட்டப்பேரவை தேர்தலாக பாருங்கள் என 2 தொகுதிகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
திமுக தரப்பில் தற்போது இடைத்தேர்தல் தொகுதி குறித்துப் பேசவேண்டாம், மக்களவை இடங்களைப் பற்றி மட்டுமே பேசுங்கள், 21 தொகுதிகளில் ஆதரவு தாருங்கள். சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதுகுறித்துப் பேசலாம் என தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இதுகுறித்து ஆலோசிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு நாளை கூடுகிறது. அதன் பின்னர் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT